தமிழரின் தத்துவ மரபு (பாகம் - 2) - முன்னுரை
இரண்டாம் பகுதிக்குள் புகும் முன் ஒரு வார்த்தை. முதல் பகுதியைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்காதிருந்தால் அதை முடித்து விட்டு இதற்கு வாருங்கள். அப்பொழுது இது மேலும் புரிபடும். காம்பைப் பிடித்துக் கொண்டு பூவை நுகரவேண்டும்.
ஒரு வசதிக்காக இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளதே தவிர இது ஒரே நூல். தமிழர்களின் தத்துவ மரபு மெய்யாலும் பாகம் போட முடியாதது. ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒன்றைத் தொட்டு ஒன்றாக அது வந்து கொண்டே இருக்கிறது. அதை நடுவிலிருந்து ஆரம்பித்தால் முழு ருசி தெரியாமல் போகக் கூடும். அதுமட்டுமல்ல, இந்த இரண்டாம் பகுதியில் ஆங்காங்கே முதல் பகுதி நினைவுபடுத்தப் படுகிறது. அதனால்தான் இந்த வார்த்தை.
இரண்டாம் பகுதி பன்முகம் கொண்டது. இதில் இஸ்லாமும் வருகிறது, ரஜ்னீஷ் சாமியார் போன்றவர்களும் வருகிறார்கள். தமிழர்களின் வாழ்வு அகண்டமாகவும் நுணுக்கமாகவும் ஒருங்கே ஆகிப் போயிருப்பதன் வெளிப்பாடு எனலாம். இதற்காக நிறைய நூல்களைச் சேகரிக்கவும், படிக்கவும் வேண்டியிருந்தது. அவையெல்லாம் தனிப் பட்டியலாகத் தரப்படாமல் அந்தந்த இடத்திலேயே வந்து கொண்டிருக்கிறது. நூல்களைத் தந்துதவியர்களில் பக்கத்து தெருக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் உண்டு. அவர்களை எல்லாம் பிரியத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.
இந்த நூலை "இந்தியா டுடே” ஏட்டில் பாராட்டி எழுதிய ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரின் தத்துவ நோக்கைச் சொல்லாத குறைபாட்டைச் சுட்டிக்காட்டினார். அதை இந்தப் பதிப்பில் சரிசெய்திருக்கிறேன். அவரைப் பற்றி தனி அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு "அயோத்திதாசர் சிந்தனைகள் II (சமயம், இலக்கியம்)" தேவைப்பட்டபோது அதைக் கொடுத்து உதவியவர் நாவலாசிரியர் சு.வெங்கடேசன். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
நவீன குருமார்கள் அத்தியாயத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றிய கணிப்பு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அவரின் "ஈஷா" அமைப்பு இப்போது பிரபலமாக உள்ளதால் இது அவசியமாகிப் போனது.
சங்க காலம் துவங்கி நவீன குருமார்கள் வரையிலான ஒரு தத்துவ நூலை எழுதுவேன் என்று நான் நினைத்ததில்லை. துவங்கியதும் முடித்ததும் ஏதோ மின்னல் வெட்டுப் போலப் படுகிறது. வாழ்வில் அர்த்தமிக்க ஒரு கட்டம் நடந்து முடிந்தது.
அருணன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: