Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (1916)

முழு அறிக்கையையும் PDF வடிவில் இங்கே பெறலாம்!

பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (1916)

சென்னையில் 20.11.1916-ல், மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும், தகுதியும், செல்வாக்கும் உடைய பிராமணரல்லாத பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். பிராமணரல்லாத பெருமக்கள் முன்னேற்றத்திற்காக, செய்தித்தாள்கள், வெளியிட வேண்டுமென்றும், அவர்கள் உரிமைகளைக் காப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றை அமைக்க வேண்டுமென்றும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க ஆங்கிலம், தமிழ், தெலுங்கு முதலான மொழிகளில் நாளிதழ்கள் வெளியிடுவதற்காக தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டு வியாபார நிறுவனம் தொடங்கப்பெற்றது; தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது.

தென்னிந்திய மக்கள் சங்கம் கீழ்க்கண்ட கொள்கை அறிக்கையைப் பிராமணரல்லாத மக்களுக்கு வெளியிட்டது. அது சங்கச் செயலாளர் ராவ்பகதூர் பி. தியாகராசச் செட்டியார் அவர்கள் பெயரால் வெளிவந்தது.

 

கொள்கை அறிக்கை

இந்திய சுய ஆட்சி இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மாகாணத்திலுள்ள முக்கியமான பல பிராமணரல்லாத வகுப்பினரின் கொள்கை என்ன, என்பதைத் தெளிவாக வரையறுத்து அறிவிக்க வேண்டிய நிலை இப்பொழுது தோன்றியுள்ளது. மேலும் தற்காலம் அரசியலில் இவர்களுக்குள்ள நிலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டியது இன்றியமையாததாகி விட்டது. இம்மாநிலத்தின் மக்கள்தொகை 4 1/2 கோடி ஆகும். அதில் 4 கோடிக்குக் குறையாதவர்கள் பிராமணரல்லாதவராவர். வரி செலுத்துவோர்களில் பெரும்பான்மையோரும் அவர்களேயாவர். மேலும் குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள், விவசாயிகள் ஆகியோரும் பிராமணரல்லாதவரேயாவர். சென்னையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்கு கொள்ள உரிமை இருந்தும் அவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லை. மக்களிடையே அவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் அவர்கள் பயன்படுத்தவில்லை. எல்லாம் கட்டுப்பாடாக நடைபெறும் இக்காலத்தில் தங்களுடைய உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவோ, அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் தங்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வதைத் தடுக்கவோ அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுடைய சார்பில் உண்மையை வெளிப்படுத்துவதற்கு அவர்களிடம் பத்திரிகைகளும் இல்லை. 15 லட்சம் பேர்களே உள்ள பிராமணர்களின் நிலையைக் கவனிக்கும் போது, இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

 

அரசாங்க அலுவல்கள்

தற்போது, சென்னை எக்சிகியூடிவ் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு சர். அலெக்சாண்டர்கார்டியூ, 1913-ல் பொதுப் பணிக்குழுவின் முன், சில சான்றுகளை அளிக்குங்கால்; இந்த மாகாணத்தில் பிராமணர் பிராமணரல்லாதாரின் நிலை எவ்வாறுள்ளதென்பதை விளக்கமாகக் கூறியுள்ளார். பிராமணரல்லாதாருக்காகப் பரிந்து பேச வேண்டுமென்று அவர் கூறவில்லை. இருந்த நிலையை விளக்கினார். இந்தியன் சிவில் சர்வீஸ்க்கென, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில், பிராமணர்களே முழுதும் வெற்றிபெறுகின்றனர் என்றார். பிராமணர்களைப்பற்றிக் குறிப்பிடவந்த அவர் அவர்களை “மிகச்சிறிய தனித்து வாழும் ஜாதியினர்” என்கிறார். 1892 முதல் 1904 வரை நடைபெற்ற போட்டித்தேர்வுகளில், வெற்றிபெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள் ஆவர்; அது 100-க்கு 95 என்ற விகிதமாகும்.

கடந்த 20 ஆண்டுகளில், மைசூர் மாகாணத்தில், மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளில் பிராமணர்கள் 85% இடத்தைக் கைப்பற்றினர். சென்னை மாகாணத்தில், உதவிப் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டபோது, அதே 20 ஆண்டு காலத்தில், பிராமணர் 17 பேராகவும், பிராமணரல்லாதார் 4 பேராகவும் எடுக்கப்பட்டனர். கணக்குத் தணிக்கைத்துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதேமாதிரி முடிவே இருந்தது. சென்னை மாகாணத்தில், உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்க்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதார்க்கு 30 இடங்கள்; ஏனைய முகமதியர், இந்திய கிறிஸ்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலானவர்களுக்குக் கிடைத்தன. மற்றொரு வியப்பு என்ன எனில், போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும் கூட ஆட்சிகளை நியமிப்பதில் பெரும் பகுதி, பிராமணர் கையில்தான் இருந்தது என்பதாகும்.

இவ்வாறு சர். அலெக்சாண்டர் கார்டீயூ குறிப்பிட்டுவிட்டு, மேலும் குறிப்பிடுகிறார்.

“1913 - இல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களுக்குப் பிராமணர்கள் 93 இடங்கட்கும், பிராமணரல்லாதார் 25 இடங்கட்கும், இந்திய கிறிஸ்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் எஞ்சிய இடங்கட்கும் நியமிக்கப்பட்டனர்.” இந்தப்புள்ளி விவரங்களிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் இந்தியாவில் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வு என்பது பெரும்பாலும், முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு இருந்தது என்றும், பிராமணரல்லாதார்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது வெளிப்படையாகின்றது என்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சென்னை அரசிற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் என்ன நிலை இருந்து வருகின்றது என்பதை சர். அலெக்சாண்டர் குறிப்பிடவில்லை. அங்கும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகின்றது. இதுதவிர அதிகாரிகள் தங்கள் மனம் போல் நியமிக்கும் கீழ்நிலை உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால் அங்கும் பிராமணர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரியவரும்.

இப்பொழுது அரசாங்க அலுவல்களின்நிலைமையைத் தெரிந்துகொள்ள நாம் புள்ளி விபரங்களைப் பார்க்கவேண்டாம். இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் மிகவுயர்ந்த பதவிகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுநரின் ஆட்சிக் குழுவிற்கு இந்தியர்களும் நியமிக்கப்படலாம் என்று முடிவு செய்தபின் மூன்று பேர்கள் வரிசையாக நியமிக்கப்பெற்றனர். அதில் கடைசி இருவர் பிராமண வழக்கறிஞர்கள். ஐந்து இந்திய உயர்மன்ற நீதிபதிகளில் நால்வர் - அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் - அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப்பெற்றனர். 1914-ல் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்து அதில் ஒரு பிராமணரை நியமித்தனர். ரெவினியூ போர்டின் இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர். அரசாங்க அலுவலர்களிலிருந்து மாவட்டக் கலெக்டர்களாக இருவர் நியமிக்க வேண்டிய பொழுது பிராமணர்களே நியமிக்கப் பெற்றனர்.

 

பொது நிறுவனங்கள்

அரசாங்க அலுவல்களில் காணப்பட்ட நிலையே நகரவை, மாவட்டக்கழகம் முதலிய நிறுவனங்களிலும் இருந்து வந்தது. பிராமண வாக்காளர்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில் பிராமணரல்லாதார் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. பிராமணரல்லாத வாக்காளர்கள் எல்லாரும் ஒற்றுமையாய் ஒருவரை ஆதரிப்பது கிடையாது. ஆனால் பிராமணர்கள் யார் போட்டியிட்டாலும், பிராமணர்களையே ஆதரிப்பர்.

சென்னைப் பல்கலைக்கழக இந்திய உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களாயிருந்தபடியால், பல்கலைக் கழகத்திலிருந்து, சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப் பதில், பிராமணரல்லாதார் எப்போதும் வெற்றிபெறுவது இல்லை. இதனால் எத்துணைத் தகுதியுடையோராயிருப்பினும் பிராமணரல்லாதார் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை. போட்டியிட நேர்ந்தால், ஆங்கிலேய உறுப்பினர்களின் ஆதரவு கொண்டே வெற்றி பெற முடியும். 1914 - க்குரிய சென்னைச் சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற திரு.குன்கிராமன் நாயர் கேட்ட கேள்விக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில், பிராமணர்கள் 452 பேர், பிராமணரல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தினர் 74 பேர் என்று பதில் கூறப்பட்டது.

1907-லிருந்து பதிவு பெற்ற பட்டதாரிகள் சார்பில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பிராமணர்களே. 1907-லும் சரி, அல்லது சட்டசபையில் பதில் கூறிய 1914-லும் சரி, எப்பொழுதும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிராமணர்களே பெரும்பான்மை இருந்தமையால் எத்துணைத் தகுதி பெற்றவராயிருப்பினும், பிராமணரல்லாதார், தேர்வுகளில் வெற்றி பெற்றதே கிடையாது. இந்தத் தேர்தல்களை நடத்துவதில் ஒரு தனிச்சாதியினர் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றிருந்ததன் பயனாய் டில்லி சட்டசபையிலாயினும் சரி, சென்னை சட்ட மன்றத்திலாயினும் சரி, நகர சபைகளிலாயினும் சரி, பிராமணரல்லாதார் நிலை அவ்வாறே இருந்துவந்தது. ஏதேனுமொரு சமயம் நேர்மையான ஓர் ஆட்சியாளர், பொது நிறுவனங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் மிகுதியாயிருப்பதைக் கருதி, பிராமணரல்லாதாரின் (பிரதிநிதியாக) சார்பாளராக யாரேனும் நியமிக்கப்பட்டால், பிராமணப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாகக் கண்டிக்கும். இதற்கு உதாரணம் கூறவேண்டுமென்றால், சட்டசபை மேல் மன்றத்திற்கு, மேன்மைதங்கிய பென்ட்லாண்டு பிரபு, சிலரை நியமித்த பொழுது, பத்திரிகைகள் எவ்வாறு அவரைக் கண்டித்தன என்பதே போதும்.

அரசினர்க்கு உட்பட்ட பொது நிறுவனங்களைத் தவிரப் பிற அரசியல் கட்சிகள் போன்றவைகளிலும், சென்னையிலாயினும் மாவட்டடங்களாலாயினும், தேர்தல் தொடர்பான சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இதே நிலைதான் அங்கும் இருப்பது தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம். அனைத்திந்திய காங்கிரசுக் குழுவுக்குச் சென்னை மாநில உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களே அந்தக்குழு, செய்யும் முடிவு உலக முழுவதும் பறையறைவிக்கப்படும்போது, இம்மாநிலத்திலுள்ள 4 கோடி பிராமணரல்லாதவர்களின் கருத்தும் அதுவேயாகுமென்று பொருள்படும். பின்தங்கியவர்கட்கு ஏதேனும் சலுகைகள் கொடுக்கப்படும் போது அதைக்கண்டு ஆதிக்கத்திலிருக்கும் சாதியினர் கட்டுப்பாடாக எதிர்ப்பதை நாங்கள் அனுபவத்தில் கண்டுகொண்டு வருகிறோம்.

பிராமணரல்லாதாரும் கல்வியும்

இவ்வாறு காணப்படும் பிராமண ஆதிக்கத்திற்குக் காரணம் கூறுபவர்கள், பிராமணரல்லாதார்களை விடக் கல்லூரிப் படிப்புப் பெற்ற பிராமணர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும், பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர். இதையாரும் மறுக்கவில்லை. பழங்காலந் தொட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக்களிலே உயர்ந்த, புனிதமான சாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை, இவற்றை நூல்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவும் சொல்லிச் சொல்லித் தாங்களே ஏனையோரை விட உயர்ந்தவர்கள், தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். இவையெல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்கட்கு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கைத் தேடித்தந்தன ஆங்கிலக் கல்வி அறிவைத் தவிர, மற்றபடி, பாரம்பரியம், நாட்டின் உரிமை, சமுதாயத்தில் உள்ள செல்வாக்கு, அமைதியான வாழ்க்கைத் தொழில், மாநில முன்னேற்றம், எண்ணிக்கை - இவையெல்லாம் பயனற்றவை என்று கருதலாமா? ஆதிமுதல் இவற்றிற்காக வாழ்ந்துவரும் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஊக்கம் கொடுக்க வேண்டாமா? கல்வியைப் பொறுத்த மட்டிலுங்கூடப், பிராமணர்கள்தாம் படித்தவர்கள் என்றும் கூறமுடியாது.

வெகுகாலத்திற்குப் பின்பு படிக்கத் தொடங்கினாலும் பிராமணரல்லாதாரும் அத்துறையில் முன்னேறி வருகின்றனர். ஒவ்வோர் இனத்தினரும் ஒவ்வொரு நிலையில் இருக்கின்றனர். செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், முதலியார் முதலிய வகுப்பினர் மிக விரைவாக முன்னேறி வருகின்றனர். மிகப் பின் தங்கியவர்கள் கூட மிக அக்கறையுடன் முன்னேறுவதற்காக உழைத்து வருகின்றனர். படிக்கவேண்டுமென்ற எண்ணம் எல்லோர்க்கும் ஏற்பட்டுவிட்டது. பிராமணர்களில் காணப்படுவதைவிடப் பிராமணரல்லாதாரிடையே காணப்படும் கல்வி முன்னேற்றம் சமநிலையில் இருந்து வருகிறது என்று கூறலாம். ஏது காரணம் பற்றியோகல்வி இலாகாவினர் பிராமணப்பெண்களுக்கும், விதவைகளுக்கும் கல்விச் சலுகைகள் காட்டி வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப்பெண்கள் கல்வி கற்றதாக இல்லை. பல வழிகளிலும், பல துறைகளிலும் பிராமணரல்லாதார், மாநில முன்னேற்றத்திற்காக, அடக்கமாகவும் பயனுள்ள முறையிலும் தொண்டு செய்து வருகின்றனர். அரசியலிலும், அரசாங்கத்திலும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாயிருப்பதால் பிராமணரல்லாதார் செய்யும் தொண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காது, மறைக்க ஏதுவாயிருக்கிறது.

 

ஓர் இயக்கம் வேண்டும்

அறிவுத் துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில், தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏக போகமாக உரிமையாக்கிக் கொண்டு பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக்கூட இடங்கொடுக்காமல் இருந்து வருவதேயாகும். அவர்கள் எல்லாத் தகுதியும், பண்பாடும் பெற்றிருந்தும், அவர்கட்கு வாய்ப்புக் கொடுக்கப் படவில்லை. எத்தனையோ இடையூறுகள் இருந்தும், நீதித்துறையில் கல்வித்துறையில், வழக்கறிஞர் தொழிலில், மருத்துவம், பொறியியல் முதலான துறைகளில் பெரிய ஜமீன்களை ஆட்சி நடத்துவதில் பிராமணரல்லாதார்கள் பலர் மிகச்சிறப்புடன் விளங்கி வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இணையாக பிராமண வகுப்பில் ஒருவரையுங் கூற முடியாத அளவு அவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தன் உரிமையை உணர்ந்து சுயமரியாதையுடன் அவர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்திருப்பார்களேயாயின், இன்று அரசாங்க அலுவல்களில், அவர்களின் பிறப்புரிமையாகிய முதலிடத்தைப் பெற்றிருப்பார்கள். தங்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததாலும், தங்களுடைய கருத்துக்களை வெளியிடப் பத்திரிகை இல்லாததாலும் எல்லோரும் தங்கள் தங்கள் உரிமையைத் தெரிந்து கொள்ள முடியாமற் போயிற்று.

படிப்படியான அரசியல் உரிமைகள் பெற வேண்டுமே தவிர, அதிகார உரிமையற்ற அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டியதில்லை. தீவிர அரசியல்வாதிகள் இப்பொழுது பெற்றுள்ள அரசியல் உரிமைகளால் திருப்தியடையவில்லை. சூழ்நிலையைக் கவனிக்காது மேலும் மேலும் ஏதேனும் உரிமைகளைக் கோருவதில் அவர்களுள் ஒரு திருப்தி. அம்முறையில் இப்பொழுது அவர்கள் சுயஆட்சி கேட்கின்றனர். முன் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால், நம்முடைய கருத்தைச் சரியான நேரத்தில் தெரிவிக்கவில்லையென்றால், அகில இந்தியாவும் அவர்கள் கோரிக்கையை ஆதரிப்பதாகக் கருதப்படும். அளவுக்கு மிஞ்சிய இத்திட்டத்தைப் பற்றியோ அல்லது இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் வைசிராயிடம் கொடுத்த திட்டத்தைப்பற்றியோ இங்கு நாம் விரிவாகக் கூற வேண்டியதில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை. இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர் வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். தவறினால் நாட்டில் தேசபக்தி இன்றி ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சீரழியநேரிடும்.

யாதொரு தகுதியுமற்ற அரசியல் அமைப்பைத் தயார் செய்வதைச் சில அரசியல்வாதிகள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். அத்தகைய அரசியல் அமைப்பை நாங்கள் விரும்பவில்லை. மக்களிடத்தில் படிப்படியாக ஆட்சியை எப்படி ஒப்படைக்க வேண்டுமென்பதை முடிவு செய்து, முன்யோசனையுடன், தாராளமாக உரிமைகளைக் கொடுத்து ஆட்சி நடத்த மக்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கவேண்டும். ஏ. ஓ. க்யூம், பானர்ஜி, பட்ருடின் தயாப்ஜி, எஸ். இராமசாமி முதலியார், ரெங்கையா நாயுடு, ராவ்பகதூர் சபாபதி முதலியார், சர்.சங்கரன் நாயர் முதலிய பேரறிஞர்கள் இந்திய தேசிய காங்கிரசின் தொடக்கநிலையில் அதற்கு வழி காட்டும் தலைவர்களாக இருந்துவந்தனர். அப்பொழுது நம்மாகாணத்திலுள்ள பெருமக்கள் பலர் அதனை ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் அதன் அமைப்பும், பெயரும் ஏதோ வகையில் இருந்தாலும், அதன் போக்கு ஒரு உண்மையான தேசிய இயக்கமாக இருந்தன. பழைய கொள்கையில் சிலவற்றை இன்னும் அது பின்பற்றுகின்றது.

அன்று அது என்ன நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டது, என்ன முறையில் நடைபெற்றது? ஆனால் இன்று அது யாரால் எப்படி நடத்தப்படுகின்றது? என்பதைப் பார்த்தால், இம்மாநிலத்தில் சுயமரியாதையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் அதை ஆதரிக்க மாட்டார். சமூகப் பிற்போக்குவாதிகளும், நிலைமையை உணராத பொறுமையற்ற அரசியல்வாதிகளும் இன்று காங்கிரசைக் கைப்பற்றியுள்ளனர். ஜனநாயக அடிப்படையில் அதன் அமைப்பு இருந்தாலும் பொறுப்பற்ற சிலர் ஆதிக்கத்தில் அது இருந்து வருகின்றது. நாட்டையும் மக்களையும் அறிந்து, தங்கள் கடமையினை உணர்ந்த, பொறுமையும் அனுபவமும் வாய்ந்த அரசியல்வாதிகள் விரைவில் காங்கிரசில் ஆதிக்கம் பெற்று, நாட்டு நிலைக்கு ஏற்ற வழியைக் காட்ட வேண்டுமென்று நாங்கள் உண்மையாக விரும்புகிறோம்.

 

வகுப்பு வாத ஆட்சியல்ல

ஆட்சியில் இன்றுள்ள சூழ்நிலைக்குத் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வகுப்பு அல்லது வர்க்க ஆட்சியையும் நாங்கள் முழுதும் குறை கூறவில்லை இந்தியாவின் உண்மையான நன்மையைக் கருதி, ஆங்கில ஆட்சி முறையைப் போன்று நீதியும், சம உரிமையும் விளங்கும் ஆட்சியே வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆங்கில ஆட்சியில் பற்றுடையவர்கள். அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாட்சியில் பல குறைபாடுகளும் குற்றங்களும் காணப்படினும் அது நேர்மையாகவும் அனுதாபத்துடனும் நடைபெறுகின்றன. எனினும் நாட்டைப் பற்றி மேலும் சரியாகத் தெரிந்து கொண்டு ஆட்சியாளர்கள் மக்கள் விருப்பத்திற்கு இணங்க ஆட்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் மக்கள் விருப்பம் என்ன என்பதைக் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் ஒவ்வொரு வகுப்பு, இனம் என்ன கருத்துடன் இருக்கின்றது. அவற்றின் தேவையென்ன என்பவற்றை நன்கு அறிந்து கொண்டே ஆட்சியில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அவைகளை அறிந்துகொள்வதற்கு வழக்கமாகப் பின்பற்றும் முறைகளையே கையாளக் கூடாது. சமுதாயத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேற்றுமைகள் மறையத்தொடங்கினால் மட்டுமே சுயஆட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்று வருகின்றோம் என்று கூறலாம். ஆகவே, அரசியல்வாதிகள் தங்கள் முன்னால் உள்ள பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வுகாண்பதில் முனைந்து நிற்கவேண்டும்.

 

அதிகாரத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும் சுய ஆட்சி

போரில் வெற்றிகண்டவுடன் ஆங்கில அரசியல்வாதிகளும், பாராளுமன்றமும் இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி கவனிப்பார்கள். அரசியல் உரிமைகள் வேண்டும் என்று கோருவதற்கு இந்தியா உரிமை பெற்றுவிட்டது. அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால், உண்மையான உரிமைகள் விரிவாக இருக்க வேண்டும்; ஒவ்வொரு இனத்தினருக்கும் வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும், தகுதியையும், எண்ணிக்கையையும் மனதிற்கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பைக் கொடுக்க வேண்டும். உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்த வரை முழு அதிகாரமும், நிதியைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுக்கவேண்டும்; சுயமரியாதைக்கு இழிவு இல்லாது, ஆங்கில சாம்ராஜியத்திற்குட்பட்ட பிற சுதந்திர நாடுகளுக்கு ஒப்பான அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும்.

 

பிராமணரல்லாதாரின் முதற்கடமை

விழிப்படைந்த பிராமணரல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கின்றது. அவர்கள் செய்ய வேண்டிய காரியம் மிகப்பெரிது. அத்துடன் மிக அவசரமானதுமாகும். முதல்வேளையாகச் சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்க வைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து பிராமணரல்லாதார்க்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக் கூறி, அதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் கல்வித்துறையில் நாம் முன்னேற கவனம் செலுத்தத் தவறிவிட்டோம் அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம் முதலியவற்றிற்கும் நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி சங்கங்களும் ஆங்காங்கு அமைக்க வேண்டும். உரிமைகளுக்காகப் போராட வேண்டும். இவற்றைச் செய்யாது நாம் இதுவரை வாளாவிருந்தோம்; அதை சில சுயநலவாதிகள் தங்கள் நலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

அதன்பயனாக பிராமணரல்லாதார்களிடையே மிக அதிருப்தி காணப்படுகின்றது. தங்களை ஒத்த பிராமணர்கள் மட்டும் எல்லாத் துறைகளிலும் முன்னேறி செல்வாக்குடன் இருப்பதை அரசினர் சரியாக உணரவில்லை என்று கருதுகின்றார்கள். நாள்தோறும் அதிருப்தி வளர்ந்து வருகின்றது. அரசாங்கத்தின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் முதலில் பிராமணரல்லாதார் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள வேண்டும். கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் முதலிய பல துறைகளிலும் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பின்புதான் ஆங்கிலக் குடிமகன் என்ற முறையில் அவர்கள் செல்வாக்குப் பெற முடியும். தேசிய வளர்ச்சி என்று கூறப்படுவதெல்லாம் ஒவ்வொரு மனிதனும் இனமும் வகுப்பும் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பொறுத்ததேயாகும்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால் இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பினரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருத வேண்டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது, தான் தாழ்ந்தவன் என்று கருதாது, சுயமரியாதையுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ணவேண்டும் சுயமரியாதையுடன் சமநிலையிலிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

- நீதிக்கட்சி பொன்விழா மலர் (1968) & திராவிடர் 100 (2016).

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு