ராவ் சாகிப் எல்.சி.குருசாமி - சட்டமேலவை உரைகள்
தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்கொண்டும், ஆவணக் காப்பகங்களை நோக்கியும் நடைபயணம் மேற்கொண்டு கவிஞர் மதிவண்ணன் நிகழ்த்திப்பெற்ற போராட்ட முயற்சியில் வெளிவந்துள்ள அரிய ஆவணமிது.
மாண்டேகு - செமஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் அன்று அமைந்த சட்ட மேலவையில் அடித்தள மக்களின் பிரதிநிதியாகப் பங்கேற்று, சமூகநல உரையாடல்களை முன்வைத்தவரும், அளப்பரிய பங்காற்றியவருமான அய்யா எல்.சி. குருசாமியின் இவ்வுரைகளின் வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. பெண்கல்வி குறித்து அவரின் பார்வை பெரியாரியத்தோடும், அம்பேத்கரியத்தோடும் தழுவி நிற்பதைக் கண்டு மனம் நெகிழ்கிறது. இதுபோன்ற ஆவணங்களின் மூலம் பார்ப்பனியத்தால் தலித்தியத்தை ஒரு சாதிக் குடுவையில் அடைத்துவிட முடியாது என்பதை உறுதியாய் சொல்லலாம்.