Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - அணிந்துரை-2

தலைப்பு

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு

எழுத்தாளர் அ.வேலுச்சாமி
பதிப்பாளர்

சீதை பதிப்பகம்

பக்கங்கள் 488
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.500/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/veezhchiyuratra-thamizhinam-ezhuchipettra-varalaru.html

 

அணிந்துரை-2

'சில நூற்றாண்டுகளை ஒரு குப்பிக்குள் அடக்குவது' (Putting centuries into capsules) என்று, பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் ஏற்படுத்திய புரட்சியைப் பற்றி குறிப்பிடுவார். இந்த மண்ணில் திராவிட இயக்கம் ஆற்றியிருக்கும் ஒரு நூற்றாண்டு பணி, 5000 ஆண்டுகளாகப் புரையோடிப்போன சாதி மத பாலின வேறுபாடுகளைக் கொண்ட ஒரு அநாகரீகத்தை ஒரு நூற்றாண்டிலேயே துடைப்பதற்குப் பயன்பட்டு வரும் பணியாகும். திராவிட இயக்கம் பிறந்த 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய இயங்கிய இயக்கங்களில் (இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லீம் லீக், இந்திய பொதுவுடைமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ்.) தேசியம், மதம் உள்ளிட்ட எல்லைகளையும் தடைகளையும் தாண்டி, மானுட விடுதலை என்ற முழக்கத்தை முன் வைத்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம். 'கடவுளை மற; மனிதனை நினை', 'மானமும் அறிவும் மனிதருக்கு அழகு' போன்ற பெரியாரின் வரிகளும், 'மானிட சமுத்திரம் நானென்று கூவு' என்ற திராவிடக் கவி பாரதிதாசனின் கவிதையும், 'சர்வதேசிய சகோதர தத்துவம்' (Universal Brotherhood) என்ற அம்பேத்கரின் வார்த்தை பிரயோகமும் திராவிடத் தத்துவத்தின் அடிநாதங்கள். அப்படிப்பட்ட பணியை உலகில் வேறெங்கும் எந்த இயக்கமும் இவ்வளவு விரைவாகச் செய்ததில்லை.

உலக வரலாற்றில் அடிமை முறை - ஆதிக்க முறை என்பது புதிதல்ல; அவைகளுக்கு எதிரான குரலும் புதிதல்ல! ஆனால், இந்த தேசத்தில் தான் அடிமை முறை மிகக் கவனமாகப் பல்வேறு படிநிலைகளைக் கொண்டு, பிறப்போடு முடிச்சுப் போடப்பட்டு நிறுவனமாக (Institution) கண்ணுக்குத் தெரியாமலே இயங்குகிற வல்லமை பெற்றுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 95 சதவீத மக்களை படிப்பறிவில்லாதவர்களாகவும், 20 சதவீத மக்களை தற்குறிகளாகவும் நாகரீகத்திற்கு வெளியிலும் வைத்திருக்க சாதிமுறையைத் திணித்து, அதில் நெடுங்காலம் வெற்றி (!) பெற்ற சமூ கமாகவும் இங்குள்ள சமூகம் இருந்தது. அண்ணல் அம்பேத்கர் இதைக் குறிப்பிடும் போது "உலக வரலாற்றில் ஓர் அறிவார்ந்த சமூகம் தன் சக மக்களை தற்குறித்தனத்திலும் ஏழ்மையிலும் வைத்துக் கொள்ள, தங்கள் அறிவை விபச்சாரமாக்கிய இன்னொரு சமூகம் இந்தியாவில் பிராமண சமூகத்தைத் தவிர வேறெங்கும் இல்லை " (No intellectual class in the world has prostituted its intelligence to invent a Philosophy to keep its fellowmen in a perpetual state of ignorance and poverty as the brahmins have done to India) என்றார். இந்திய தேசத்தில் பெரும்பான்மை மக்களின் இன்றைய ஏழ்மைக்குக் காரணம் சாதிய முறையே ஆகும். தாழ்த்தப்பட்டோரின் உரிமையில் மார்க்சியத்தின் தேவையை வலியுறுத்தும் மராட்டிய சிந்தனையாளர் திரு. சரண்குமார்லிம்பாலே, தனது தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள்' எனும் நூலில், "நாம் தீண்டத்தகாதவராக இருப்பதால் தான் ஏழையாக இருக்கிறோம். இல்லையென்றால் எல்லா ஏழைகளும் தீண்டப்படாதவர்களாகவே இருப்பார்கள். எனவே, தீண்டாமையின் வேர்கள் ஏழ்மையில் இல்லை. ஏழ்மையின் வேர்கள் தான் தீண்டாமையில் தங்கி இருக்கின்றன" என்று குறிப்பிடுவது வேறு பல பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதி ஏழைகளுக்கும் பொருந்துவதே.

இந்த அடிப்படையில்தான் திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதில் எல்லா நிலைப்பாடுகளையும் எடுத்தது. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில்,

  • மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன், அதனை ஆதரிக்கின்ற மதம், பேதம், சாஸ்திரம், புராணங்களை பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாது என்றும்;
  • வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும், சமுதாயத்துறையில் காணப்படுகின்ற பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்ற ஆட்சேபகரமான பிரிவு களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்;
  • மனித நாகரிகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லா பொதுச் சாலைகள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், கோயில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களை தட்டுத்தடங்கலின்றி அனுபவிக்க சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொண்டு வரவேண்டு மென்றும் தீர்மானிக்கிறது.

என்பவை முக்கியமானவைகள். இந்த இலட்சியங்களை அடைவதற்கு, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பிராமணர் அல்லாதோர் அறிக்கை', டி.எம். நாயரின் 'ஸ்பர்டெங்' உரை ஆகியவை பின்புலமாகவும், 1944இல் திராவிடர் கழகத்தின் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வலுசேர்க்கும் அரணாகவும் விளங்கின. பின்னாளில் தி.மு.கழகமாகப் பரிணமித்து முகிழ்த்த அரசியல் இயக்கம், பேரறிஞர் அண்ணா தலைமையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலும், அரசியல் நிர்வாகம், பொருளியல், சமூகத் தளங்களில் ஆற்றியிருக்கும் சாதனைகள் எண்ணிலடங்காதவை.

  • தமிழ்நாடு பெயர் மாற்றம்
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்;
  • கைரிக்சா ஒழிப்பு;
  • பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை;
  • ஆதி திராவிடர்களுக்குக் கான்கிரீட் வீடு;
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் சட்டம்;
  • பெரியார் நினைவு சமத்துவபுரம்;
  • மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் மறுவாழ்வு;
  • உள்ளிட்ட சமூகப் புரட்சிகளும்,
  • பேருந்துகள் பொதுவுடைமை;
  • முழு மின்மயமாக்கல்;
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்;

போன்ற பொருளியல் சார் புரட்சிகளும் அரங்கேறின.

அரசியலில் மாநில உரிமைகளைக் காக்கவும், மத்திய அரசின் திட்டங்களைக் கூடுதலாகப் பெறவும் வழிவகை செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, இந்திய அளவில் மண்டல் பரிந்துரைகளின்படி, அகில இந்திய அளவில் ஒதுக்கீடு என பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய இயக்கம் திராவிட இயக்கத்தின் அரசியல் நீட்சியான - தி.மு.க. பெரியார், அண்ணா எனும் இருபெரும் தலைவர்களை தன் சுவாசப் பைகளில் இருத்தி, அவர்களின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த தலைவர் கலைஞரின் மறைவு இயக்கத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு எனினும்; அந்த இழப்பை ஈடுகட்டும் பெருந்தோள்களை தளபதி ஸ்டாலின் வடிவில் இவ்வியக்கம் பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறைக்கு இந்தத் தகவல்களையும், தரவுகளையும் கொண்டு செல்லும் நல்ல நோக்கில், நல்லாசிரியர் திரு. அ.வேலுச்சாமி அவர்கள் தொகுத்துள்ள 'வீழ்ச்சியுற்ற தமிழினம் - எழுச்சி பெற்ற வரலாறு' என்ற இந்நூல் அரிய அறிவுப் பெட்டகமாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என கூக்குரலிடும் மந்த புத்திக்காரர்களின் பொய்ப் பிரச்சாரத்திலிருந்து நம் இனம் மீள, இந்நூல் படைக்கலனாக இளைஞர்களுக்கு உதவிடும் என நம்புகிறேன். நூலாசிரியரின் இப்பெரும் முயற்சியைப் பாராட்டி அவரை வணங்கி மகிழ்கிறேன்.

வெல்க அவர்தம் எழுத்துப்பணி!

                                                                                                                      அன்புடன்,

01-11-2018                                                                                                                                                           (ஆ. இராசா)

சென்னை

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு