Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியார் சாதித்ததுதான் என்ன? - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
முன்னுரை

வே. ஆனைமுத்து

ஏ கழுதை, எசமான் வர்றது கண்ணுக்குத் தெரியிலே? மடமடண்ணு வர்றியே வரப்பு மேலே!

போடா திரும்பி என்று உறுமி தீண்டாப்படாதவனை விரட்டிவிட்டுப் பண்ணையார்கள் விசுவநாத அய்யர், கிருஷ்ணசாமி ரெட்டியார், கந்தசாமிப்பிள்ளை, இராமசாமி முதலியார் இவர்களுக்குக் காரியஸ்தன் கந்தசாமி போன்றோர் பராக்குக்கூறிய காலம் 1940 வரை கூட நீடித்தது.

ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளியன் வளாரினாலும், எருக்கங்குச்சியினாலும் செம்மையான அடி கொடுக்கப்பட்டது. இது அன்றைய சமூக நீதி - சாதி ஆசாரம்.

இந்த மிருகத்தனமான கொடுமைக்கு முடிவு கட்டியவர் பெரியார். டேய்! கொட்டாங்கச்சியிலே வாங்கிக்கோ. இல்லேண்ணா அந்த மூங்கிக்குழாயிலே குடிச்சுக்கோ.

தண்ணீர்ப் பந்தலிலும், தேநீர் விடுதியிலும் எல்லாச் சாதிக்காரர்களும் தீண்டப்பாடதவரை நடத்தியவிதம் 1950 வரையில் கூட இதுதான். இந்தக் கொடூரப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், பெரியார்.

மாடு மேய்க்கற பசங்கள்லாம் இங்க வந்து கழுத்தறுப்பு பண்றேளே! உங்களுக்கு எங்கடா படிப்புவரும்? எப்படிடா சரசுவதி கடாட்சம் கெடைக்கும்? முகரைக்கட்டயப்பாரு! கணக்கில் தடுமாற்றம் அடைந்த வீட்டுப் பாடத்தில் மட்டம் போட்டுவிட்ட திராவிடர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் புரோகிதர் வீராசாமி அய்யர், பிரைமரி பள்ளி ஆசிரியர் இராமசாமி அய்யங்கார் ஆகியோர் செய்த ஏகத்தாளமான அர்ச்சனை இது. 1942 வரையில்கூடக் காதாரக்கேட்டுக் கண்ணார நாம் கண்ட காட்சி இது.

இந்த ஓரவஞ்சனை தர்மத்தை அடியோடு தகர்த்து எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர், பெரியார்.

நீ சந்நிதிக்கு அப்பாலே தேங்கா, பழத்தட்டை வெச்சுடு; நீ கிராதிக்கு அன்னாண்டே தள்ளி நின்னுக்கோ; தீபாராதனையை வெளியே நின்று நீ பாத்துக்கோ என்று கூறி, மார்கழி முப்பது நாளும் குளித்து முழுகிக் கோலம் பூண்டு கோவில்களுக்குச் சென்று பக்தியைச் சுரந்த திராவிடர்களுக்குக் கோவில் அர்ச்சகன் தந்த மரியாதை 1950 வரையில்கூட இதுதான். இவற்றை அடியோடி மாற்றி.கர்ப்பக் கிருகத்துக்குள் நான் ஏன் போகக்கூடாது? என்ற ஒவ்வொருவரும் இன்று உரத்துக் கேட்கும் அளவுக்கு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர், பெரியார்.

ஏய்! ஒங்க அண்ணாச்சி வந்திருக்கார்டீ. சட்டுப்புட் டுண்ணு ஆக்கி அரிச்சி காலாகாலத்திலே சாப்பாடு போடுடி!

காலமெல்லாம் கண்ணுக்கு இமைபோல் நிற்கும் காதல் மனையாளை நம் பாட்டனும் அப்பனும் விளித்த விதம் இப்படி. இந்தக் காட்டுமிராண்டிப் பழக்கம் இன்று பழங்கதையாகி வருவதற்கு அடிப்படையாக அமைந்தவர், பெரியார்.

பொட்டச்சி படிச்சா போச்சி. கள்ளப் புருசனுக்குத் திருட்டுக் கடுதாசி எழுதுவா.பொம்பளைக்கி சொத்து குடுத்தா அடங்கி இருக்க மாட்டா, இதெல்லாம் நம்ப சாதிக்கு அடுக்காது.தத்தம் சாதியிலிருந்து எல்லா இளங் கைம்பெண்களுக்கும் ஏக கதாநாயகனாக விளங்கிய அந்தந்தச் சாதி நாட்டாண்மைக்காரன் பெண்கல்விக்கும், பெண் சொத்துரிமைக்கும் போட்ட தடைச்சட்டம் அவ்வளவு கொடுமையானது.

இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று எல்லாநிலைக் கல்விக்கும், சொத்துக்கும் உரிமை உள்ளவர்களாக நம் பெண்களை ஆக்கியவர், தந்தை பெரியார்.

ஏலே! குடுத்ததை வாங்கிக்கிட்டுப் போவியா! அதை உட்டுட்டு, பண்ணையை நேராவே எதுத்துக்கேக்கி றியே! என்னா தெய்ரியம்டா ஒனக்கு? ஏழைத் தொழிலாளிக்கு உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்கக்கூட உரிமை கிடையாது என்று இருந்த இந்த அவலநிலையை மாற்றிவிட்டவர், பெரியார்.

அண்ணய்க்கி எழுதுனவன் அளந்ததுதான் நம்புளுக்கு தக்கும். வயிறார சோறு, இடுப்பாரத் துணி, ஓட்டு ஊடு இதெல்லாம் எல்லாத்துக்கும் வா...ண்ணா வருமா? என ஏங்கிக்கூறித் தன்னைத்தானே நம்மவர் தாழ்த்திக் கொண்ட நிலையை மாற்றி, நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவர்க்கும் சொந்தம் என்பதை 1925 முதலே சொல்லித் தந்து சமதர்ம சமஉரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர், பெரியார்.

நாமள்லாம் நாற்காலியிலே ஒக்காந்துக்கிட்டு, பங்கா காத்து வாங்காணும்னா அது முடியுமா? அதுக்கிண்ணே பொறந்த வங்களுக்குத்தான் அது கெடைக்கும். இப்படி மூட வேதாந்தம் பேசிக்கொண்டு பங்கா இழுப்பது, எடுபிடி வேலை செய்வது, வாடா - போடா என்கிற கீழ்நிலை வேலைகளைப் பார்ப்பது என்பதே தங்களுக்குக் கொடுத்துவைத்த பாக்யம் என 1946 வரையில் நினைத்துக் கிடந்த மர மண்டைத்தனத்தை அடித்து நொறுக்கி, எழுத்தர் வேலை முதல் உயர் நீதிமன்ற உயர் நீதிபதி வேலை வரையில் திராவிடருக்கு இன்று வந்து சேர வழி வகுத்தவர், பெரியார்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு