வகுப்புவாதம் என்றால் என்ன?
வகுப்புவாதம் அடிப்படையில் ஒரு கருத்தியலாகப் பார்க்கப்படுகின்றது. இந்நூலில் நான் வாதிட்டுள்ளதைப்போல, வகுப்புவாதத்தை மண்ணைக் கவ்வச் செய்து, அடியோடு அழிக்க வேண்டுமானால், மக்கள் மனங்களில் இருந்து வகுப்புவாத எண்ணங்களை வேரோடு கிள்ளியெறிய வேண்டியதும், இதற்கென வகுப்புவாத கருத்தியலுக்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. நமது சொந்த அனுபவங்கள் மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் அனுபவங்களும் நமக்கு இதையே உணர்த்துகின்றன. உதாரணமாக, ஹிட்லர் தன் சுயசரிதையை எழுதியபோதே அவரது இன அடிப்படைவாதக் கொள்கைகள் முழுமையாக இடம் பெற்றுவிட்டன. ‘மெயின் கெம்ப்’ என்ற அந்தப் புத்தகம் ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர் நோக்கம். அவரும் மற்ற வலதுசாரித் தலைவர்கள் போலத்தான் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தனது இன அடிப்படைவாதக் கொள்கைகள் மூலம் தனது கருத்தியல் உள்ளடக்கத்தை அலட்சியப்படுத்துவது எத்தகைய ஆபத்தாக முடியும் என்பதை நிரூபித்து விட்டார். (இதேபோல, இந்த மத வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள, எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ‘தி வி. (The We), வி.டி. சவார்க்கர் எழுதிய ‘இந்துத்துவா’ ஆகிய புத்தகங்களையும், இஸ்லாமிய வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள முகமது அலி ஜின்னாவின் 1937க்குப் பிந்தைய ‘உரைகளையும் வாசிக்க வேண்டும்.)
இதேபோல், கருத்தியல் ரீதியாகத் தோற்கடிக்காமல் இனவாதம், வகுப்புவாதங்களை அகற்ற முடியாது என்று, மற்றொரு உதாரணம் அமெரிக்கா. அங்கு 1864 லேயே ஆபிரகாம் லிங்கனால் அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அங்கு அடிமை – உடைமையாளர்களின் கருத்தியல் தொடர்ந்ததுடன், அங்கு அடிமைகளாக வாழ்ந்த கருப்பின மக்களுக்கு ஏராளமான துயரங்கள் தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டில் குறிப்பாக, 1945-க்குப் பிறகு, கருப்பின மக்களுக்கு மேலும் பல உரிமைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தது. கருப்பினத்தவர் – வெள்ளையர், அறிவு ஜீவிகள் – பொதுமக்கள் என இன ஒதுக்கலுக்கு எதிராக ‘அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடுமையான கருத்தியல் போராட்டங்களுக்குப் பின்னர்தான் இது சாத்தியமாகியது. அந்த நாட்டில் இன ஒதுக்கல் முறை மங்கத் தொடங்கி, கருப்பின மக்களின் சமூக நிலை மேம்படத் தொடங்கிவிட்டபோதும், இன ஒதுக்கலை முற்றிலும் அகற்ற மேற்கொள்ள வேண்டியவை இன்னும் மீதமுள்ளன.
‘இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோவியத் யூனியனில் யூதர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் (anti-semitism) ஒழிக்கப்பட்டதை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். ஜார் ஆண்ட ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிரான இனவெறி கடுமையாகப் பின்பற்றப்பட்டது. இதற்கு எதிராக, கம்யூனிச இயக்கம் போராடியது. இதன் முக்கியத் தலைவர்களில் பலர் யூதர்கள். 1917க்குப் பிறகு, சோவியத் புரட்சி நடந்து புதிய அரசு உருவானதும், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் இதர முக்கியத் தலைவர்கள் பள்ளிகளிலும், ஊடகங்களிலும், கலை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து வடிவங்களிலும் யூத இன ஒதுக்கலைக் கடுமையாகத் தாக்கினர். என்றாலும் அவ்வப்போது நெருக்கடி ஏற்படும் தருணங்களில் வெடித்துக் கிளம்புகிறது, சோவியத் சமூகத்தின் ஒரு சக்தியாக நிலைத்து விட்டது.
துரதிர்ஷ்டமாக, இந்த உண்மையை நமது மதச்சார்பற்ற சக்திகள் போதுமான அளவுக்கு உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாதச் சக்திகளையும், கட்சிகளையும் அரசியல் ரீதியாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால், வகுப்புவாதக் கருத்தியலை அம்பலப்படுத்தவோ, எதிர்க்கவோ இல்லை. வகுப்புவாதக் கட்சிகள் ஒவ்வொரு முறை அரசியல் பின்னடைவைச் சந்திக்கும்போதும் அவர்கள் பெரும் திருப்தி அடைகிறார்கள். ஆனால், உதாரணமாக, 2004 இல் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டபோதும், வகுப்புவாதம் 2004-க்கு முன்பிருந்ததைப் போன்றே இன்றும் வலுவாக நீடிக்கிறது. – கடந்த காலத்திலிருந்து மேலும் சில உதாரணங்களை நோக்கும்போது இந்த அம்சம் மேலும் மேலும் தெளிவாகிறது. – காந்திஜியின் உயிர்த்தியாகம், 1951-52 பொதுத் தேர்தலில் நேரு மேற்கொண்ட வலுவான பிரச்சாரம் ஆகியவற்றின் காரணமாக 1950களின் தொடக்கத்தில் தேர்தல் ரீதியாக வகுப்புவாதக் கட்சிகள் பலவீனமடைந்திருந்தன. தேர்தல் ரீதியாக அவர்கள் இருப்பு காலியானது. நாடாளுமன்றத்திலும் இடதுசாரிக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இதைப்பார்த்து நேருவும், இடதுசாரிகளும் பெரும் திருப்தி கொண்டனர். ஆனால், 1959 இல் ஜபல்புர் கலவரம் மூலம் வகுப்புவாதிகள் தமது சுயரூபத்தைக் காட்டினர். 1960-62 காலகட்டத்தில் ஏற்பட்ட இந்திய-சீன நெருக்கடி மற்றும் போர்களின் விளைவாக வகுப்புவாத சக்திகள் மங்கத் தொடங்கியபோது மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினர். இதேபோல, 1984 தேர்தலில் பாஜக ஒன்றிரண்டு இடங்களைக் கூடப் பெற முடியவில்லை . ஆனால், வகுப்புவாத கருத்தியல் தொடர்ந்து வளர்ந்தது. 1980களின் தொடக்கத்தில், பா.ஜ.க. மேற்கொண்ட காத்மண்டு முதல் கன்னியாகுமரி வரை கங்கை நீர் யாத்திரை முயற்சி வெற்றிபெறவில்லை . 1984 இல் இராமர் பிறந்த இடப்பிரச்சினை தொடர்பாக உ.பி.யிலும், பீகாரிலும் சிறு சிறு ரத யாத்திரைகளை மேற்கொண்டது. இவற்றை மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. ஆனால், இந்த யாத்திரைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1988 இல் ராமர் பிறந்த இடம் தொடர்பாக அகில இந்திய அளவில் ஒரு ரத யாத்திரை மேற்கொள்ளும் துணிச்சலை பாஜக பெற்றது. வகுப்புவாதக் கருத்தியல் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்றபோதும் நாடு இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளது.
ஒருவகையில், வகுப்புவாதக் கருத்தியலை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே, 1947இல் தேசப் பிரிவினை ஏற்பட்டது. 1936-37 தேர்தலில் அகில இந்திய அளவில் 3 விழுக்காடு இடங்களும் சட்டமன்றங்களில் 11 விழுக்காடு இடங்களும் முஸ்லீம் லீக் பெற்றிருந்தது. இந்த வகுப்புவாதம் தோற்றத்தை அப்போது மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. 1945 இல் இது அச்சுறுத்தத்தக்க அளவு வலுவாக வளர்ச்சியடைந்தபோதுதான் அவர்கள் ஆழ்துயலில் இருந்து விழித்தனர். ஆனால், இது காலம் கடந்த விழிப்பு.
இதேபோல, 1940களிலேயே பஞ்சாபிலும், வட இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால், இது குறைந்த அளவிலான மக்கள் கவனத்தையும், அரசியல் வெளியையும் கொண்டிருந்ததால், ஒரு அழிவு சக்தியாக இது வளர்ச்சியடையும் என்று பார்க்கப்படவில்லை. 1946-47ஆம் அண்டுகளில் ஏற்பட்ட இனப்படுகொலைகளிலும், தொடர்ந்து காந்திஜி படுகொலையிலும் இந்த சக்திகளின் கைவரிசையைக் காண நேர்ந்தபோது, எத்தகைய அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். வளர்ந்துவிட்டது என்பதை நாடு உணர்ந்தது.
தற்காலத்திலும் மூன்று உதாரணங்களைக் காட்டலாம். 2002 இல் குஜராத் படுகொலைகளைக் கண்டு ஒட்டுமொத்த நாடே நிலை குலைந்தது. இந்த படுபாதகச் செயல்களுக்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று சரியாகக் குற்றமும் சாட்டியது. ஆனால், இதன் மூல வேர் மோடியிடம் இல்லை . மாறாக, நீண்ட காலமாக, 1970 களிலிருந்தே குஜராத் சமுதாயம் வகுப்புமயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவுகளை அறுவடை செய்தவர் மட்டுமே மோடி.
இதேபோல, 1950களின் தொடக்கத்திலிருந்தே பஞ்சாபில் வகுப்புச் சாயம் தோய்க்கப்பட்டு வந்துள்ளது. 1980 கள், 90 களில் பிந்தரன்வாலேக்கள் உருவானது, வகுப்புக் கலவரங்கள் வெடித்தது ஆகியன முந்தைய பஞ்சாபில் வகுப்புவாதக் கருத்தியல் பரவத் தொடங்கியதன் கூட்டு விளைவுகளே.
இறுதியாக, கேரளாவைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 15-20 ஆண்டுகளில் இங்கு பா.ஜ.க. ஒரு இடம்கூட பெற முடிந்ததில்லை. ஆனால், அங்கும் நடுத்தர மக்கள் மனதில் வகுப்புவாதம் பரவி வருவதையும் நாம் அலட்சியப்படுத்தப் போகிறோம் என்றால், இதற்கு நாமே பொறுப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.