மகான் ஸ்ரீ நாராயண குரு
அண்மைக் காலத்தில் நம்மிடையே தோன்றி வாழ்ந்து சாதனைகள் பல புரிந்த நராயண குரு, புத்தர் பெருமானின் வழியில் மக்களுக்குப் பல அறிவுரைகளை வழங்கிப் பெரும் புகழ் பெற்றதோடு நம் மக்களுக்கு நல்ல மன அமைதியையும் தந்தவராவார்.
அன்பிற்கும் அருமையான உயர் பண்பிற்கும் குறைவில்லாத் தென்னகத்தில், அதிலும் திருவிதாங்கூர் மண்ணில், திருவனந்த புரத்தையடுத்துள்ள ஊர்தான் செம்பழந்தி என்னும் ஊராகும். இந்த ஊர் நாராயண குருவைப் பெற்றுக் கொடுத்ததால் இப்போது பெருமையுடன் திகழ்கிறது.
நல்ல மக்களைப் பெற்றுச் சிறப்பதால் பெற்றோர் மகிழ்வதைப் போலப் புகழ் பெற்றவர்கள் பிறப்பதால் அவர்கள் பிறந்த ஊரும் புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை .
இயற்கை வளம் பொலிந்தும் மலிந்தும் காணப்படும் கேரளத்தில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் சிறந்த பண்டிகையாம் ஓணம் நாளில் தான் இந்த மகான் பிறந்தார்.
வயல்கள் நிறைந்த பகுதியிலுள்ள கிராமமான செம்பழந்தியில், 1854-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தெட்டாம் நாள் மாடன் ஆசான், குட்டியம்மை தம்பதியருக்கு அருமை மகனாகப் பிறந்தார்.