சமூகத் தளத்தில் பெரியார் திரு.வி.க பங்களிப்பு
சுயமரியாதை கொள்கையை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் தந்தை பெரியார். சன்மார்க்க இயக்கத்தை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் திரு.வி.க அவர்கள்.
இந்த இரு தலைவர்களும் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பை ஒப்பாய்வு செய்து விவரிக்கிறது இந்த நூல்.
பெரியாரும் திரு.வி.க அவர்களும் பார்ப்பனர் அல்லாத தலைவர்களாக இருந்தாலும் வெவ்வேறு அமைப்புகளில் செயல்பட்டாலும் தமிழ்ச் சமூகத்தில் சாதி ஆதிக்கத்தை, சாதியக் கொடுமையை, பார்ப்பனியத்தை, மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள். அதேபோல் தமிழ் மொழிக்காக பெரியார் முன்னெடுத்த அனைத்து முயற்சிக்கும் தோள் கொடுத்து துணை நின்றவர் திரு.வி.க அவர்கள்.
இந்த இருவரின் சமூகப் பங்களிப்பை, சமூகப் பார்வையை, சமூகச் செயல்பாட்டினை ஆராய்ந்த ஆய்வாளர் ஆ.செந்தமிழ்க்கோதையின் முயற்சியில் ''சமூகத் தளத்தில் பெரியார் திரு.வி.க அவர்களின் பங்களிப்பு" என்ற ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால அரசியல் தொடங்கி, பார்ப்பனரல்லாத அரசியலில் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கும், பெரியாரின் அரசியல்- குடும்பச் செயல்பாடுகளை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது ஆகையால் பெரியாரை, திரு.வி.க அவர்களை அறிந்து கொள்ள நினைக்கும் அனைவருக்கும் இந்த நூல் விரிவான தகவலைத் தரும்.