பெரியார் : ஆகஸ்ட் 15 - முன்னுரை
பெரியார் : ஆகஸ்ட் 15 - முன்னுரை
தலைப்பு |
பெரியார் : ஆகஸ்ட் 15 |
---|---|
எழுத்தாளர் | எஸ்.வி.ராஜதுரை |
பதிப்பாளர் |
விடியல் |
பக்கங்கள் | 701 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2006 |
அட்டை | தடிமனான அட்டை |
விலை | Rs.450/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/periyar-august-15.html
முன்னுரை
'பெரியார்: ஆகஸ்ட் 15' நூலின் முதல் பதிப்பு வெளிவந்த பிறகு எட்டாண்டுக் காலத்தில் தமிழக, இந்திய, அனைத்துலக அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பல ஏற்பட்டுள்ளன. மத்தியில், நரசிம்ம ராவ் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுதான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஜியோனிச இஸ்ரேலுக்கும் சார்பான வகையில் பெரும் மாற்றங்களைக் கண்டது. உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கட்டளைகளுக்கு இணங்கி கட்டமைப்புச் சீர்திருத்தக் கொள்கை' என்னும் பெயரால் உலக முதலாளியம் இந்தியாவைத் தடையின்றிச் சுரண்டும் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டப்பட்டது. 'புதிய பொருளாதாரக் கொள்கையை உற்சாகத்துடன் வரவேற்ற இந்தியப் பெருமுதலாளி வர்க்கமும் உயர்சாதிக் குட்டி பூர்ஷ்வா வர்க்கமும் (இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் எனச் சொல்லப்படுவர்கள் -Non - Resident Indians - இதில் அடக்கம்) அந்தப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் ஒரு வலுவான இந்தியாவை, உலகில் ஒரு 'வல்லரசாக' திகழக்கூடிய இந்தியாவை உருவாக்குவதற்குப் பொருத்தமான அரசியல் கருத்துநிலையாக (Politica idealogy) 'இந்துத்துவத்தை' தெரிவு செய்து கொண்டனர்.
காங்கிரஸ் அரசாங்கமே அதற்கான எல்லா அஸ்திவாரங்களையும் அமைத்திருந்தது. அந்த அரசாங்கம் பின்பற்றி வந்த கொள்கைகளால் இந்திய வெகுமக்களுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றங்கள், சங் பரிவாரத்தின் இடைவிடாத வகுப்பு வாதப் பிரச்சாரம், தமது அரசியல், சமூக அடித்தளத்தை, பிற்படுத்தப் பட்ட இடைநிலைச் சாதிகளிடையே மட்டுமின்றி, கணிசமான அளவுக்குப் பழங்குடியினர், தலித்துகள் ஆகியோரிடையேயும் விரிவுபடுத்திக் கொள்ள இந்துத்துவவாதிகள் திட்டமிட்டுச் செயல்படுத்திய முயற்சிகள், இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்துவதில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, தலித் சமுதாய அரசியல் தலைவர்களின் சுயநல, சந்தர்ப்பவாத வேட்கைகள் ஆகியன இணைந்து 1998 முதல் 1999 வரை 13 மாதங்களும், பின்னர் ஜெயலலிதா தலைமையில் 'மூன்றாவது அணி' எனச் சொல்லப்பட்டதும் பெரிதும் நாடாளுமன்ற இடதுசாரிகளால் முக்கியப் பாத்திரம் வகிக்கப்பட்டதுமான ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, 1999 முதல் 2004 வரை ஐந்து ஆண்டுகளும் மத்தியில் இந்துத்துவச் சக்திகள் ஆட்சி புரிய உதவின. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி', காங்கிரஸ் கடைபிடித்த அதே புதிய பொருளாதாரக் கொள்கையை இன்னும் வேகமாக, ஆழமாக நடைமுறைப்படுத்தியது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனி அமைச்சகம் உருவாக்கியது அந்த ஆட்சியின் சாதனைகளிலொன்று! அம்பேத்கரையும் இந்தியப் பொதுவுடமை இயக்கத்தையும் இழிவுபடுத்தி எழுதி வந்த அருண் ஷோரிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அவருக்கு இந்த அமைச்சகப் பொறுப்பை வழங்கினர் இந்துத்துவவாதிகள். முதல் 13 மாத ஆட்சிக் காலத்தில் பெரும் சாதனை 'யாக, பொக்ரானின் அணுகுண்டை வெடித்து, பாக்கிஸ்தானை மிரட்டத் தொடங்கிய இந்துத்துவ ஆட்சியாளர்களுக்குப் பதிலடியாக பாக்கிஸ்தானும் அணுகுண்டை வெடித்துக்காட்டியது. உலகப் போலிஸ்காரனான அமெரிக்காவின் கோபக் கணைகளும் இங்கு வந்து விழுந்தன. எனவே, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்வதற்காக, வெளியுறவுக் கொள்கையில் இன்னும் பெரிய மாற்றங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தியது.
2001 செப்டம்பர் 11 இல் நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, 'உலக பயங்கரவாதத் திற்கு எதிராக ஜார்ஜ் புஷ் தொடங்கிய புனிதப் போரில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு இந்துத்துவச் சக்திகள் மனுப் போட்டனர். 2003 இல் ஈராக் மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் இந்தியா நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை என்றாலும், அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டது. கோல்வால்கர் கனவு கண்ட இந்துப் பேரரசை நிறுவுவதற்கான ஒத்திகையாக குஜராத்தில் 2002 இல் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான இனப் படுகொலை நடத்தப்பட்டது. கிறிஸ்துவர்கள் மீதும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2001 டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த எந்தவொரு விசாரணையும் செய்யாமல், ஏறத்தாழ ஓராண்டுக் காலம், இலட்சக்கணக்கான இந்தியத் துருப்புகள் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டு, இந்தியா ஒரு அணு ஆயுதத் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய மிக நெருக்கடியான நிலையை இந்துத்துவ சக்திகள் உருவாக்கினர். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த இந்தப் பதற்ற நிலையின் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாயின; இந்தப் போர் முயற்சிகளுக்கான பொருளாதாரச் சுமை முழுவதும் இந்திய வெகுமக்கள் மீதே விழுந்தது.
மேலும், 1998 முதல் 2004 வரையிலான காலகட்ட ஆட்சியை மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்ட இந்துத்துவச் சக்திகள், இந்தியாவிலுள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்குச் சக்திகளால் சாதிக்கப்பட்ட அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு, பாதுகாப்பு, நீதி பரிபாலனத் துறைகளில் மிக ஆழமாக ஊடுருவி அங்கு தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டனர். இந்திய வெகுமக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட 'தடா சட்டம் நீக்கப்பட்டவுடன், அதற்குப் பதிலாக இன்னொரு கொடிய சட்டமான “பொடா' வைக் கொண்டு வந்தனர். நாடாளுமன்றத்தில், இந்தியாவின் தேசப் பிதா' எனச் சொல்லப்படும் காந்தியின் உருவப்படம் உள்ளசுவருக்கு நேர் எதிரில் அவரைச் சுட்டுக் கொல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியவர்களிலொருவரான சாவர்க்கரின் படத்தையும் திறந்து வைத்தனர். பார்ப்பன - பனியா இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள நீர்த்துப் போன அடிப்படை உரிமைகளையும், மதச் சார்பற்ற தன்மையையும் கூட ஒரேயடியாக ஒழித்துக் கட்டுதவதற்காக அந்த அரசமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் முயற்சியும் நடந்தது.
2004 இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், இந்துத்துவச் சக்திகளை முறியடிக்க, அவர்கள் இழைத்த வகுப்புவாதக் குற்றங்களை விசாரணை செய்து தண்டிக்க எந்தவொரு திட்டவட்டமான, துணிச்சலான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க சார்பு, இஸ்ரேலிய சார்பு வெளியுறவுக் கொள்கையை மேலும் பலப்படுத்தி வருவதுடன், பன்னாட்டு மூலதனம் வெள்ளமாய் பாய்ந்து வருவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்றது. இந்தியாவில் உலக முதலாளியம் கண்டுவரும் வளர்ச்சி, இந்திய தேசத்தின் பொருளாதார வளர்ச்சியாகச் சித்திரிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார வலயங்கள் (Special Economic Zones) என்னும் வியர்வைக் கூடங்களை அமைத்து இந்திய உழைக்கும் மக்களைக் கடுமையாகச் சுரண்டும் பொருட்டு ஏழை மக்களுக்கு உரிய நிலங்கள் அரசாங்கத்தாலேயே கையகப்படுத்தப்படு கின்றன. பன்னாட்டு மூலதனத்தின் 'மலட்டு விதைகள்', மரபீனிப் பயிர் வகைகள் என்னும் வடிவங்களில் இந்திய விவசாயிகளை ஒழித்துக்கட்டும் விவசாயத் தொழில் நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் தலித் மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளைத் தரைமட்டமாக்கி ஆயிரக் கணக்கான குடும்பங்களைத் தூக்கியெறியும்படி இந்திய நீதி பரிபாலனத் துறையே ஆணைகள் வழங்கி வருகின்றது. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்கள் ஏற்கனவே விளிம்பு நிலையிலுள்ள தலித் மக்களை அதலபாதாளங்களுக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை, பார்ப்பனரல்லாதார் இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் திராவிட அரசியல் கட்சிகளும், இட ஒதுக்கீடு', 'ஈழத் தமிழர் விடுதலை' எனப் பேசிவரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கட்சிகளும் இந்துத்துவத்தைத் தூக்கி நிறுத்துவதில் மாறி மாறிப் பாடுபட்டன. சில தலித் அமைப்புகளும் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தக் கூட்டணிகளை ஆதரித்தன. 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடப்பதற்குச் சில மாதங்கள் முன் வரை இந்துத்துவ அரசாங்கத்தில் பங்கேற்று வந்த இந்த மாநிலக் கட்சிகள் ஒன்றுகூட, மேற்சொன்ன பாரதூரமான இந்துத்துவ நடவடிக்கைகள் ஒன்றைக்கூட விமர்சிக்க வில்லை. நவதாராளவாத உலகமயமாக்கலின் பயன்களை முழுமை யாகத் துய்க்க விரும்பிய இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்ட தமிழகச் சுரண்டும் வர்க்கத்தினரின் அரசியல் பிரதி நிதிகளாகவே இந்த மாநிலக் கட்சிகள் செயல்பட்டன. இந்தக் கட்சி களைச் சேர்ந்த ஒன்றிரண்டு தலைவர்கள் சீருடையணியாத ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர்களைப் போலவே பொதுக்கூட்டங்களில் பேசி வந்தனர். 'இரத யாத்திரை மேற்கொண்டு, நாட்டில் இரத்தக் களரியை உருவாக்க முயன்ற அத்வானியைச் சிறையில் தள்ளிய ஒரு லல்லு பிரசாத் யாதவுக்கு இருந்த துணிச்சலில் நூற்றிலொரு பங்குகூட தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகளிடம் இல்லாமல் போய்விட்டது.
இந்தச் சூழ்நிலைக்கான மூல வித்து, 1947 ஆகஸ்ட் 15 குறித்து பெரியாரின் இயக்கத்திற்குள்ளேயே எழுந்த கருத்து வேறுபாட்டில் காணப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகின்றது. இதற்குச் சான்றாக, 1998 அன்று சென்னைக்கு வருகை தந்த அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயி வெளியிட்ட அறிக்கையைக் கூறலாம் (இணைப்பு VII). இந்துத்துவச் சக்திகளுடன் கூட்டு சேர்ந்திருந்த நாட்களிலும் சரி, சேராமலிருந்த நாட்களிலும் சரி 'சமூக நீதி வீராங்கனை' என்றும் 'பெண் பெரியார்' என்றும் பெரியாரின் 'அதிகாரப்பூர்வமான வாரிசு களால் அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதாவின் தலைமையிலிருந்த தமிழக அரசாங்கம், இந்துத்துவச் செயல் திட்டங்களை மிக நாசூக்காக நடைமுறைப்படுத்தி வந்தது. தமிழகத்திலுள்ள முதன்மையான அரசியல் கட்சிகளைப் போலவே, பிற மாநிலங்களில் 'மதச் சார்பற்ற', 'சோசலிச சக்திகள் எனக் கருதப்பட்டு வந்த சில அரசியல் கட்சி களும்கூட இந்துத்துவச் சக்திகளின் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவை யாக மாறின. இந்த நிகழ்ச்சிப் போக்குகளுக்கு, 'வண்ணம் மாறி விட்டது, எனவே எண்ணமும் மாறிவிட்டது' என எளிமைப்படுத்தப் பட்ட விளக்கம் கொடுக்காமல், பொதுவாக, இந்தியாவிலும் குறிப் பாகத் தமிழகத்திலும் கடந்த ஐம்பது - அறுபது ஆண்டுக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களின், குறிப்பாக, இடைநிலை சாதியினரிடையே ஏற்பட்ட பொருள்வகை மாற்றங்களின், அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதை இந்த நூலின் கடைசி அத்தியாயம் கூறுகிறது. எட்டாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அக் கருத்துகளை மாற்றிக் கொள்வதற்கான காரணம் ஏதும் எனக்குப் புலப்படவில்லை.
முற்றிலும் எதிர்மறையான அரசியல் போக்குகளே மேலோங்கி யிருந்த மேற்சொன்ன காலகட்டத்தில், தமிழகத்தில் தலித் மக்களிடையே முன் எப்போதுமில்லாத எழுச்சியும், உரிமைக் கோரிக்கை களும் எழுந்தன. பொருளியல் வகையில் சுரண்டப்படும், அரசியல் - பண்பாட்டு வகையில் ஒடுக்கப்படும் தலித் வெகுமக்கள் தங்கள் சுயமரியதையையும் விடுதலை உணர்வையும் அறுதியிடுவதை நம்மால் காண முடிகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே தமிழகச் சிந்தனையுலகில் குறிப்பிடத்தக்க தலித் சிந்தனையாளர்களும் படைப் பாளிகளும் தனிச் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். திராவிட அரசியல் கட்சிகள், தலித்துகளுக்குச் செய்யத் தவறியவை, அக்கட்சிகளால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியன பற்றிய நியாயமான கோபங்கள் இந்தச் சிந்தனையாளர்களின் எழுத்தில் வெளிப்பட்டன. எனினும், இந்தச் சிந்தனையாளர்களில், எழுத்தாளர் களில் சிலர், தலித்துகளின் நியாயமான கோபத்தை, பார்ப்பன-தலித் கூட்டணியை உருவாக்குவதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். முன்பு பெரியார் மீதும் திராவிடர் இயக்கம் மீதும் காங்கிரஸ் தேசிய வாதிகள், பார்ப்பனர்கள், கம்யூனிஸ்டுகள், சிறுபான்மை மத வெறி யர்கள் போன்றோர் தொடுத்த தாக்குதல்களைவிட நச்சுத்தனமான தாக்கு தல்களைத் தொடுக்கத் தொடங்கினர். பெரியாரினதும் அவரது இயக்கத் தினதும் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமலும் தக்க சான்றுகளோ ஆதாரங்களோ இல்லாமலும், தமது விவாதக் களத்தைச் சரிவர வரையறுக்காமலும் பெரியார் மீதான அவதூறு இயக்கத்தைத் தொடங்கிவைத்தனர். ஒரு கருத்தை, அது சொல்லப்பட்ட சூழலிலிருந்து வெட்டிப் பிரித்தும், ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு வலிந்து பொருள் கூறியும், பெரியாரை முஸ்லிம் விரோதி யாக, அம்பேத்கர் விரோதியாக, தலித் விரோதியாக - ஏன், ஒரு இந்துத் துவச் சிந்தனையாளராகவும்கூட சித்திரிப்பதற்குப் பார்ப்பனப் பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் அனைத்திந்திய அளவில் இந்தத் தலித் அறிவுஜீவிகளுக்கு உதவிகரமாக இருந்தன. இத்தகைய அவதூறுப் பிரச்சாரத்தைச் செய்ய 'தலித்' அடையாளத்தை ஒரு பாதுகாப்புக் கவச மாகப் பயன்படுத்திக் கொண்ட இவர்கள், தங்களால் தூக்கியெறியப் பட்ட பெரியாரைக் காட்டிலும் ஒரு முற்போக்கான அரசியலை உருவாக்கினார்களா என்றால், அந்தோ பரிதாபம், அது சிறிதுகூட இல்லை.
மாறாக, பெரியாரைத் தனது சிந்தனையிலிருந்தே அப்புறப் படுத்திய சுத்தமான பார்ப்பனர்களோடும், பெரியாரின் கொள்கையை நீர்த்துப் போகச் செய்த பெரியார் பேரன்களோடும்' சமயத்துக்கேற்ற படி ஒன்று கலந்துவிட்டனர். தங்களது சொந்த முன்னேற்றத்தையும் சுய விளம்பரத்தையும் மட்டுமே கொண்டு இவர்கள் நடத்தும் தலித் உட்சாதி அரசியல், பல்வேறு சிந்தனை மரபுகளைக் கற்று, தலித் விடுதலைக் காகப் போராட முன்வந்துள்ள ஏராளமான இளைஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது; நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று அவர்களால் இனம் பிரித்துப் பார்க்க முடியாமல் செய்துள்ளது. இத்தகைய சிந்தனையாளர்களின் அவதூறுப் பிரச்சாரங்களை எதிர்கொள்கிறவர்கள் அனைவருமே 'தலித் - விரோதிள் என எளிதாக முத்திரை யிடப்பட்டுவிடுகின்றனர். ஆயினும், பெரியார் மரபிலிருந்து உள் உந்துதல் பெறுகின்றவர்கள், இத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களால் மனந்தளரவேண்டியதில்லை.
பெரியார்: ஆகஸ்ட் 15 நூலின் முக்கிய அம்சங்கள் முதல் பதிப்புக்கு எழுதப்பட்டுள்ள நீண்ட முன்னுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பதிப்பில் சில முக்கியத் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 'தமிழ் தேசியம்' பேசுகின்ற சிலர், 'திராவிட / தமிழ் தேசியம்' எனப் பெரியார் பேசி வந்ததைக் கொச்சைப்படுத்தியும் சிதைத்துக் கூறியும் வருவதைக் கருத்தில் கொண்டு சில வரலாற்றுத் தகவல்கள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரியாரைப் பொருத்தவரை, ஒரு தேசம்/ தேசியம் என்பது நிலப்பிரதேசத்தை, 'விஸ்தீரணத்தை ' அடிப்படையாகக் கொண்டதல்ல; இலட்சியத்தை -- சாதி, மதம், வர்க்கம், பாலின ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய ஒரு சமுதாயத்தை அமைப்பது என்னும் இலட்சியத்தை - அடிப்படையாகக் கொண்டது.
முதல் பதிப்பில் பெரியாரும் அம்பேத்கரும்' என்னும் பகுதியில் கூறப்பட்டிருந்த சில தகவல்களைக் கேள்விக்குட்படுத்தியிருந்தார் தலித் தோழரொருவர். அவரது விமர்சனங்களுக்கு நான் அந்தச் சமயத்தி லேயே பதில் எழுதினேன் என்றாலும், சாதி ஒழிப்பு என்னும் பொது வான இலட்சியத்தைக் கொண்டிருப்பவர்களிடையே சிறு பிணக்குகள் கூட ஏற்படக்கூடாது என்னும் ஆர்வத்தில் எனது பதில் கட்டுரையை நானாகவே திரும்பப் பெற்றுக்கொண்டேன். ஆனால், பெரியாரோடு சேர்த்து நானும் ஒரு 'தலித் - விரோதியாக ஆக்கப்பட்டுவிட்டதால், நான் எழுதிய கருத்துகள், என்னால் மேற்கோள் காட்டப்பட்ட சா.குருசாமியின் (குத்தூசி குருசாமியின்) கருத்துக்கள் சரியானவை, வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதைக் காட்டுவதற்காக சில தகவல்களை இந்த இரண்டாம் பதிப்பில் சேர்த் துள்ளேன். வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தாற் போல' என்று சொல்வதற்கேற்ப, சா. குருசாமி பயன்படுத்திய ஒரு தடிப்பான வார்த்தையைக் கொண்டு அவரையும் பெரியார் இயக்கத் தினரையும் என்னைப் போன்றோரையும் அம்பேத்கர் - விரோதியாக, தலித் - விரோதியாகக் காட்டவும் முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. குருசாமி பயன்படுத்திய குறிப்பிட்ட சொற்பிரயோகத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அந்த வார்த்தை இலட்சிய நோக்கமற்ற வெறும் அவதூறுக்காகப் பயன்படுத்தப்பட்டதல்ல. அன்று அவருக்குச் சரியெனப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு, அரசியலுக்கு அவர் தந்து வந்த உணர்ச்சிவசப்பட்ட ஆதரவின் காரணமாக வெளிப்பட்ட ஒரு அவப்பேறான சொல்தான் அது. பெரியாருக்கும் அம்பேத்கருக்கு மிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஆழமான அரசியல் தன்மை வாய்ந்தவை; இந்தியாவின் தேசிய இனப் பிரச்னை, தமிழ் தேசியம், ஈழவிடுதலை என்பனவற்றில் தலித் இயக்கங்களும்கூட ஆர்வம் காட்டி வரும் இன்றைய சூழலில், இந்தப் பிரச்சனைகளுக்கான வரலாற்றுப் பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு, இரண்டு மாபெரும் சிந்தனை யாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும் தெரிந்து கொள்வது அவசியம்.
பெரியார் மரபுக்கு உரிமை கொண்டாடும் திராவிட அரசியல் கட்சிகளும் சரி, பெரியாரை 'இட ஒதுக்கீட்டுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வேறு சில கட்சிகளும் சரி, ஒரு போலியான தமிழ் தேசியத்தையும், தமிழ் மரபு, பண்பாடு, அரசியல், வரலாறு ஆகியன பற்றிய வெற்றுச் சொல்லாடல்களையும் புனைவு களையும் உருவாக்கி, அவற்றை வெகுமக்களிடையே பரப்பி, இந்து - இந்திய தேச-அரசை எவ்வகையிலும் கேள்விக்குள்ளாக்குவதைத் தடுத்து வருகின்றன. இந்திய தேசத்தின், தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்களுக்கு, வடகிழக்கு மாநில மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களைப் பற்றி இவை வாய் திறப்பதில்லை. ஈழப் பிரச்சனையில் 'மத்திய அரசின் கருத்தே எங்களது கருத்து' என்னும் மொண்ணையான விளக்கங்கள் தரப்படுகின்றன. தென்னாசியப் பிராந்தியத்தில் தனது பொருளாதார, புவிசார் (geopolitical), இராணுவ மேலாண்மையை நிலை நாட்ட விரும்பும் இந்திய தேச அரசு, ஈழப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என சில தலித் அறிவுஜீவிகள் கூறத் தொடங்கியுள்ளனர். தேச பக்தியின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை, ஒடுக்குமுறை களைத் தட்டிக் கேட்பதற்கு நாடாளுமன்ற இடதுசாரிகளோ, மிதவாதி களோ, 'மதச்சார்பற்ற' சக்திகளோ, யாரும் தயாராக இல்லை. 'மாநில சுயாட்சி' கோரிக்கையும் கூட கிடப்பில் போடப்பட்டுவிட்டது. எனவே தான், இந்திய தேச உருவாக்கத்தை, அதற்கு அஸ்திவாரமாக இருந்த அரசமைப்பு அவையைத் தொடக்கம் முதல் இறுதிவரை விமர்சித்து வந்த ஒரே ஒரு சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான பெரியாரின் மரபு இன்று நமக்குத் தேவைப்படுகிறது. இதன் பொருள், காலவழக்கொழிந்த திராவிட நாடு' கோரிக்கையைத்தூக்கிப் பிடிப்பது அல்ல; தலித்துகளை முதன்மையான கூறாகக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்று, "வர்ணா சிரமக் கொடுமையும், ஏழை - பணக்காரன், ஆண் - பெண் வித்தியாசங் களும் இல்லாத" 'சமதர்ம பூமியை', உடனடியாகச் சாத்தியமான ஒரு ‘விஸ்தீரணத்தில் கட்டுவதற்கான முயற்சி முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான்; அம்பேத்கர், பெரியார், சிங்காரவேலர் ஆகியோரின் மரபுகளை ஆக்கபூர்வமான, காலத்துக்கேற்ற ஒரு கூட்டிணைவாக (synthesis) ஆக்குவதற்கு முயற்சி செய்வதுதான்.
கோத்தகிரி
டிசம்ப ர் 6, 2006
எஸ். வி. ராஜதுரை
தொடர்புடைய மற்ற பதிவுகள்: