திராவிடத்தாய்
உலக மொழிகளுள் தலைமையானவற்றுள் தமிழும் ஒன்றெனினும், “பல்குழுவும் பாழ்செயும் உட்பகையும்” தமிழகத்திலிருந்துகொண்டு, தமிழின் பெருமையைப் பிற நாடுகள் மட்டுமன்றித் தமிழ்நாடும் அறியாதபடி, அதனை மறைத்து வருவது மிக மிக இரங்கத்தக்கதொன்றாம். ஆராய்ச்சியாளரோவெனின், ஓரிருவர் நீங்கலாகப் பிறரெல்லாம், பிறநாட்டுச் செய்திகளாயின் மறைந்த வுண்மையை வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட வுண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆயினும், கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒருநாள் திகழ்ந்து தோன்றுவதுபோல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. தமிழே திராவிடத்தாய் என்பது மிகத் தெளிவயிருப்பினும், 1891ஆம் ஆண்டிலேயே, "கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்” என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திட்டமாய்க் கூறியிருப்பவும், ஆராய்ச்சியின்மையாலோ, கவலையின்மை யாலோ, துணிவின்மையாலோ, தமிழ்ப்புலவர் எடுத்துக் காட்டாததினால், தமிழின் திரவிடத்தாய்மை பொதுமக்களால் அறியப்படாதிருப்பதுடன், தமிழ் ஒரு புன்சிறு புதுமொழியினும் தாழ்வாகக் கருதப்படுகின்றது.