திருவாருர் கே.தங்கராசு நினைவலைகள்
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்... ஒரு தனிமனிதனின் வரலாறல்ல. அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறு! 1947 ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப்பணியாற்றி, கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் வரலாற்றைத் தொகுக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால், ஓராண்டுக்கு முன்புதான் அவர் ஒப்புதல் தந்தார்.
பெரியாரின் கொள்கையைப் பரப்பிட, இடையறாது உழைத்து போது தான் பட்ட துயரங்களையும், கழகத்தினரோடு பணியாற்றுகையில் உண்டான மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
சொந்த வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை பெரியளவில் சொல்ல மறுத்துவிட்டார். தன்னுடைய நினைவலைகள் இந்த சமுதாயத்திற்கு, வருங்கால இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டுமே தவிர, என் சுயபுராணம் பற்றிய தம்பட்டம் தேவையில்லை என்பதில் உறுதியோடு இருந்தார்.
அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் கூட தன்னைப் பற்றிய செய்தி தூக்கலாக இருந்தால் அது தற்பெருமையாகிவிடும் என்றும் சில நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு, நூற்றுக்கணக்கான சம்பவங்களில் இதுவொரு சம்பவம், அவ்வளவுதான் என்றும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் தந்தை பெரியாரைப் பற்றியும், கழகத்தைப் பற்றியுமே தன் நினைவுகளில் பதிந்த செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்.
எந்த ஒரு வரலாற்று உண்மையும் தகுதியுள்ளதாக இருந்தால் அது எப்படியும் வெளிவந்தே தீரும். அதை யாராலும் மறைக்க முடியாது என்று திருவாரூர் கே. தங்கராசு அவர்கள் சொல்லியதோடு, அதில் அழுத்தமான நம்பிக்கையோடு இருந்தார்.
எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக, சமுதாயத்திற்காக உண்மையோடு உழைத்த கொள்கையாளர்களின் வரலாற்றை எந்த சக்தியாலும் மறைத்துவிட முடியாது என்பதை வரலாறு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. வரலாற்றின் பக்கங்கள் அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
திருவாரூர் கே.தங்கராசு அய்யா அவர்களின் வரலாறு பெரியார் இயக்கத்தின் வளர்ச்சிக்கு, தமிழினத்தின் மானமீட்புக்கு, பகுத்தறிவு எழுச்சிக்கு எந்தளவிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை படிப்போர்க்கு இப்புத்தகம் உணர்த்தும்.
திருவாரூர் கே.தங்கராசு அய்யா அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட அவரது நினைவுகளை ஒளிப்பதிவு செய்து அதை எழுதி அவரிடம் படித்துக்காட்டி அவர் சொன்ன திருத்தங்களின்படி மாற்றி அமைத்தோம். இது போல் மூன்றுமுறை அவரிடம் படித்துக் காட்டினோம். வார்த்தைக்கு வார்த்தை அவருடைய ஆலோசனையின்படியே இப்புத்தகத்தைப் பதிவு செய்திருக்கிறோம். மேலும், அவர் எழுதிய வரலாற்று நாயகன் நூலிலிருந்து சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த மூத்த தொண்டர்களின் வரலாற்றை நாங்கள் பதிவு செய்து வெளியே கொண்டுவந்தபோது எங்களுக்கு வழிகாட்டி, ஊக்கப்படுத்தி உற்றதுணையாக இருந்து வருகின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் திருவாரூர் கே.தங்கராசு அய்யா அவர்களின் நினைவுகளையும் உடனே வெளியிட வேண்டுமென்று எங்களைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.
திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் முன்னிலையில் இப்புத்த கத்தை வெளியிட எண்ணிச் செயல்பட்டபோது, யாரும் எதிர்பாராத நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. அவருடைய காலத்திலேயே வெளிக் கொண்டு வரமுடியவில்லையே என்கிற வேதனை மனதிற்குள் அரித்துக்கொண்டே இருக்கிறது.
திருவாரூர் கே.தங்கராசு அய்யா அவர்களின் படத்திறப்பு நடைபெறும் சமயத்திலேயே அவரது நினைவலைகளையும் வெளியிட்டு விடுவதென முடிவு செய்து குறுகிய காலத்தில் இப்புத்தகத்தைக் கொண்டுவருகிறோம்.
திராவிடர் இயக்க வரலாறான இப்புத்தகத்தை வெளியிடுவதில் முழுஆர்வத்தோடு முனைப்புக்காட்டிய கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களுக்கும்,
எங்களுடைய நெருக்கடிக்கு முகம் கொடுத்து, முழு ஈடுபாட் டோடு, நேர்த்தியான வடிவமைப்போடு இந்நூலை தயார் செய்து கொடுத்த உடுமலைப்பேட்டை ரவி அச்சகத்தாருக்கும் நன்றி.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: