Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) அணிந்துரை - 2

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அணிந்துரை - 2

இடதுசாரி சிந்தனையாளரும் மார்க்சிய அறிஞருமான நா.வானமாமலை அவர்களது ஆய்வுகள், நடுநிலையான விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு நெறிமுறைகளின்படி எழுதப் பட்டதாகும். இவரது ஆய்வுகள் சமூகப் பொருளாதார, அரசியல், தத்துவம், வரலாறு, பண்பாடு, கலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் களம் கண்டிருக்கின்றன. அத்தகைய அறிஞரின் நூல்களுள் ஒன்றுதான் 'தமிழர் பண்பாடும் தத்துவமும்' என்ற நூல். இந்நூலில் மிகமுக்கியமான ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

முருக வணக்கம் தமிழ்நாட்டில் மிகவும் பழமையானது. அகம், புறம், குறுந்தொகை, நற்றிணை முதலில் நுல்களில் முருக வணக்கம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்துடன் பரிபாடல் திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் காணப்படும் விளக்கத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதையும் கட்டிக்கொட்டுகிறார். ஸ்கந்த வணக்கம் என்பது ரிக் வேத காலத்திலேயே இருந்தது. கங்கைச் சமவெளியில் ஸ்கந்த உருவம் கொண்ட சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளதையும் உஜ்ஜயினியில் கி.மு. 200, 300க்கு முந்தைய ஸ்கந்த உருவம் பொறித்த காசுகள் கிடைத்துள்ளதையும் அதில் சேவல், மயில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும் குஷாணா, யுத்தேய கணத்தவர்களும் கார்த்திகேயனின் உருவம் பொறித்த காசுகளை வெளியிட்டிருக்கின்றனர். டயோனிஸாஸ் என்ற கிரேக்க தெய்வத்திற்கும் ஸ்கந்தனுக்கும் பல ஒற்றுமை உள்ளதையும் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இன்றைய காலகட்டங்களில் நமது சிவன் கோயில்களில் சோமாஸ்கந்தர் செப்புச்சிலைகளைக் காணமுடியும். பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களில் கருவறையின் உள்புறச் சுவர்களில் சோமஸ்கந்தர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சோமம் என்றால் மது; ஸ்கந்தன் என்றால் அதன் களிப்பின் உருவம். என்ற விளக்கங்களில் உண்மையான வரலாறு பெறப்படுகின்றது. மிகவும் சுவாரஸ்யமான தகவலாகவும் காணப்படுகின்றன. ரோமானியக் கடவுளோடு மட்டுமின்றி பைபிளில் பழைய ஏற்பாட்டில் வரும் மோசஸ் பல தன்மைகளில் நம் ஸ்கந்தனின் தன்மைகளில் ஒப்புமையுடையவராகக் காணப்படுகின்றாராம். இந்த விளக்கங்களைப் படித்துவிட்டு நம் கோயில்களில் உள்ள சோமஸ்கந்தர் உருவங்களை அந்த கண்ணோட்டத்தில் காணவேண்டும்.

பரிபாடலில் முருகவணக்கம் என்ற கட்டுரையில் பழந்தமிழர் செய்த வேலன் வெளிப்பாட்டு பற்றியும் அவர்கள் நம்பிக்கைகள், வணங்கிய இடங்கள், மரங்கள், போன்ற தகவல்களுடன் கோயில் வழிபாட்டில் முருக வணக்கம் வந்த போது வேறுபட்ட முருகனாக சித்தரிக்கப்படுவதையும் ஏராளமான சான்றுகளோடு கூறியிருக்கிறார். இனக்குழு மக்களின் பொதுக்கூட்டமைப்புகள் அரசாக இணைகிறபோது வடநாட்டுப் புராணக் கதைகளும் தமிழ்நாட்டுக் குழு நம்பிக்கைகளின் எச்சங்களும் கலந்து முருகன் என்ற கலப்புருவக் கடவுளை தமிழ்மக்கள் தோற்றுவித்தார்கள். இவனே திருப்பரங்குன்றத்து முருகன் மிகவும் அரிய தகவல்கள் சிறந்த அணுகுமுறையுடன் எழுதப்பட்டவை என்பதற்கு நூல் முழுவதும் சான்றுகள் நிறைந்துள்ளன.

கலைகளின் தோற்றம் பற்றிக் கூறுகின்றபோது மனிதனின் வாழ்க்கைத் துவக்கத்திலேயே காணப்படுகின்றன. தன் சக்தியை பெருக்கி வேட்டையாடுதலை வெற்றி கரகமாகச் செல்வதற்காகவே விலங்குகள், வேட்டையாடும் காட்சிகள் போன்ற சித்திரங்கள் வரையப்பட்டன.

பின்னர், சிற்பம் ஓவியம், நடனம், இசை போன்ற கலைகள் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப வளர்ந்தன. இக்கலைகளே பிற்கால கட்டடக்கலை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டன. இக்கலைஞர்கள் ஆக்கப் பூர்வமான படைப்புகளே இன்று நமது நகரிகத்தின் பழமையை அறிந்துகொள்ளும் சான்றுகளாக இன்றளவும் நின்று நிலவுகின்றன. இந்நூலில் வரலாற்று ரீதியாகச் சொல்லப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

உலகத் தோற்றம் பற்றிய பண்டைக்கால மக்களின் நம்பிக்கைகள், எழுத்துக்கள் தோன்றி எழுத ஆரம்பித்த காலத்தில் தனிக்கதைகள், காப்பியக் கதைகள், சமயநூல்களில் கதைகள் மற்றும் பல நாட்டுமக்களின் கதைகளிலும் கூறப்பட்டன. இக்கதைகள் ஆரியர்களது வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டிருக்கின்றன. அதையொற்றி எழுதப்பட்ட பாண்டியர், பல்லவர், சோழர்காலச் செப்பேடு களிலும் அவற்றின் தாக்கத்தைக் காணமுடிகிறது. உலகத் தோற்றம் பற்றிக் கூறுகையில் உலகைப் படைத்தது தாயா? தந்தையா? கடவுளா? இயற்கையா? என்ற விவாதங்கள் இருந்துகொண்டேயிருந்தன. இதை ஒட்டியே கருத்தாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பகுதி ஆணாகவும் ஒரு பகுதி பெண்ணாகவும் உள்ள உருவத்திலிருந்து உயிர்கள் தோன்றியது பற்றியும் இக்கதைகள் உள்ளன. இதுபோன்ற கதைகள் பற்றிய விவாதங்கள் சமூக வளர்ச்சியின் மாற்றத்திற்கேற்ப அந்தக் கருத்தியலில் மாற்றம் பெறுவதைக் காணமுடிகிறது. நல்ல தொடுமானிடவியல் சமூகவியல் ஆய்விற்கு சிறந்ததோர் வழிகாட்டியாக இக்கட்டுரை அமைந்திருக்கிறது.

மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படும் பௌத்தம் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார் ஆசிரியர். அதில் கூறப்படும் பௌத்தம், ஞானசம்பந்தர் கூறிய அறுவகைப் பௌத்தத்தில் எதைச் சேர்ந்தது என்பது பற்றியும் மிக விரிவாகக் கூறுகிறது இந்நூல்... பல தமிழ் வரலாற்று அறிஞர்களின் கருத்துக்களைக் கூறி பலநூல்களைப் படித்து விரிவாக விவாதிக்கிறார். பௌத்த சமய நூல்கள் ஏராளம். பல்வேறு பௌத்தத் தலங்களிலும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் நூல்கள் ஆங்கில மொழி என்று மணிமேகலையில் சரவண அடிகள் பின்பற்றும் பௌத்தம் எது என்பதை மிகத் தெளிவாக புரியவைத்திருக்கிறார்.

தமிழகத்திற்கு வருகை தந்த சீன யாத்ரிகர் யுவான்சுவாங் காஞ் சிபுரத்திலிருந்து ராஜாவிசாரை என்னும் மிகப்பெரிய பௌத்த விகாரை பற்றியும் அது தவிர 100 பௌத்த விகாரைகளுக்கு மேலாக விகாரைகளும் எராளமான பௌத்த பிக்குகளும் வாழ்ந்ததையும் பல்வேறு தத்துவப் பிரிவுகளை அவர்கள் பயின்றதையும் தர்க்க சாஸ்த்திரம் பயில கிழக்காசிய நாடுகளிலிருந்து பௌத்த பிக்குகள் வந்து போனதையும் குறிப்பிடுகிறார். இச்செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கதாகத் திகழ்கிறது.

பௌத்தம் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே இங்கு பொருள் முதவாதக் கருத்துக்கள் அடிப்படையில் பூதவாதம் என்றோர் தத்துவப் பிரிவு சிறந்திருந்தது என்பதை நீலகேசியின் பதிப்புரையில் பேராசிரியர். அ.சக்கரவர்த்தி நயினார் குறிப்பிடுகிறார். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே பூதவாதம் பிராமணர்கள் கற்க விரும்பிய மதிப்புடைய தத்துவமாக தென்னிந்தியாவில் திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக புறப்பாடல்களில் ஐம்பெரும் பூதங்களின் இயல்பு பற்றிக் கூறுகிறது. இவைதாமே தோன்றி தமது சுபாவத்தால் இயங்குபவை. ஆனால் புராணக் கதைகள் அல்ல என்று கூறி அதை இயக்க ஒருவன் தேவை என்று கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வு நம்மை பக்குவப்படுத்தும் ஆற்றல் படைத்தவை.

கடைசியில் பரபக்க லோகாயதம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை திகழ்கிறது. பரபக்கம் என்றால் ஒரு தத்துவப் பிரிவானது தமது எதிரிகளின் வாதத்தைக் கூறுவது. அவ்வாறு கூறி பரபக்கம் என்ற பிரிவில் தமது வாதத்தை வைத்து தமது தத்துவமே சரியானது என்று நிரூபிப்பார். ஒரு தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயினும் எதிர்க்க வேண்டுமாயினும் அத்துவாதிகள் எழுதிய நூல்கள் முழுவதையும் கற்றறிந்துகொள்ள வேண்டும். ஆனால், தற்காலத் தத்துவவாதிகள் தாம் எதிர்க்கும் தத்துவத்தை எதிர்த்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்களோ அதை வைத்துக்கொண்டு எதிர்க்கிறார்கள். சிலவோ எதிர் தத்துவத்தை சற்று திரித்துக் கூறி அதை எதிர்த்து வென்றுவிட்டதாகக் காட்டிக் கொள்கிறார்கள். பூர்வபட்சமாக பலரும் லோகாதயத்தை எதிர்த்திருக்கிறார்கள் என்றாலும் ந.வா.அவர்கள்.... மூன்று நூல்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

அவை மணிமேகலை நீலகேசி, சிவஞான சித்தியார். இந்நூல்களில் லோகாயதவாதிகளின் கருத்துக்கள் என்ன, அதை அவர்கள் எவ்வாறு முன்வைத்து வாதாடுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகக் கூறியிருப்பது தர்க்கசாஸ்த்திரத்தின் இயல்பை நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு தமிழனும் அவன் தத்துவாதியாக இருந்தாலும் இலக்கிய இலக்கணத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் வரலாறு, கலைகளில் மேம்பட்டவராக இருந்தாலும் கற்றுத் தெளிய வேண்டிய நூல் இது. இந்நூல் நமக்கு பலவழிகளில் கண்ணைத் திறந்துவிடும். அரசியல், கலை, வரலாறு, தத்துவம் பொருளாதாரம் சமூகம் சமயம் பற்றிய புரிதலுக்கு மிகவும் அவசியமான நூலாக இந்நூல் திகழ்கிறது. மீண்டும் மீண்டும் பதிப்புக்குச் செல்லுகின்ற நூல் இது. கற்றுத் தேர்க என வாசகர்களை வாழ்த்துகிறேன்.

முனைவர். ஆ.பத்மாவதி,

கல்வெட்டாய்வாளர் (ப.நி) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை 8

ஜுன் 2017

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு