தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு
அண்மைக் காலமாக சமஸ்கிருதம், வைதீகப் பண்பாடு, மனுதர்ம நியாயப்பாடு இவை குறித்தெல்லாம் விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில், சங்ககாலம் தொடங்கி இன்றுவரை ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களில் ஓர் அந்நிய மொழியான சமஸ்கிருதம் அதன் மூலம் பரப்பப்படும் வேதம், இவற்றின் செயல்பாடுகளின் பலன் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியுள்ளது அவசியம். இந்த முயற்சியின் வெளிப்பாடே 'தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு' என்ற இந்நூலாக்கம் ஆகும்.
தமிழ்க் கல்வி வரலாறு பற்றி எழுதுவதற்குத் தரவுகள் சேகரித்த பொழுது கிடைத்த தரவுகளில் அதிகமாக வேதக் கல்வி பற்றியதாக இருந்தது. காலந்தோறும் அரசர்களால் வேதக் கல்வி எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதற்கு அவர்களின் கல்வெட்டுச் சான்று களும், செப்பேட்டுத் தரவுகளும் மிகுதியாகவே கிடைத்தன. தமிழ்க் கல்விக்கு இதுபோன்ற தரவுகள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்த தரவுகளையும், தமிழ் இலக்கியங்களையும், தொல்லியல் சான்று களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்க் கல்வி வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் இந்நூலில் பதிவு செய்துள்ளேன்.
சங்க காலத்தில் செழுமையான இலக்கியப் பரப்பைக் கொண்டுள்ள தமிழ் இனத்தின் கல்வி வரலாறு என்பது பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியோடு சேர்ந்து வளர்ந்து வந்துள்ளது. சமண-பௌத்த கல்வி நிறுவனங்கள் முன்னெடுத்த கல்வியும் அவர்களின் இலக்கிய உருவாக்கமும், பிற்காலத்தில் சைவ-வைணவ சமயங்களின் இலக்கிய உருவாக்கமும் தமிழ் மொழியை எதிர் எதிர் முகங்களோடே பயணப் பட வைத்தது.
வேதப் படிப்பு அது சார்ந்த நடைமுறைகள் சங்ககாலத்தில் இருந்து களப்பிரர், பல்லவர்கள், சோழர்கள் என ஒவ்வொருவர் காலகட்டத்திலும் எவ்வாறு கற்பிக்கப்பட்டது என்பதை இந்நூலில் தொகுத்துள்ளேன். வேதப் படிப்புக்கு அன்றைய அரசர்கள் ஏன் "முக்கியத்துவம் கொடுத்தனர்? இதற்கு அரசர்கள் அளித்த தானங்கள் என்ன? வேதம் படித்தவர்களின் அரசவைத் தகுதி என்ன? வேதம் படித்தவர்கள் சமூகத்தை எவ்வாறு வழி நடத்தினர்? இவர்களுக்குக் கொடுத்த பிரம்மதேயங்கள் என்ன? அரசர்களும் வேதம் படித்தவர் களும் எவ்வாறு இணைந்திருந்தனர் என இப்படி எல்லா தகவல் களுக்கும் இந்நூலில் விடையுள்ளது.
தமிழகத்திற்குப் பிராமணர்களின் வருகையும் அவர்கள் தமிழ்ச் சமூகத்துடன் எவ்வாறு கலந்து வாழ்ந்தனர் என்பது பற்றியும் அவர்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் ஆகியவற்றையும் இந்நூலில் தெளி வாக்க முயற்சித்துள்ளேன். கல்வெட்டு, செப்பேட்டுத் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்க் கல்வியின் நிலைக் குறித்தும், கல்விக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவம் பற்றியும் பதிவு செய்யும் வேளையில், தமிழகத்தில் நடைபெற்றுவந்த பழைய திண்ணைப் பள்ளிக்கூட முறைக் குறித்து தனித் தலைப்பில் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சாராயத்தை விற்று தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கப் பட்டது பற்றிய செய்தி இந்நூலில் ஒரு முக்கியப் பதிவாகும்.
ஐரோப்பியர் காலத்தில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன்பின் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி மற்றும் தனித் தமிழ் இயக்கங்கள் தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவம் முதலானயையும்; சமகால வேதப் பாடசாலைகளின் நிலை, அவர்கள் முன்னெடுக்கும் வைதீகப் பண்பாட்டு அரசியல் ஆகியனவும் இந்நூலில் தக்கச் சான்றுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் நடத்திவந்த 'தேடல் வெளி' என்ற அமைப்பில் வாசிப்பதற்காக எழுதிய சிறு கட்டுரைதான் இன்று ஒரு முழு ஆய்வு நூலாக வடி வெடுத்துள்ளது. அவருக்கு என் நன்றி உரியது. மேலும் இக்கட்டு ரைக் குறித்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட தோழர் மயிலை பாலு, தோழர் குமரேசன், தோழர். ஆ. கா. ஈஸ்வரன் ஆகியோருக்கும் என் நன்றிகள். மேலும் இன்றைய கால வைதீகப் போக்குகளை விளக்கப்படுத்தி விவாதித்த தோழர். முனைவர் பெ. அண்ணாதுரை அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இந்நூலை முழுவதுமாகப் படித்து அதனை ஒழுங்குபடுத்திக் கொடுத்துவர் என் அப்பா அலைகள் சிவம் அவர்கள். அவரின் வழி காட்டுதலாலேயே இந்நூலை என்னால் முழுமையாகச் செய்ய முடிந்தது. மார்க்சியப் பார்வையில் சமகால நிகழ்வுகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எனக்கான புரிதலை எப்பொழுதும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் அவருக்கு என் அன்பும் பாசமும் என்றும் உரியது.
தொல்லியல் சார்ந்த ஐயங்களைத் தெளிவுபடுத்தித் தரும் ஆய்வாளர் முனைவர். ஆ. பத்மாவதி அவர்களுக்கும் மற்றும் தோழர் வி. என். ராகவன், ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் மருமகனார் புலவர் ஆ. சண்முகம் (புற்றுநோய் மருத்துவர்) அவர்களுக்கும் மற்றும் நண்பர் முனைவர் த. தனஞ்செயன் அவர்களுக்கும் எனது நன்றிகள் என்றும் உரியவை.
- சி. இளங்கோ
தொடர்புடைய மற்ற பதிவுகள்: