சாதியை அழித்தொழித்தல்
சாதியை அழித்தொழித்தல்
தலைப்பு | சாதியை அழித்தொழித்தல் |
---|---|
எழுத்தாளர் | அம்பேத்கர் |
பதிப்பாளர் | காலச்சுவடு |
பக்கங்கள் | 392 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.325/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/saathiyai-azhiththozhithal.html
பதிப்பாசிரியர் குறிப்பு
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்', அது யாருக்காக எழுதப்பட்டதோ அந்த வாசகர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு பனுவல். அது ஆரம்பத்திலேயே தன்மீது செலுத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சியை முறியடித்து இன்றைக்கு எட்டியிருக்கும் ஒரு காப்பிய நிலையை அடைந்திருக்கிறது. லாகூரின் இந்து சீர்திருத்த அமைப்பான ஜாத் பாத் தோடக் மண்டல் (சாதிப் பேதத்தை உடைக்கும் குழு) 1936இல் தனது வருடாந்திர மாநாட்டில் உரையாற்ற அம்பேத்கரை அழைத்தது. அவரது உரையை முன்னதாகவே கேட்டு வாங்கி பெற்றது. பின்னர் அதன் உள்ளடக்கத்தைத் தாங்க முடியாமல்' மண்டல் அதிர்ந்தது. அம்பேத்கர் தமது மேடையைச் சாதி முறையை விமர்சிக்க மட்டுமல்லாமல் இந்து மதத்தையே தாக்குவதற்குப் பயன்படுத்தப்போகிறார் என அறிந்ததும் மண்டலினர் அவருக்கான அழைப்பைத் திரும்பப் பெற்றனர். 1936 மே மாதத்தில் அம்பேத்கர் தனது உரையின் 1500 பிரதிகளைத் தனது சொந்தச் செலவில் அச்சிட்டிருந்தார். அது உடனடியாக ஆறு மொழிகளில் பெயர்க்கப்பட்டது. சிறப்புரிமை பெற்ற 'உயர்' சாதிகள் இதை அறியாத் துயிலில் இருந்தாலும், 'சாதியை அழித்தொழித்தல்' சிறிய, பெரும்பாலும் தலித்துகளால் நடத்தப்படும் அச்சகங்களால், பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டு மீள்பதிப்பு செய்யப்பட்டு - அம்பேத்கரின் மொத்தத் தொகுப்பில் உள்ள பிற நூல்களைப் போலவே - அதிகமும் தலித் வாசகர்களால் கடந்த எழுபதாண்டுகளாக வாசிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், 'சாதியை அழித்தொழித்தல்' முதன்மையாக தலித் அல்லாத சிறப்புரிமை பெற்றவர்களுக்காக அம்பேத்கர் எழுதிய உரை. இந்தக் கூட்டம் அதனை வாசிக்கவேயில்லை . இந்த அடிக்குறிப்புகளுடன் கூடிய ஆய்வுப் பதிப்பு என்பது அவரது உரைக்கு அத்தகையதொரு விமர்சனப்பூர்வமான ஆய்வுப்புலம்சார் கவனத்தைப் பெற்றுத் தருவதற்கான ஒரு முயற்சியே.
நான் இந்தப் பனுவலை வாசித்து மீண்டும் மீள்வாசித்துப் பார்த்ததில், அது எவ்வளவு வளமானது என்பதை உணர்ந்தேன். இதற்கான வரலாற்றுப் பின்புலத்தோடு பொருத்தி இதை வாசிக்க முடிந்தால் இன்றைய சமகால வாசகர்கள் இதை எவ்வளவு விரும்பிப் படிப்பார்கள், இதிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்வார்கள் என நினைத்தேன். ஜாத் பாத் தோடக் மண்டலை நிறுவியது யார்? ஆதிக்க நிலையிலிருந்த ஆரிய சமாஜத்தின் நிலைப்பாட்டைத் துணிவாக எதிர்த்துநின்ற சந்த் ராம் யார்? கவிதாவில் நடந்ததாக அம்பேத்கர் குறிப்பிடும் ஆனால் விரிவாகச் சொல்லாமல் விடும் சம்பவம் என்ன? அவர் 'சமூக செயல்திறன்' 'ஒருங்கிணைந்து சகவாழ்வு' அல்லது 'சமூக சவ்வூடுபரவல்' ஆகிய கருத்தாக்கங்களை எங்கிருந்து எடுத்துக் கையாள்கிறார்? 1932 இல் உருவான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கும் ரோமாபுரியின் கொமிடியா செண்டுரியாடாவிற்கும் இடையே அவர் சுட்டிக்காட்டும் தொடர்பு எத்தகையது? அமெரிக்க அராஜகவாத பெண்ணியவாதியான வோல்டரின் டிக்ளேருக்கும் அம்பேத்கர் முன்வைத்த நேரடிச் செயல்பாட்டுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சியில்தான் நான் இப்பனுவலுக்கு அடிக்குறிப்புகள் எழுதத் தொடங்கினேன். இதைச் செய்து கொண்டிருக்கும்போதுதான் 1937இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பில் அம்பேத்கர் பல சிறிய நுட்பமான மாற்றங்களைச் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவருக்கும் காந்திக்கும் இடையே நிகழ்ந்த வாதம் இரண்டாவது பதிப்பில் சேர்க்கப்பட்டது. 1944 பதிப்பில் அம்பேத்கர் இன்னமும் சில மாற்றங்களைச் செய்தார். இவை அனைத்தும் தேவையான இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அம்பேத்கரின் அசல் முதற்பதிப்பு சில சமயம் பல பக்கங்களுக்கு ஓடும் பெரிய பத்திகளைக் கொண்டதாக இருந்தது. அவை ஏற்பான இடங்களில் பிரிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் தந்துள்ள அத்தியாய எண்கள் பின்பற்றப்பட்டுள்ளன, புதிய பத்திகளும் எண்ணிக்கையிடப்பட்டுள்ளன.
'சாதியை அழித்தொழித்தல்' பல இடங்களில் சமஸ்கிருத வரிகளைக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் அவற்றை ஆளுமையோடு எடுத்தாள்கிறார், அவற்றைத் தனது வாசகர்களுக்காக விளக்கிச் சொல்ல அவர் முனைவதில்லை. இவற்றை மொழிபெயர்க்க நான் ஆய்வாளர் பிபேக் தேப்ராயை அணுகினேன். அவரும் மிக உற்சாகத்தோடு ஒத்துழைத்தார். அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒரு புதிர்போலக் கையாண்டார்.
அருந்ததி ராயின் முன்னுரை 'டாக்டரும் புனிதரும்' ஒரு முழு புத்தக நீளக் கட்டுரை. அது வாசகர்களைச் சமகால இந்தியாவில் செயலாற்றும் சாதி முறைமை குறித்துப் பரிச்சயப்படுத்துகிறது. 'சாதியை அழித்தொழித்தல்' வெளியானதற்குப் பின்பு நிகழ்ந்த காந்தி - அம்பேத்கர் விவாதத்தின் வரலாற்றுப் பின்னணியில் அதை அலசுகிறது. தனது முன்னுரையில் ராய் காந்தியின் மிக அறியப்படாத ஒரு பக்கத்தை நமக்குக் காண்பிக்கிறார். அவரது வார்த்தைகளில்: "அம்பேத்கர்தான் காந்தியின் மிக வலிமைவாய்ந்த எதிரி. காந்தியை அரசியல் ரீதியாக, அறிவு ரீதியாக மட்டும் அவர் எதிர்க்கவில்லை. தார்மீக ரீதியாக எதிர்கொண்டவரும் அவரே. நாம் அனைவரும் அறிந்த அம்பேத்கர் நீக்கம் செய்யப்பட்ட காந்தியின் கதை ஒரு துன்பியல் நகைச்சுவை. அதேபோல் காந்தியை ஒதுக்கிவிட்ட அம்பேத்கரின் கதையும் அம்பேத்கருக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். ஏனெனில் அம்பேத்கருடைய உலகின் மீது காந்தி பல அற்புதமற்ற விதங்களில் உலாவிக்கொண்டிருந்தார்."
இந்தப் புத்தகப் பனுவல் இந்தத் துறையில் பணியாற்றிவரும் மிகச் சிறந்த சில ஆய்வாளர்களால் வாசிக்கப்பட்டு பரிசீலிக்கப் பட்டுள்ளது: கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெஷாட், தாமஸ் ப்லோம் ஹான்சன், அய்யாதுரை கஜேந்திரன், ஆனந்த் டெல்டும்ப்டே, சதீஷ் தேஷ்பாண்டே, உமா சக்கரவர்த்தி. இவர்கள் ஒவ்வொருவரும் பரிந்துணர்வோடும் சிரத்தையோடும் அக்கறையோடும் பதிலளித்தனர். அது எனக்கு இப் பணியை மேலும் செழுமைப்படுத்தவும் சீராக்கவும் உதவியது.
சி. ஆனந்த்
புது தில்லி
26 ஜனவரி 2014
தொடர்புடைய மற்ற பதிவுகள்: