தோள்சீலைப் போராட்டம்
தோள்சீலைப் போராட்டம் - கொல்லால் எச்.ஜோஸ்
காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருந்தவர்களை மேலும் ஒடுக்கவும் அவர்கள் எழும்பி விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்ததே ஆடையிலும் ஆதிக்க வெறி. தாழ்ந்த சாதி என்று பிறப்பால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு பெண்களுக்கு மேலாடை அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆணும் பெண்ணும் முட்டுக்குக் கீழே இடுப்புக்கு மேலே ஆடை உடுக்க அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.
இவை தென் திருவிதாங்கூர் ஆதிக்க வெறியின் உச்சம்.
பெண்களை மீண்டும் தாழ்த்துவதன் மூலம் இன்னும் அவ்வினத்து மக்களை இழிவு படுத்தி ஒடுக்கலாம் எனும் நோக்கம். "எவர்கள் இந்நாட்டின் சரித்திரத்தால் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின் சரித்திரத்தைத் திரும்ப எழுதுவார்கள்" எனும் மாமேதை அம்பேத்கரின் வாக்கு இன்றைக்கு தென் திருவிதாங்கூர் பகுதியான குமரியில் வலுவாக எழுதப்பட்டு விட்டது எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சாதியால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தவர்கள் எழுந்த வரலாற்றை, வாழ்வு முழுவதும் தலை முறை தலைமுறையாய் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் திருப்பி அடித்த வரலாற்றை படிக்கப் போகிறோம். இதைப் படிப்பதன் நோக்கம் தெரிந்து கொள்வதன் அவசியம், ஒரு காலத்தில் இப்படி ஒரு சமுதாயம் இருந்திருக்கிறது என்பதை உணர்வது. உணர்ந்து விட்டு அன்றைக்கு நீங்கள் எங்களை இப்படியா நடத்தினீர்கள் என்று அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல மாறாக நாம் ஒருகாலத்தில் இப்படி இருந்திருக்கிறோம்.
இதெத்தனை பெரிய அநியாயம், கொடுமை, பாவம், பாதக செயல்.
பிறப்பால் நாமெல்லாம் சமம் எனக்கு மேலும் யாருமில்லை எனக்கு கீழும் யாருமில்லை என்பதை உணர வேண்டும். இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தும் எண்ணம் தப்பித்தவறி கூட நம்முள் வந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட வழக்கங்களின் எச்சங்கள் நம் முன்னோர்களிடமிருந்து வழி வழியாய் நம்மிடம் வந்து கொண்டு இருந்தாலும் அவ்வழியில் நாம் வழுக்கி விழுந்துவிடக்கூடாது. நாம் ஒன்றைப் படித்துத் தெளிகையில் நம் அறிவு விசாலப்படும் விரிவடையும். சக மனிதர்களைச் சாதியால் மதத்தால் பிரித்துப்பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும், வர வேண்டும்.