தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு
இந்நூல் இன்றைய கட்டாயத் தேவை!
"உண்மை" இதழின் நிருவாக ஆசிரியரும், சிறந்த ஆய்வாளரும் எழுத்தாளரும் கருத்தாளருமான அருமைத் தோழர் மானமிகு மஞ்சை வசந்தன் அவர்கள் சிறந்த தருக்கவாதி. சான்றாவணங்களோடு தனது எழுத்துகளின்மூலம் வாய்மைப் போரில் எழுத்துலகில் ஈடுபட்டு வெல்லும் ஆற்றலாளர்.
'அர்த்தமற்ற ஹிந்துமதம்' என்ற அவரது அரிய மறுப்பு நூல் மறுப்பு இலக்கியங்களில் முன்வரிசையில் அசைக்க முடியாதபடி வாசகர்களால் அமர்த்தப்பட்டுள்ள நூல்.
அப்படிப்பட்ட தோழர் மஞ்சை வசந்தன், காவிக்கட்சியைச் சேர்ந்த ஒருவர், கோணிப்புளுகன் கோயபெல்ஸையும் தோற்கடிக்கும் வகையில், மநுசாஸ்திரத்தை உயர்த்தி, மயக்க பிஸ்கட்டுக்குத் தேன் தடவுவதுபோல் எழுதியுள்ள "குற்றவாளிக் கூண்டில் மநு" என்ற நூலுக்குத் தக்க சான்றுகளோடு "தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளி மநு" என்று மறுப்பு நூல் எழுதி, பொய்ம்மையை, திரிபைத் தோலுரித்துத் தொங்கவிட்டிருக்கிறார்.
ஒரு மறுப்பு நூல் எப்படி கருத்துக் களஞ்சியமாய் தருக்க அடிப்படையில் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டான நூல்.
பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மநு தர்மத்தை அரசியல் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திவிடுவர் என்ற ஆபத்தான நிலை இன்று உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு விழிப்பூட்ட இந்நூல் கட்டாயத் தேவையாகும். எனவே, காலம் கருதி வெளிவரும் இந்நூலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
- கி.வீரமணி,
தலைவர். திராவிடர் கழகம்