சங்கத் தமிழ்
கலைஞர், கவிஞர், மூதறிஞர் மு. கருணாநிதி அவர்களின் "சங்கத் தமிழ்"
"சங்கத் தமிழ்'' என்னும் நூல், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான 'கவி - தை' நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம் வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல், பட்டுச் சொல்லும் பான்மையால் பாடல்களாயின.
சங்க காலம் என்பது, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். இன்றுள்ள உலக மொழிகள் பலவற்றில், இலக்கியம் என்பதே எட்டிப்பாராதிருந்த காலம் அது. நம்முன்னோர், அந்நாளிலேயே சங்கமாகக் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தனர். இன்றும், என்றும், மறந்து போய்விடலாகாத, உயிர்த்துடிப்புள்ள செய்திகளைச் செம்மை சிவணிய மொழியில் சொற்படங்களாக்கி, நாம் எக்காலத்தும் நுகர்ந்து மகிழும் நல் உடைமைகளாக நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர். 'சங்கு' தமிழகம் அறிந்த, கண் கவரும் கடற் பொருளாகும். உள் குவிந்து, அமைந்த உலகம் நலியனைத்தை யும் ஒருங்கு திரட்டிக் கொண்டு ஓம் என்னும் மூல ஒலியை உண்டாக்கும், வடிவம் அது. பேரறிஞர் பலர் ஒன்று கூடி, உள் குவிந்து ஒன்றி நின்று, ஓசை நயம் பூண்ட தமிழால் என்றும் நிலைத்திருக்கக் கூடிய மொழி ஓவியங்களைப் படைத்தளித்த நிறுவனமே 'சங்கம்' என்பது.