பெரியாரும் சமதர்மமும் - நூலைப் பற்றியும்... நூலாசிரியரைப் பற்றியும்....
பெரியார் ஈ.வெ.ரா. யார்?
கடவுள் மறுப்பாளர்; பார்ப்பனீய வெறுப்பாளர்; சாதி-- மதம் --சாத்திரங்களை ஒழிக்கப் போராடிய புரட்சியாளர்; வகுப்புரிமையைப் பெற்றுக் தந்தவர்; தமிழனுக்குச் சுயமரியாதை ஊட்டியவர். பொதுமக்கள் பலரிடமிருந்தும் பெரியாரைப் பற்றிக் கிடைக்கும் மதிப்பீடுகள் இவையாகும்.
ஆனால் இந்தச் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத வகையில் பெரியாரின் சிந்தனைப் போக்கும் செயலோட்டமும் அமைந்திருந்தன, அது என்ன? தம்முடைய பொது வாழ்வின் தொடக்கக்காலம் தொட்டு இறுதி மூச்சு வரை அவர் சமதர்மக்காரராகவே வாழ்ந்தார்; செயல்பட்டார். இந்த உண்மையைச் செய்திகளாக நன்கு அறிந்தவர்கள் அவருடைய சமகாலத்தவர்கள். பிற்காலத்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இவையே வரலாறாக வடிவமைக்கப்பட வேண்டும். பெரியாரின் எழுத்தும் - பேச்சும் - செயல்பாடும் - சமதர்மச் சமுதாயம் அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர் சமதர்மத்துக்காகப் பாடுபட்ட செய்திகளை வரலாறாகவே எழுதியுள்ளார் தோழர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்.
தோழர் நெ.து. சுந்தரவடிவேலு என்பவர் யார்?
1912-ஆம் ஆண்டில் செங்கற்பட்டு மாவட்டம், நெய்யாடு பாக்கம் கிராமத்தில் நெ.ச. துரைசாமி -சாரதாம்பாள் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பிறந்தவர். 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டுக்கு நேரில் சென்று கண்டு - கேட்டு உணர்வு பெற்றவர். சுயமரியாதை இயக்கத்துடன் அன்று நெ.து.சு. அவர்கள் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் கல்லூரிக் கல்வியை ஒழுங்காக முடித்து எம்.ஏ. எல்.டி பட்டங்களைப் பெற்றார். அரசுப் பணியில் சேர்ந்தார். கலப்புத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினார். சுயமரியாதைச் சமதர்மக்காரராக வாழ்ந்து கொண்டே அரசுப் பணிகளில் உயர் பதவிகளைப் பெற்றார்.
தமிழ்நாடு பொதுக் கல்வி -- பொது நூலக இயக்குநராக, தமிழ்நாட்டின் இணை கல்வி ஆலோசகராக, தமிழ்நாட்டின் தலைமைக் கல்வி ஆலோசகராகவும் கூடுதல் செயலாளராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, இவ்வாறாகப் பல பெரிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். இந்திய அரசின் 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்ற இவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் -- இன்றும் -- தம் 75-ஆம் வயதிலும் சுய மரியாதை - சமதர்மக் கொள்கை பரப்பலுக்கு நாள்தோறும் எழுதியும் பேசியும் தொண்டாற்றி வருகிறார். முதலாவது சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட நெ.து.சு. அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் சமகாலத்தவராகிறார். பெரியார் சமதர்மத்துக்காகப் பட்ட பாட்டினை விளக்கித் தாம் எழுதியுள்ள நூலுக்கு இவர் "பெரியாரும் சமதர்மமும்” எனப் பெயரிட்டுள்ளார். நேரில் உரையாடுவது போன்ற உணர்ச்சி நெ.து.சு. அவர்களுடைய எழுத்தில் காணப்படும் தனிச் சிறப்பு படிப்போர்க்குச் சோர்வூட்டாமல் கதையோட்டம் போல் நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தி இவர் இந்நூலினை எழுதியுள்ளார்.
இராஜாஜி புகுத்திய கட்டாய இந்தி - குலக் கல்வித்திட்டம்... திராவிடர்கழகத்திலிருந்து அண்ணா பிரிந்தது தமிழகக் கம்யூனிஸ்டு கட்சியும் பெரியாரும்... ஆகிய செய்திகள் குறித்து இவர் இந்நூலில் கூறும் ஆராய்ச்சி நோக்குடைய கருத்துகள் பொது வாழ்வில் உள்ள திறனாய்வுக்காரர்கள் - கட்டுரையாளர்கள் - பேச்சாளர்கள் ஆகியோர் முழுதும் அறிந்து கொள்ள வேண்டியனவாகும்.
புரட்சியாளர் பெரியார், கல்வி வள்ளல் காமராசர், லெனின் வாழ்கிறார், நஞ்சுண்டவர் ஆகிய நூல்களின் ஆசிரியர். பயண நூல்கள் எழுதுவதில் வல்லவர். 'நினைவு அலைகள்' என்ற பெயரில் இவர் எழுதிய தன் வரலாற்று நூல் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. மூன்றாவது தொகுதி வெளிவர உள்ளது. நாற்பதுக்கும் மேலான நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.
இந்தியச் சூழலுக்கேற்பப் புரட்சி இங்கே மலர வேண்டும் என்ற சிந்தனையும், செயலும் கொண்டவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல் "பெரியாரும் சமதர்மமும்".
பெரியார் அன்பர்களின் "வீட்டு நூலகத்தில்” இடம்பெறும் தகுதியும் -- சிறப்பும் தேவையும் கொண்ட நூல் "பெரியாரும் சமதர்மமும்",
--கலசம்