Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அணிந்துரை

90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே.ஆனைமுத்து. அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள தவங்கி, கொள்கையில் சாயம் வெளுத்து முடங்கிவிடக் கூடும். ஆனால், ஆனைமுத்துக்கு வயது கூடக் கூட கொள்கை உரம்பெற்றது. அப்படிப்பட்ட ஆனைமுத்து எழுதிய கட்டுரைகள் மொத்தமாக 15 தொகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

அறநெறி அடிக்கற்கள், தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டம், விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு, நாத்திகர் போர்வாள், மார்க்சியப் பெரியாரியம், இயக்கம், அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழீழ விடுதலை, காலப்பதிவுகள், பெரியாரியல்... என்ற பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு காலவரிசைப்படி இந்தக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.

ஆனைமுத்துவின் அரசியல் அடிநாதமாக அமைந்தவை இரண்டு கருத்துக்கள். ஒன்று, ஒடுக்கப்பட்டோர் விடுதலை. அதற்காகவே தொடக்கம் முதல் இன்று வரை இடைவிடாமல் பேசி வந்துள்ளார். சமுதாயத்திலும் அரசியல் அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் சமநிலை பெறாதவர்கள்தான் இந்தியச் சமூகத்தில் 95 சதவிகிதத்துக்கும் மேல் வாழ்கிறார்கள். அவர்களின் குரலாக ஆனைமுத்துவின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எந்த சாதியை அடிப்படையாக வைத்து கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டார்களோ அதையே அந்த வாய்ப்பை அடையும் வழியாக மாற்றியது இடஒதுக்கீடு தத்துவம். அதற்காக அந்த இடஒதுக்கீடு மட்டுமே சமூகத்தை முழுமையாக முன்னேற்றிவிட முடியாது என்ற யதார்த்தத்தையும் ஆனைமுத்து சொன்னார். இந்த இடஒதுக்கீட்டை வைத்து சாதிப் பிளவை அதிகப்படுத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் ஆனைமுத்து கண்டித்தார். 'அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர வேண்டும்’ என்பது ஆனைமுத்துவின் உன்னத லட்சியமாக இருந்தது.

இன்னொன்று... மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் பகை சக்தியாக இல்லாமல் நட்பு சக்தியாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆனைமுத்து. பெரியாரை நிலப்பிரபுத்துவவாதியாக மார்க்சிஸ்ட்களும், மார்க்சியர்களை வறட்டு இயக்கத்தவர்களாக பெரியாரிஸ்ட்களும் ஒதுக்கியபோது ஒன்றிணைப்பை வலியுறுத்திச் செயல்பட்டவர் இவர். அவரால்தான் இன்று இரண்டு தரப்பினரும் இணக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இப்படி தத்துவ ரீதியாகவும் போராட்டங்களின் மூலமாகவும் தனது பங்களிப்பைச் செய்த ஆனைமுத்துவின் எழுத்துக்களை மொத்தமாகப் படிக்கும்போது பெரியாரின் அசைக்கமுடியாத வித்து இவர் என்பதை உணரமுடிகிறது.

- புத்தகன்

நன்றி:விகடன்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு