நீர் கொத்தி மனிதர்கள் - எழுத்தாளர் அபிமானி (Author)
நீர் கொத்தி மனிதர்கள் - எழுத்தாளர் அபிமானி (Author)
எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தலித்துகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதே ‘நீர் கொத்தி மனிதர்கள்’ காட்சிப்படுத்தும் நிதர்சன உண்மை.
தலித்துகளான பொன்னாபரணமும், அவள் புருசக்காரன் பிச்சையா மற்றும் அவர்களின் தெருக்காரர்களுமே ‘நீர் கொத்தும் மனிதர்களுடன்’ போராடும் முன்னணிப் படையினர். தலித்துகள் உழைக்கும் வர்க்கத்தினர்... மீண்டு வர முடியாத வறுமையின் வாரிசுகள். மேல்சாதிக்காரர்களின் காடுகளில் பாடுபட்டுத்தான் தங்கள் சீவனத்தைக் கழிக்கவேண்டிய கஷ்டமான வாழ்க்கை அவர்களுக்கு. அடுத்தத் தெருக்களில் வசிக்கும் இஸ்லாமியர்களும் ஏகதேசம் இவர்களைப்போலத்தான் ஏழைகள் என்றாலும், சமூகப் படிநிலையில் தாங்கள் உயரத்தில் நிற்பதாக நினைத்தார்கள். காட்டு வேலைகள் முடிந்து அந்திக் கருக்கலில் வீட்டுக்கு வந்த தலித் பெண்கள் அடுப்பில் உலையேற்றும் அவசரத்தில் நீருக்காகக் குடங்களோடு ஊர்க் கிணற்றுக்கு வந்தால், அப்போதுதான் அங்கே இஸ்லாமியப் பெண்கள் திரண்டு வந்து நின்று தடுதலைப்பண்ணிக் கொண்டிருந்தார்கள். எசகுப்பிசகாய் தலித் பெண்களின் தேகங்களோ குடங்களோ இஸ்லாமியப் பெண்களின் தேகங்களிலோ உடைகளிலோ உரசிவிட்டால் போதும், தீட்டுப் பட்டுவிட்டதாகக் கொதித்துப்போய் தலித் பெண்களுடன் சண்டைக்கு வந்தார்கள். பதிலுக்கு தலித் பெண்களும் அவர்களுடன் மல்லுக்கட்டித்தான் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியதிருந்தது.
தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கவே ஊராட்சி நிர்வாகத்தால் தெருக்களின் மத்தியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக் கட்டப்பட்டு, கிணற்றுக்குப் பக்கத்தில் குழாய் வைத்தும் கொடுக்கப்பட்டது. அங்கேயும் தீண்டாமைத் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை. இஸ்லாமியப் பெண்ணொருத்தி எடுத்தேறி வந்து நின்று பொன்னாபரணத்தின் மகளை அறைந்துவிட, மறுநாள் தலித் பெண்கள் திட்டம்போட்டு எதிராளிகளை அடித்துத் துவைத்தார்கள். விவகாரம் மாவட்ட ஆட்சியரிடம் போனது. இஸ்லாமியரின் வீடுகளில் அவர்களின் சொந்தச் செலவில் குழாய்கள் வைத்துக்கொள்ள உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகே தலித்துகள் அலப்பரையில்லாமல் நின்று தண்ணீர் பிடித்துக்கொள்ள முடிந்தது.
அதே வேளையில் இஸ்லாமியக் குடியிருப்பின் மேற்குப் பக்கம் சாதி இந்துகள் பலர் சன்னம்சன்னமாய் வீடுகள் கட்டிக் குடியேறி வந்திருந்தார்கள். சாதி இந்து பெண்களும் அந்தக் குழாய்க்குத்தான் நீர்ப் பிடிக்க வரவேண்டிய நிலைமை. அவர்களும் தலித் பெண்களிடம் மல்லுக்கட்டத் துவங்கினார்கள்... தீண்டாமைச் சனியன்தான் காரணம். சாதி இந்து பெண்களையும் எதிர்கொண்டு தாக்குவதைத் தவிர வேறு வழி அறியாதிருந்த தலித் பெண்கள் பொன்னாபரணத்தின் வீட்டில் திரண்டு நின்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
தண்ணீர், மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதைத் தலித்துகளுக்குக் கிடைக்காமல் செய்வதன் வாயிலாகவே ஆதிக்கச் சாதியினர் – அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் - தங்கள் அதிகாரத்தைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். அதனால்தான் ‘எங்கள் மக்களின் தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத இந்தியா என் நாடே இல்லை’ என்றார் புரட்சியாளர் அம்பேத்கர்.
தலித்துகள் ஆதிக்கச் சாதிகளுடன் மல்லுக்கு நின்றே தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கவேண்டியதிருக்கிறது. அத்தகைய சமரசமற்றப் போராட்டங்கள்தான் ‘நீர் கொத்தி மனிதர்களி’டமிருந்து தலித்துகளுக்கு விடுதலையையும் நிம்மதியையும் பெற்றுத் தருகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.