நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?
ஒரே தரத்தில் ஒரே முறையில் ஒரே கட்டமைப்பில் நாடு முழுவதும் கல்வி முறையும் பள்ளிகளும் இல்லாத நிலையில் பொதுவான நுழைவுத்தேர்வு எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? இந்தியாவில் மாநிலப் பாடத்திட்டங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவப் படிப்பு அனுமதிக்கான நுழைவுத் தேர்வு என்பது எப்படிச் சரியானதாகவும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்? நகர்ப் பகுதிகளில் தெருவிற்குத் தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. நகர்ப் பகுதி மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரத்தில் பெறமுடியும். கிராமப்புற மாணவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப் பயிற்சி பெறவேண்டும். பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குதான் இது சாத்தியம். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்? பல்வேறு மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்டது இந்தியக் கல்வி முறை. இந்நிலையில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இந்நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழில் எழுதலாம் என்று காலம் தாழ்ந்த அறிவிப்பு ஒன்று இருந்தாலும், தமிழில் அதற்கான நூல்கள் இல்லாத நிலையில் வினாத்தாள் மட்டும் தாய்மொழியில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன? இதனால் தமிழக மாணவர்களுக்குப் பயன் என்ன? இது ஒரு ஏமாற்று வேலை அல்லவா?