தாய்க்கோழி பெரியார் இலக்கியம்
குயில் இதழ்களில் பெரியார் தொடர்பான பதிவுகளைப் 'பெரியார் இலக்கியம்' என்றே பதியம் போட்டுத் தந்துள்ளார் இரா . அறவேந்தன். இவரது ஆய்வும் பதிப்பும் பாராட்டுக்குரியன. பெரியாரைத் தந்தை என்று திராவிடம் கொண்டாடுகிறது என்றாலும், கோழி என்றால் அவர் 'தாய்க்கோழி' தான் என்பதைச் சிறப்பாகச் சுட்டும் வகையில் நூலில் தலைப்பு தலைப்பூவாகவே விளங்கச் செய்துள்ளார்.
கொண்டைச் சேவல்கள் தம்மால்தான் பூமிக்கு விடியல் வருகிறது என்றும் சூரியன் தன் உத்திரவால்தான் உதயமாகிறது என்றும் பகல் கனவுகளோடு பவனி வருகின்றன. தந்தைக் கோழிகளின் 'கூச்சல்'கள் தாங்க முடியாத இன்றைய தமிழ்ச் சூழலில் தாய்க்கோழியாகப் பெரியாரின் பணி தனித்து நிற்கிறது. குஞ்சுகளுக்கான போராட்டம் தொடர்கிறது. பெட்டைக் கோழிகள் முட்டையிடலாம்; தாய்க்கோழிகளே எதிரிகளை முட்டும், மோதும்.
"கோழி'பற்றிய செய்திகளைக் 'குயில்' பதிவு செய்திருப்பது கொள்ளை அழகுதான். பெரியார் இலக்கியம் வாழ வேண்டும் - வளர வேண்டும். அதற்கு அறவேந்தர்களின் ஆய்வுப்பணிகளும் வளம்பெற வேண்டும்.
-காவ்யா சண்முகசுந்தரம்