வைகை நதி நாகரிகம்!
வைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.