வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
வகுப்பு, வகுப்புவாதம் ஆகியவற்றை வரையறுத்துச் சொல்லுவது சிரமம். இனத் தன்மை, தொழில், வாழும் இடம், ஜாதி கடைசியாக மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் வகுப்பு உருவாகலாம். ஆனால் வகுப்புவாதம் எனும் பொழுது நாம் மத சமூகங்களையே மனதில் கொள்கிறோம். இந்தியாவில் சமீப காலங்களில் சீக்கிய மத அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான தனித்தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் பொதுவாக இந்தியாவில் வகுப்பு வாதமானது இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகியோரிடையேயுள்ள உறவின் தன்மையிலேயே பார்க்கப்படுகிறது.
அடிப்படையான மத நம்பிக்கைகள், சடங்குகள், நடைமுறைகள், ஆகியன இயற்கை ஏற்படுத்தும் தடங்கல்களை மனிதன் வெற்றி கொள்ளவும், சமூகப் பிரச்சினைகளில் சகமனிதன் ஏற்படுத்தும் பிரச்சினைகளை வெற்றி கொள்ளவு மான தொடர்ச்சியான போராட்டத்தில் தோன்றி வளர்கின்றன. இயற்கை தரும் சிரமங்களை அறிவுப்பூர்வமாக விளக்குவதற்கு மக்கள் சிரமப்படும்போது, அவர்கள் தெய்வீகமான, மத நம்பிக்கையான விளக்கங்களில் இறங்குகின்றனர். இவை பெருந்திரளான ஆண் பெண் கடவுள்களை உருவாக்கியுள்ளன. நமக்கு அனுகூலமான அல்லது எதிரான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மாதிரியான தெய்வீக சக்திகளே ரிக் வேதத்தில் காணப்படுகின்றன.
மதங்களை அவை தோன்றிய சமூகச் சூழல்களிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க இயலாது.
காலந்தோறும் மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாக மதக் கொள்கைகள் ஆகும் போது மதத்தைச் சீர்திருத்தவும், மதத்தைப் பின்பற்றுவோருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை மாற்றவும் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆரிய சமாஜம், பிரார்த்தனை சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவை தற்காலத்தின் முக்கிய உதாரணங்கள். இவற்றில் ஆரிய சமாஜ இயக்கம் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. வேதக் கல்வியிலிருந்து விலகி வைக்கப்பட்ட சூத்திரர்கள், குழந்தை மணம், வாழ்க்கை முழுவதும் விதவை நிலை ஆகிய கொடுமைகளுக்கு இரையானோரின் கொடுமைகளை நீக்க அது இயக்கம் நடத்திற்று. விக்கிரக வழிபாட்டையும் இவ்வழிபாட்டினால் தோன்றிய தீமைகளையும் அது எதிர்த்துப் போராடியது.
ஆனால் இன்றோ இந்து சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த மூலவர்களின் ஆர்வங்கள் இஸ்லாம் எதிர்ப்புப் போராட்டங்களாகத் தரந்தாழ்ந்து போகும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமானது என்னவென்றால், உலகத்தின் எல்லா ஞானமும், சாதனைகளும் வேதங்களில் உள்ளன என்ற தான்தோன்றித் தனமான கருத்தால் அது தாக்குதல் தொடுக்கவும் தொடங்கியுள்ளது. விவரங்களையும் தடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வரலாற்றாளர்கள் இம்மாதிரிப் பிரச்சாரங்களை ஜீரணித்துக் கொள்ள இயலாது.
பண்டைய நூல்களில் பஞ்சமின்றிக் கிடக்கின்ற உண்மைச் செய்திகளாலும், விவரங்களாலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடா விட்டால் அது எழுத்தறிவு பெற்ற மக்களை மத வெறியர்கள் ஆக்கி விடும். அவர்களோ சாதாரண மக்களிடம் மத வெறி என்னும் விஷக் கிருமியைப் பரப்பி விடுவார்கள். இடைக்காலத்தில் சிலுவை யுத்தமும், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்தாண்டுகளுக்கும் இடையில் நடந்த போர்களும் இம்மாதிரி விஷப்பிரச்சாரங்களும் இதர காரணங்களும் சேர்ந்ததினால் ஏற்பட்ட பைத்தியக் காரத்தனமான போர்களே. தற்காலத்தில் இந்தியாவில் இம்மாதிரியான விஷமப் பிரச்சாரம் தேச ஒருமைப்பாட்டுக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது.
இந்து மதத் தலைவர்களின் வறட்டுத்தனமான சகிப்பின்மைக்கு அயோத்தியின் இடைக்கால வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டலாம். அவுரங்கசீப் ஆட்சி செய்யும் வரை அவருடைய வலிமையான கை அயோத்தியின் விவகாரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் 1707-ல் அவர் இறந்த பின், அங்குள்ள சைவ சன்னியாசிக் கூட்டத்துக்கும், வைணவ வைராகிக் கூட்டத்துக்கும் இடையே பயங்கரமான மோதல்கள் நிகழ்ந்ததை நாம் காணுகிறோம். இருவரிடையே உள்ள பிரச்சினையின் அடிப்படையே மத முக்கியத்துவமுள்ள இடங்களையும் புனித யாத்திரீர்களின் கட்டணங்களையும் காணிக்கைகளையும் யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதே! இந்த இரண்டு கூட்டத்தினருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலை விவரித்து 1804-1805-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு மூல நூலின் ஒரு பகுதியை இங்கே அப்படியே தருகிறேன்:
“ராமர் பிறந்த தினத்தன்று ஜனங்கள் கோசலாபுரிக்குப் போய் அங்கே கூடினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை யாரால் விவரிக்க இயலும்! அந்த இடத்தில் சன்னியாசி உடையில் எண்ணிக்கையிலடங்காத வலுவான போர் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். சடைமுடி தரித்திருந்தார்கள். கை கால்களில், திருநீறு பூசியிருந்தார்கள், யுத்தத்தில் மகிழ்ச்சி கொள்ளும் போர்வீரர்கள் அவர்கள். எண்ணிக்கைக்கோ கணக்கில்லை. வைராகிகளுடன் அவர்களுக்கு போர் மூண்டது. வைராகிகளால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. போர்த் தந்திரம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் சன்னியாசிகளை நோக்கிப் போனது ஒரு தவறு. வைராகி உடை துயரத்தின் அடையாளமாயிற்று. வைராகியுடையணிந்திருந்தவர்கள் சன்யாசிகளைத் தாண்டி ஓடினார்கள். அவத்பூர் வெறிச் சோடிற்று, வைராகியுடையணிந்தவர்களைக் கண்டபோது அவர்கள் (சன்யாசிகள்) பயங்கரமான அச்சுறுத்தினார்கள், அவர்களுடைய அச்சுறுத்தலால் எல்லோரும் அச்சமடைந்தார்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் ரகசிய இடங்களில் மறைந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வைதீக அடையாளங்களையும் மறைத்துக் கொண்டார்கள். யாருமே தங்கள் அடையாளத்தைக் காட்டவில்லை (ரகுநாதபிரசாதின் ஸ்ரீமகராஜ சரித்திரம், பக்கம் 42; ஹான்ஸ் பேக்கரின் அயாத்தியா, கார்னிங்னன், 1986, பக்கம் 149-இல் எடுத்துக் காட்டப்பட்டபடி).
இடைக்கால இந்து மதத் தலைவர்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மை என்னும் புனைச்சுருட்டை வெளிப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட பகுதியே போதுமானது.
1980-ல் உத்தர பிரதேசத் தொல்பொருள் துறையினரால் பெரிதும் சிறிதுமாகக் கிட்டத்தட்ட 6000 கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ராமபக்தர்களுக்கு எப்போதும் சுதந்திரம் உண்டு. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.