சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 1
https://periyarbooks.com/products/suyamariyaadhai-iyakka-veeraanganaigal-part-1
தமிழ்ச்சமூகத்தின் நூற்றாண்டுகளின் தேக்கங்களையும் அடிமைத் தனங்களையும் உடைத்தெறிந்த காலம் 'சுயமரியாதை இயக்கம் இயங்கியக் காலம். சிந்தனைத் தளத்திலும், சமூக அமைப்பிலும் அது மேலோட்டமான மறுமலர்ச்சியைக் கோரவில்லை. கட்டமைப்பையே, தகர்ப்பதற்கான கேள்விகளை முன்வைத்தது அது. இந்துப் பார்ப்பனீய சனாதனத்தை கட்டுடைத்து தூள் தூளாக்கியதோடு 'ஆண்மை அழியாமல் பெண் விடுதலை கிடையாது' என தன்னிலை அழிப்போடு எழுதியும், பேசியும், இயங்கியும் வந்த பெரியாரின் சிந்தனை மைய அச்சில் நின்று சூறாவளிகள் சுழன்றடித்தக் காலம்.
தென்னிந்திய சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்த அந்த அற்புதமான காலவெளியின் செயற்பாட்டில் நின்று இயங்கிய பெண் போராளிகளின் எழுத்துக்களை பேசச்சுசுக்களை இங்கே முனைவர் வளர்மதி அவர்கள் தொகுத்துள்ளார்கள். ஆய்வுத்தளத்தில் இயங்கிவரும் திராவிடர் இயக்க சிந்தனையாளர்களில் முனைவர் வளர்மதி தனித்தறியப்படவேண்டிய அளவிற்கு இந்நூலையும் அதற்கு வளமானதொரு தொகுப்புரையும் தந்துள்ளார். நல்ல நூல்களை வாங்கி விற்கத் தொடங்கிய எங்களது செயற்பாட்டினை கடந்த பத்தாண்டுகளாக ஊக்குவித்தும் தோழமை செய்தும் வருபவர் இந்நூலை வெளியிட வாய்ப்பளித்த அவருக்கு நன்றி.
திராவிடர் இயக்க சிந்தனையாளர்களுக்கும், பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கும், பெண்ணியச் சிந்தனை ஆய்வாளர்களுக்கும் இந்நூலின் முதற்பதிப்பு தமிழகப் பெண்கள் வரலாற்றையும், சுயமரியாதை இயக்கத்தின் வீச்சையும் செயல்பாட்டையும் அறிவதற்கு ஒரு முக்கிய ஆவணமாக பயன்பட்டதால் இதன் இரண்டாம் பதிப்பு வெளிவரவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த நூல்.
இந்நூலின் முதற்பதிப்பினை வெளியிட்டதோடு எங்களது இரண்டாம் பதிப்பு முயற்சிக்கு துணை நின்ற தமிழ்மதி பதிப்பகத்தின் மரியாதைக்குரிய கோ. இளவழகனார் அவர்களுக்கும், இதன் முகப்பு அட்டையை அழகுற வடிவமைத்த தோழர் விஜயனுக்கும் கருப்பு பிரதிகளின் பதிப்பு முயற்சிகளுக்கு தோள் பலமாய் நிற்கும் அமுதாவிற்கும், பல்வேறு உதவிகளை நல்கிடும் பாரதி புத்தகாலயத் தோழர்கள் நாகராஜன், சிராஜ், உள்ளிட்ட நண்பர்களுக்கும், பதிப்பகத்தின் எல்லாவித முயற்சிகளுக்கும் உறுதுணையாய் நிற்கும் தோழர்கள் விஜய் ஆனந்த், வேதா, ஜனசக்திதேவதாசன், அய்யனார், சுந்தர் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்
நீலகண்டன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: