பாயும்புலி பண்டாரக வன்னியன்
பாயும்புலி பண்டாரக வன்னியன்” என்னும் இந்தச் சுதந்திர வேட்கையை ஊட்டும் வரலாற்றுப் புதினத்தைப் படைத்து - தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
வரலாற்றுப் புதினம் படைப்பது எளிதல்ல எனினும் அது அவருக்குக் கைவந்தகலை. அதற்குரிய வரலாற்றுப் பின்னணியை - நாடு, காலம், அரசியல் சூழல், அண்டை நாட்டு நிலை, மக்கள் வாழ்க்கை முறை, சமயப் பழக்க வழக்கம், கதை மாந்தர் நடமாடும் இடத்தின் இயல்பு முதலான வற்றைப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி - ஆராய்ந்து தெளிந்து, காட்சிகளாகக் கண்டு, படிப்பவர் கருத்தில் படலம் படலமாக விரியும் வண்ணம், எழில் ஓவியமாகத் தீட்டுகின்றார் கலைஞர்.
சங்க காலத் தமிழகத்தின் பெருமைக்குரிய சூழல் விளக்கும் "ரோமாபுரிப் பாண்டியன்”, ஆங்கிலேயர் ஆதிக்கம் தமிழ் மண்ணில் பரவிய காலத்தில் தமிழகத்தின் நிலையைச் சித்தரிக்கம் “தென்பாண்டிச் சிங்கம் ", வழிவழி வந்த நாட்டுப்புறக் கதைகளைக் கொண்டு தமிழ்வீரம் காட்டும் "பொன்னர்-சங்கர்” ஆகிய புதினங்களைப் படைத்த கலை உணர்வு இதனையும் வரைந்துள்ளது.
தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் - ஆதிக்கமும் கால் ஊன்ற இடந்தரக்கூடாது என்னும் இலட்சியத்துடன், அவர்களை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று,அதே கால கட்டத்தில் - இலங்கையில் மண்ணின் உரிமைக் காக்கப் போராடியவனே பண்டாரக வன்னியன்.
பண்டார வன்னி வேந்தன்
படைகண்டால் உடலில் ஆவி
உண்டா போயிற்றா என்றே
ஓடுவார் ஒளிவார் மாற்றார்!
விண்டாலும் சொல்லை மிஞ்சும்
வீரத்தான் தமிழீ ழத்தான்
துண்டாடிப் போட்ட வெள்ளைத்
துரைமார்கள் தலையும் உண்டே!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.