எந்திர அறிஞன்
மொழிபெயர்ப்பு, கூகுள் மேப், வீட்டுக்கு உணவு வரவழைப்பதற்கான செயலி போன்றவை வழியே நாம் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை நுகரத் தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் அலைபேசி, கணினி போன்ற கருவிகளையும் கடந்து, இன்னும் கூடுதலான தளங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித குலத்துடன் உறவாட உள்ளது. மனிதனைப் போலவே சிந்திக்கும் திறனை கணினிக்கு அளிப்பதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. அதைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடலை இந்நூல் நிகழ்த்துகிறது.
செயற்கை நுண்ணறிவுக்கு வழிவகுத்த முந்தைய முயற்சிகள், அதில் ஏற்பட்ட சறுக்கல்கள், இறுதியில் அந்த தொழில்நுட்பத்துக்கு அறிஞர்கள் வந்தடைந்தது. இனியும் உள்ள சவால்கள் என ஒரு பயண விவரிப்புபோலச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கணினி அறிவியல் சார்ந்த விளக்கங்களால் வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடாத விதத்தில் எளிமையான நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 1956இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பனிப்போருக்கு இடையே 'Artificial Intelligence என்கிற இதே பெயரில், மனிதச் சிந்தனை வாய்ந்த கணினியை உருவாக்க முனைந்த வரலாறு சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நூலின் ஆசிரியரான வினோத் ஆறுமுகம், இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருபவர். 'எந்திர அறிஞன்' ஆன செயற்கை நுண்ணறிவின் நன்மை. தீமை ஆகிய இரண்டையும் உணர்ந்து செயல்பட்டால், மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் பெருகும் என்கிற அவரது நம்பிக்கை கட்டுரைகளில் ஒலிக்கிறது.