மொழிப் போராட்டம்
மொழிப் போராட்டம் MOZHI POORATTAM , Doctor navalar R.Nedunchezhiyan , டாக்டர் நாவலர் ஆர்.நெடுஞ்செழியன்
இந்தி அல்லது இந்த்வி என்ற சொல் ஒரு தனிப்பட்ட மொழியின் பெயரல்ல என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். முகம்மதிய படையெடுப்புக்கள் வட இந்தியாவிற்குள் புகுந்ததும். வெளிநாட்டு மொழிகள் வட இந்தியாவில் நுழைந்தன. வெளிநாட்டு மொழிகளினின்றும் வடஇந்திய மொழிகளைப் பிரித்துக் காட்டுவதற்காக வட இந்திய மொழிகளனைத்திற்கும் தரப்பட்ட பெயர் இந்தி அல்லது இந்த்வி என்பதாகும். அயல் மொழிகள், அயல் மொழிகளல்லாதவை என்ற பிரிவில், தமக்குள் எவ்வளவோ மாறுபட்டிருந்த போதிலும் வட இந்திய மொழிகள் அனைத்தும் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டு இந்தி அல்லது இந்த்வி என்ற பெயரால் அழைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, தென்னாட்டுக்கு. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற பல பிரிவினர் வந்தபோதிலும், அவர்களனைவரும் அய்ரோப்பியர் என்றோ பரங்கிகள் என்றோ ஒரே பொதுப் பெயரால் அழைக்கப்பட்டது போல, ‘இந்தி’ என்ற சொல் வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுப் பெயராகத் தரப்பட்டது.