Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிட இயக்கம்

Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

இடைக்காலத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் தென்னகத்தில் வந்தேறிய ஆரிய இனத்தார் பெரும்பாலும் பிராமணச் சந்நியாசிகளாதலின் - தமது வேத மகிமைபேசி, வேள்விப்பலன் கூறி, வேந்தர்களிடத்திலே செல்வாக்கு பெற்று, கட்டளைகளென்று வருணாசிரம தருமப்படியான சத்திரியர்களாக மன்னர்களைக் கற்பித்துத் தாம் அரச குருமார்களாகி, பூசுரர்களாகி, அர்ச்சகருமாகி, வருணதருமத்தைப் புகுத்தி நாட்டு மக்களை எல்லாம் சூத்திரர்களாய்ப் பட்டியலிட்டு ஆதிக்கம் பெற்றனர்.
தென்னகம் சேர்ந்த ஆரியம் - பிராமண வடிவில் மட்டுமே வந்தது; பிற வருணத்தார் வரவில்லை. இங்கு வாழ்ந்திருந்தோரை வருண வாய்பாட்டிற்கு ஆளாக்கி - ஆரியர் அனைவரும் எசமான சாதியாகி, தம் கைப்பாவை ஆக்கிய கடவுள் பெயரால் தென்னக திராவிடர்களை இழி பிறவியாக்கி, அவர்தம் மொழிகளை நீச பாஷையாகத் தாழ்த்தி, தமது வடமொழியைத் தேவ பாஷையாக உயர்த்தி, வரலாறு படைத்திருந்த திராவிட இனத்தையே தமது அடிவருடிக் கிடக்கும் அவலத்திற்கு ஆளாக்கி விட்ட னர்.
ஒருவேளை இது ஆரியரின் திட்டமிட்ட சதி ஆகாவிடினும் அவர்தம் வைதிக மத வழிபாட்டு முறையில், பிராமணர்கள் கற்பித்துக் கொண்டிருந்த பிறவி உயர்வுக் கோட்பாடு - அவர்தம் வேத மந்திர வைதிகக் கோலத்தால் - எழுந்த மாயை நாட்டுமக்களை இணங்கச் செய்திருக்கலாம். விளைவு, தமிழினம் தாழ்ந்தது - திராவிடம் சீரழிந்தது.
இந்த அநீதியான சாதி - வருண முறை சித்தர்கள் பலரால் அவ்வப்போது கண்டிக்கப்பட்டாலும், இறையடியார் சிலரும், கவிஞர்கள் சிலரும் அதனை மறுத்தனர் எனினும், தென்னக மன்னர்கள் ஆதரவில் தழைத்த வைதிகம், சைவத்தையும் - வைணவத்தையுமே வைதிக முறையின் ஆதிக்கத்திற்கு ஆட்படுத்திவிட்ட நிலையினால் - சாதிப்பிரிவு கடவுள் பற்றால் வளர்ந்த சமயப் பிடிப்பால் வேர் விட்டுத் தழைத்து நிலைபெறலாயிற்று. இதன் விளைவாக ஆதிக்கம் பெற்ற ஆரியத்தினால் பயன்பெற்ற பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையும் அதைத் தேடிக் கொள்ளும் முறையும் துறைதோறும் படரலாயின.
அதன் கெடுவிளைவினை உணர்ந்து - நாட்டு மக்களின் உரிமை வாழ்வுக்கு வழிகாண - ஆங்கிலேயர் ஆட்சியினால் வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் சூழ்நிலையே இடமளித்தது.
கடந்த 19-ஆம் நூற்றாண்டு முதலாகத்தான் - தமிழ்மொழி முதலான தென்னக மொழிகளின் தனித்தன்மை, தென்னக மக்களின் தொன்மை வரலாறு, நாகரிகப் பெருமை, கலைகளின் தனிச் சிறப்பு ஆகியவை - மேல்நாட்டு ஆய்வு அறிஞர்களின் நூல்களால் வெளிப்பட்டதால் - தென்னக அறிஞர்களிடம் ஓர் விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படலாயின.
அதன் பயனாகவே சமுதாய உரிமைக்கு வாதிடும் திராவிட இயக்கம் உருக்கொண்டது. திராவிட இயக்கத்தின் வேர்களாக விளங்கியவர்கள் கண்ட எதிர்ப்புகள் பல; போராட்டங்கள் பல; ஏற்ற தியாகங்கள் இணையற்றவை.
அவர்தம் வழியில் சுடர் விட்டு ஒளிர்ந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஊட்டிய உணர்வுடன், அறிஞர் அண்ணா வகுத்த நெறியில் கடந்த அறுபது ஆண்டுகளாக, இனமான உணர்வு போற்றும் இலட்சிய வீரராக நடைபோடுபவர் இந்நாள் கல்வி அமைச்சர் 
பேராசிரியர் அன்பழகன். அவரது அறிவார்ந்த பேச்சாற்றலை - அவரது உரையைப் பலகாலும் கேட்டுள்ள தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் - பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவியுடன், கடந்த 27-04-98 ஆம் நாள், அதன் துணைவேந்தர் டாக்டர் பி.மனோகரன் அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிட இயக்கக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து, பேராசிரியர் ஆற்றிய வரலாற்றுத் தெளிவளிக்கும் உரையினை இந்நூல் வடிவில் வெளியிடுவதன் மூலம், தமிழ் இனத்துக்கு ஓர் கடமையாற்றும் வாய்ப்புப் பெற்றது குறித்து மகிழ்கிறோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.