நீதிக் கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?
ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றுவதற்கு முன்னர் மனுதர்மம் தன் செல்வாக்கை, இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசர்களிடம் பெற்றிருந்தது. எனவே பார்ப்பனல்லாதார் இந்நாட்டில் கல்வி பெற முடியாமல் பாமரர்கள் ஆயினர்:அறிவு வாய்க்கப்பெறாத இவர்கள் பார்ப்பனீய வலையிற் சிக்கி மதத்திற்கு அடிமைப்பட்டு ,அதன் காரணமாகப் பார்ப்பனர்க்கு அடிமைப்பட்டுச் சிந்திக்கும் திறனற்ற வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.இவ்வாறு கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த தென்னாட்டுச் சமுதாயங்களுக்கும் தாழ்த்தப்பட்டோரின் நிலை பெரிதும் வருந்தத்தக்கதாக இருந்தது.பாமரத்தன்மையிலிருந்து பார்ப்பனரல்லாதாரை மீட்க அவர்களுக்குக் கல்வி உடனடியாகத் தரப்பட வேண்டியிருந்தது.அவர்கள் பார்ப்பனரால் அழுத்தி வைக்கப்பட்டதிலிருந்தும் எழுப்பப்பட வேண்டியிருந்தது;மதத்தின் பேரால் மூடநம்பிக்கை, தன்மானக் குறைவு என்ற படுகுழிகளில் பார்ப்பனரால் அமிழ்த்தப்பட்டுக் கிடந்த இம்மக்களுக்குத் தன்மான வாழ்வும் தரப்பட வேண்டியிருந்தது.