Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - நவீனக் கவிதைகளில் பெண்ணியம்

பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - நவீனக் கவிதைகளில் பெண்ணியம்

 

தலைப்பு

பெரியாரும் நவீனப் பெண்ணியமும்

எழுத்தாளர் பத்மாவதி விவேகானந்தன்
பதிப்பாளர்

விழிகள்

பக்கங்கள் 128
பதிப்பு முதற் பதிப்பு - 2011
அட்டை காகித அட்டை
விலை Rs.120/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyarum-naveena-penniyamum.html

 

நவீனக் கவிதைகளில் பெண்ணியம்

சமூகம் என்பது ஆண், பெண் உறவின் மீதே கட்டமைக்கப்பட்டதாகும். ஆனால் பெண்ணை பலவிதங்களில் ஆணினம் கட்டுப்படுத்தியே வந்துள்ளது. தொடக்கக் காலம் முதலே அடிமைப்பட்டிருந்த பெண்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளனர். இலக்கியங்களே பதிவு செய்து வைத்துள்ளன. சங்ககாலத்தில் ஒளவையும் தன் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். கைம்மை நோயின் கொடுமையை பெருங்கோப்பெண்டும் கணவரை இழந்த பெண்கள் மீது நடத்தப்படும் சடங்கு வன்முறையை தாயங்கண்ணியாரும் சங்க காலத்திலேயே பெண்ணியம் பேசியுள்ளனர். இம் மரபு நீடித்து இருபதாம் நூற்றாண்டில் புதுக்கவிதையிலும் தொடர்கிறது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்

என சமத்துவம் போதித்துள்ளார் பாரதியார்.

பாரதியைத் தொடங்கி

வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்

வாங்கவே வந்திடு வார்கள் சில பேர்கள்

நல்ல விலை பேசுவார் - உன்னை

நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்

என பாடியுள்ளார் பாரதிதாசன். பலரும் பெண்ணியம் குறித்து இலக்கியம் படைத்து வருகின்றனர். கவிதை, கதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் எதுவாயிணும் பெண்ணியம் பேசுவது நீடிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த இலக்கியம் இன்று நவீனத் தளத்தில் இயங்கி வருகிறது. இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய பயணத்தில் நவீன யுகத்தில் மட்டுமே பெண்ணியத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கின்றது. ஆண் படைப்பாளிகளின் பங்களிப்பு இருப்பிணும் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பே பிரதானம். குறிப்பாக கவிஞர்கள்.

பாவ விமோசனத்திற்கு

ராமணுக்காக காத்திராதே...

அவன் சீதையின்

அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்

ஆழ்ந்திருக்கிறான் என பெண்களுக்கு அறிவுறுத்தி,

இராவணன் கற்புக்கும்

இவளே பொறுப்பு என ஒரு புதுப் பார்வையை, ஒரு புது சிந்தனையை, ஒரு புது கருத்தை பெண்ணியத்துக்கு ஆதரவாய் வைத்துள்ளார்; பெண்களை பெருமைப்படுத்தி உள்ளார் கவிஞர் கனிமொழி. தொகுப்பு ‘அகத்தினை’. தொன்மத்தை முன் வைத்தே பெண்ணியம் பேசுவதில் திறமையாளர். அடுத்து ‘தீண்டாமை’.

சட்டம் எழுதியாயிற்று. எல்லாச் சாதியும்

கோயிலுக்குள் வர.

எந்நாடு போனாலும்

தென்னாடு உடைய சிவணுக்கு

மாதவிலக்குள்ள பெண்கள்

மட்டும் ஆவதே இல்லை என சமத்துவம் பேசியுள்ளார். உரிமையை முன் வைக்கிறார்.

‘தீண்டாமை’ சொல்லை புறக்கணிப்பபடும் பெண்களுக்காக பயன்படுத்தி தன் வாதத்தை வைத்து ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளார். சிவன் தன்ணுடம்பில் பாதியை பார்வதி என்ணும் தன் மனைவிக்கு கொடுத்தாக புராணம். ஆனால் சிவன் கோவிலுக்குள் மாதவிலக்குள்ள பெண்கள் நுழைய கூடாது என்பது பெண்களுக்கு எதிரானது. புறக்கணிப்படும் ஒரு செயல். இதையே கவிஞர் கனிமொழியின் கவிதை எதிர்க்கிறது.

ஒரு நாளேணும்

வாழ வேண்டும்

நான் நானாக என விருப்பப்படுகிறார் கவிஞர் மு.சத்யா. இக்கவிதை இடம்பெற்ற தொகுப்பு ‘இங்கு எதுவும் நிகழவில்லை’. இவ்வரிகள் எளிமையாய் இருப்பிணும் இதில் வெளிப்பட்டுள்ள செய்தி வலிமையானது. பெண்ணுக்கான சுயம் பேசுகிறது. பெண்ணை பெண்ணாக இருக்க விடாத சமுதாயத்தை எதிர்க்க விரும்புகிறது. தொடர்ந்து

என்றைக்கேணும் ஒரு நாள்

நான் காணாமல் போய்விட்டால்

அடுப்படியின் பரணிலோ

சிலிண்டரின் மறைவிலோதான்

முதலில் தேடுவார்கள் போலும்

என புலம்பலாயிருந்தாலும் காலம் காலமாய் பெண்கள் சமையலறையிலேயே வைக்கப்பட்டிருப்பதற்கு எதிரானது. பெண் தொலைந்து போனாலும் சமையலறைக்குள்ளேயேதான் தேட வேண்டும் என்ணும் கருத்து சிந்தித்தலுக்குரியது. ஒரு வீட்டின் சமையல் அறையிலிருந்த பெண் இன்ணும் விடுதலை அடைய வேண்டும் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

கவிஞர் திலகபாமா ஒரு முக்கிய பெண் கவிஞர். ‘எட்டவாது பிறவி’ தொகுப்பில் எழுதிய கவிதை

நான் தண்டவாளமாக

எப்போதும் உன் பயணம் என் மேல்

கழிவுகளை வீசிய படி நகர

எனக்குள் ஆசை உனை

விழ்த்திப் பார்க்க

என ஒரு பெண்ணாக தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதை ‘ஆவேசம்’ என்றும் கொள்ளலாம். இதன் தலைப்பு ‘‘காதலன்’’. ‘தண்டவாளம்’ என்பதை பெண்ணுக்குக் குறியீடாக பயன்படுத்தியுள்ளார். ஆயிணும் அவரின் ‘‘வாழப்பழகிய சந்தன மரம்’’ கவிதை ஆண்களின் அடக்கு முறைக்கு எதிரானது.

அந்த அழகிய அ (சி) றைக்குள்

நான் இருந்த இடத்தில் நீ பார்க்க முடியாது

வேர்கள் விட்டிருந்தேன்.

நாளை அவைகள் சுவர்கள் அஸ்திவாரம்

தாண்டிப் பயணக்கும் மண்ணோடு...

என் பயணங்களில்

விரிசல் விடத் துவங்கியிருக்கும் சுவர்கள் பெண்னை கட்டுப்படுத்த முடியாது என்கிறார். பெண்ணியம் என்பது மீறுதலுடையது எனவும் உணர்த்தியுள்ளார். இவர் பெண்ணியம் குறித்து அதிகம் பேசாவிடிணும் பேசிய வரையில் வீரியமாயுள்ளது.

நவீன இலக்கியத்தின் முக்கியத்துவங்களில் ஒன்று குறியீடு. பெண் கவிஞர்கள் குறியீடாயும் பெண்ணிய பிரச்சனையை முன் வைத்துள்ளனர். ‘கற்பாவை’ தொகுப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி எழுதியது

சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்

சுவரோடு பந்து விளையாடுகிறவனை

பந்தை எறிய எறிய

திருப்பியடித்தது சுவர் உற்சாகமாக

ஒரேயொரு முறையாவது பந்து வீச

சுவருக்கும் வாய்ப்புத் தந்திருந்தால்

இப்படி மூர்க்கமாய் உடைத்திருக்காது

எதிரே பிரதிபலித்த நிலைக் கண்ணாடியை இதில் சுவரைக் குறியீடாக பயன்படுத்தியுள்ளார். பெண்ணை சுவராக பாவித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘சாட்சி வைத்த கொலைக்கயிறு’ தொகுப்பில் இதே தலைப்பில் எழுதப்பட்ட கவிதை

படித்தவன் லட்சியவாதியென்று

லட்சத்திற்கு வாங்கி விட்டு மிச்சமும்

வரவில்லையென்று கதவடைத்து

நெருப்பில் உடல் மூடி வேக வைக்கும் போது

கழுத்தில் சுற்றியது பொன் கயிறல்ல

சாட்சி வைத்த கொலைக்கயிறெனப் புரியும்

எழுதியவர் கவிஞர் நா.சுப்புலட்சமி. ‘தாலி’யை சாட்சி வைத்த கொலைக்கயிறு என்பது கவனிப்பிற்குரியது. வரதட்சனைக்கு எதிரானது. நேரிடையாகவே தாக்குகிறார். பெண்மையைப் போற்றுகிறது. இக்கவிதை

ஊர்க்கூடி

கொள்ளையடித்தனர்

வரதட்சனை என்னும் கவிஞர் இளம்பிறையின் ஹைக்கூவை நினைவுக்கூரச் செய்கிறது. வரதட்சனை வெளிப்படையான ஒரு பிரச்சனை. இதன் தொடர்ச்சியாகவே பல சிக்கல்கள் உருவாகின்றன. புதுக் கவிதையில் தொடங்கிய இப்பிரச்சனைக்கு எதிரான சிந்தனை நவீன இலக்கியத்திலும் தொடர்கிறது.

பெண்ணே உனக்கென்று

தனியிடம் உருவானது இங்கே எனத் தொடங்கும் கவிதையே முழுமையாய் பெண் தொடர்பான சிக்கல்களை எடுத்து வைத்துள்ளது. சிக்கல்களை பட்டியலிட்டவர் கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.

மூன்றோ ஐந்தோ என இம்சைப்படும்

தினங்களில்

நடந்து விடாதே

உன் தனியிடம் தவிர

இன்னொரு மூலைக்குச் கூட.

இந்த நாட்களில்

நீ கிடைத்த நேரமெல்லாம்

தூங்குகிறாய்

அல்லது துன்பப்படுகிறாய்.

குறைந்தபட்சம் ஒரு குட்டிப்பிச்சைக்காரி

ஆகி விடுகிறாய்

நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்.

கால் குடைச்சல் என்றாலும்

மரியாதைக்கு பயந்து

மாமியாருக்கு எழுந்து நிற்க வேண்டும்.

நடக்கப்பழகும் குழந்தைக்கு

கை கொடுத்து கால் ஆகணும்.

ஆனால்

உதவி செய்ய ஆளில்லாமல்

மாதாந்திர தொல்லைகளில்

சமைக்கும் சமையல்

தேவையானது எல்லோருக்கும்.

இன்னொரு முறை தள்ளிப்போவது தெரிந்தால்

சந்தோக்ஷம் கொள்ள முகமிருக்குமா?

முகம் கறுத்து

‘போதும் கலைத்து விடு’

என்று சொல்லப் பக்கத்து வீட்டில் கூட

ஆட்கள் இருக்கக் கூடும்

நானோ சமைத்த பின்

தனியிடம் செல்வேன்.

அவர்களெதிரே டி.வி.யில்

விளம்பரத்திற்காய் ளுகூAலு குசுநுநு யுடன்

நடக்கும் சிரிக்கும்

இளம்பெண் என பெண்களின் தொடர் உபாதைகளை, எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாய் கவிஞர் எடுத்துரைத்துள்ளார். பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளே இவைகள். இது பெண்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பாகவே சமூகம் பின்பற்றி வருகிறது. கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் குரல் மென்மையானது. எதிர்ப்பிலும் தீவரமில்லை. ஆனால் ஓர் உறுதி வெளிப்படுகிறது. இக்கவிதை இடம் பெற்ற தொகுப்பு ‘மீண்டெழுதலின் ரகசியம்’.

கவிஞர் நர்மதா - அதிகம் பேசப்படாத ஒரு பெண் கவிஞர். ஆனால் இவர் அதிகம் பேசியது பெண்ணியமே. இவர் அனைத்து கவிஞர்களையும் தாண்டி சிந்தித்து உள்ளார்.

பாரதி

விடுதலையைப் பாட

நாங்கள்

குனித்து கும்மியடிக்க

வேண்டுமா என வினவி விழிகளை விரியச் செய்து இதயத்தில் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளார். விடுதலைக்குக் கூட குனிந்து கும்மியடிக்க விருப்பமில்லை என்பது பெண்ணியத்தை உயர்த்திக் காட்டியுள்ளது. வாசிப்பவருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இக்கவிதை இடம்பெற்ற தொகுப்பு ‘நாங்கள் அவர்களல்ல’. தலைப்பிலேயே உணர்த்தியுள்ளார்.

‘எனக்கான காற்று’ தொகுப்பின் மூலம் நவீன இலக்கியத்தில் நுழைந்திருப்பவர் கவிஞர். ஏ. ராஜகுமாரி. தலைப்பே உரிமை கோருகிறது.

உருண்ட திரண்ட

இருள்

நினைவுகளில் முட்டும்

நைந்து போய்

பரிதாபமாய்த்

தொங்கும் அன்பு

உனக்குப் புரிய

நியாயமில்லை

என் வலிகள்.

சும்மாயிருக்கிறாய் என்று

என் மனதைக்

குதறும் வார்த்தைகள்

உள்பட

தேடித் தேடி

துவைத்து

பார்த்து பார்த்து

சமைத்து

முகம் பார்க்க

தளரத் துடைத்து

பிள்ளைகளைக் கவனித்து

நிமிர்கையில்

இரவு உனக்கானது.

உனக்கு

ஞாயிறு விடுமுறை.

எனக்கு? என்னும் ‘எனக்கு ‘

உரிமைக் கோருகிறது. உரத்துப் பேசுகிறது. ஒரு பெண்ணாய் விடுதலைக்கு குரல் எழுப்பியுள்ளார். இது பெண் குரல். இக்கவிதையின் இறுதி வரிகள் கவிஞர் கந்தர்வன் என்ணும் ஆண் குரலாய் பெண்ணியத்துக்கு ஆதரவாய் ஒலிக்கிறது. ஒலித்து வருகிறது.

நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை என்னும் வரிகளே அவை. பெண்ணியத்திற்கான உச்ச சான்று.

பெண்கள் பிரச்சனைகளை பலரும் பேசி வருகின்றனர் .எழுதி வருகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினரான கவிஞர் பாலபாரதியும் கவிதைகள் வழி பெண்ணியம் பேசியிருப்பது சுட்டத்தக்கது.

எவரிருத்தலையும் உணராது

எல்லார் முன்னிலையிலும்

மேல் சட்டை கழற்றி

பனியனை உதறி

கைகளுக்குள் புகுந்து

தொப்பை தடவி

கால் மீது கால் போட்டமர்ந்து

உரக்க பேசி சிரிக்கும்

ஆண்களின் பயணம்

தொடர்கிறது.

அப்போதெல்லாம்

தலை குனிந்து

நகம் கடித்து

புத்தகம் தேடுவது போல்

பாவனை செய்து

பார்வையை வெளியேற்றி

சமூக அடிமையாய்

ஒடுங்கச் செய்கிறது

பெண் பயணிகளை என்னும் ‘இழிவு’ மூலம் ஆண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறது. பெண்ணியக் கவிதைகளில் இதுவரை பதியப்படாதது. சட்டையைக் கழற்றி சாட்டையால் ஆண்களை அடித்தது போலுள்ளது. ஆண்களை அடக்கமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. நவீன இலக்கியத்தில் ஒரு புதிய வேகத்துடன் இயங்கி வருபவர் கவிஞர் பாலபாரதி. இக்கவிதை இடம் பெற்ற தொகுப்பு ‘சில பொய்களும் சில உண்மைகளும்’.

கவிஞர் இரா.மீனாட்சி. நவீன இலக்கியத்தின் முதல் பெண் கவிஞர். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருபவர்.

அம்மாவின் பானை இது

அவள் சுமந்ததை

நானும் சுமக்கிறேன்

என் மகள் வருகிறாள்

எப்போது என்னும் ‘பானை பேசுகிறது’ கவிதை காலம் காலமாக பெண் அடிமைப்படுத்தப்பட்டே வருகிறாள் என வருந்தி முடிவில் எப்போது விடுதலை என ஒரு வேட்கையை ஏற்படுத்துகிறார். இக்கவிதை இடம் பெற்ற தொகுப்பு ‘மீனாட்சிக் கவிதைகள்’.

இருபதாம் நூற்றாண்டு முதல் எழுதி வருபவர் கவிஞர் பூரணி. மரபில் தொடங்கிய அவர் கவிப்பயணம் நவீனத்திலும் தொடர்கிறது. இவரிடம் பெண்ணியச் சிந்தனை தூக்கலாகவே உள்ளது. ‘பூரணி கவிதைகள்’ தொகுப்பில் ‘ஆண் குணம்’ தலைப்பில் எழுதிய கவிதை

கணவனாய் காடடைந்து

கயவனால் சிறை புகுந்து

தலையிலே குளித்து வந்த

மனைவியாம் சீதை தன்னை

மறுபடி வனம் துரத்தும்

மணமுடை இராமன் தன்னை

கடவுளாய்ப் பார்க்க எந்தன்

உளமது இசைவதில்லை என தன் பெண்ணியக் கருத்தை தெளிவாய் தெளிவுபடுத்தியுள்ளார். பெண்ணை அடிமைப்படுத்துபவன் ஆண்டவனே என்றாலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்பது கவனிப்பிற்குரியது. இராமன் என்ணும் ஒரு பிம்பத்தையே சிதைத்துள்ளார். பெண்ணியமே முதன்மை என்கிறார்.

பெண்கள் பெண்ணியம் பேச ‘பெண் மொழி’, ‘பெண் உடல் மொழி’ என இருமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழி எதுவாயினும் முன்மொழியப்படுவது பெண்ணியமே. ‘உயிர்ப்பு’ தொகுதியில் எழுதிய ‘எனக்குத் தேவை’ கவிதை இன்று பெண்ணியத்துக்கு தேவையாக உள்ளது.

எனக்குத் தேவை

ஆணில்

செக்ஸ் உறுப்பல்ல என தொடங்கி அதிர்வை ஏற்படுத்த முடிவில்

சோர்ந்து விழுந்த போது

இதயத்தின் ஓரம்

கோழிக் குஞ்சியாய்

அணைத்து இறுக்கிக் கொள்ள

இரு சிறகுகள் என்றெழுதி இதயத்தை நெகிழச் செய்து விடுகிறார். ஆண்களை புறக்கணிக்கும் ஒரு குரலாகவே உள்ளது. பெண்ணுக்குத் தேவை அன்பே என்கிறார்.

குடும்பம்

தாலி

மெட்டி

கற்பு

பல வித வடிவங்களில்

என் உணர்வு மேயும் வேலிகள்

சிறகு கொடுத்தன

கூண்டுக்குள் அளக்க என பெண்ணை எவையெவை கட்டுப்படுத்துகின்றன என எடுத்துக் காட்டியுள்ளார் கவிஞர் கலைமதி ஆனந்த். இது பொதுவாகவே உள்ளது. இக்கவிதை இடம் பெற்ற தொகுப்பு ‘ஜன்னலோரச் சிறகுகள்’

இது நாள் வரையும்

அனுமதியின்றி

என் மீது அழுத்தி அழுத்தி

அமுக்குகிற முரட்டு தேகத்தை

வெறுப்பேன் என்னும் கவிஞர் மைதிலியின் கவிதை பெண் உடல் மொழியில் பேசுகிறது. உள்ள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்கிறார். இங்கு ‘அனுமதியின்றி’ என்பதும் ‘முரட்டுத்தேகம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ என்பது தொகுப்பின் பெயர். இவ்வாறான பெண் உடல் மொழி கவிஞர் சல்மாவிடமும் தொடர்கிறது.

வேறெந்த பொழுதுகளையும் விடச்

சுமக்கவே இயலாத படிக்கு

எப்படி இவ்வளவு கனத்து விடுகிறது

இந்த மாலை

மாதவிடாய் ஈரம் நிரப்பிக்

கனக்கிற பஞ்சைப் போல என்பதன் மூலம் வலியை வெளிப்படுத்தியுள்ளார். பெண்ணுக்குண்டான அவஸ்தையைச் சுட்டியுள்ளார். இத்தொகுப்பு ‘பச்சை தேவதை’. மாதவிடாய் குறித்து கவிஞர். அ. வெண்ணிலா எழுதிய கவிதையும் குறிப்பிடத்தக்கது

தேதி மாறாமல்

திட்டமிட்டதைப் போல்

மாதா மாதம்

நிகழ்கிறது

எனக்கான சுழற்சி என்றாலும்

நிகழும் முதல் கணம்

விபத்தொன்றை

சந்தித்தாற் போல

அதிர்கிறது மனசு என பெண் உணரும் அசௌகரியத்தைத் தெரிவித்துள்ளார். பெண் வலியைக் கூறுவதும் பெண்ணியமே. இவ்வாறான இயற்கை உபாதைகளிலிருந்து பெண்ணுக்கு விடுதலை இல்லை எனினும் இதை பிறரும் உணர வேண்டுமென்பதே நோக்கமாக உள்ளது.

ஊன் மெச்ச உன்னுடம்பில்

அய்ம்பது சதம் (சக்திக்கு)

ஒதுக்கீடு செய்தாலும்

உனக்குள்ளும்

இருக்கத்தான் செய்கிறது

ஆதிக்க உணர்வு என கண்டித்து

இல்லையெனில்

காலுயர்த்தி செவி தொடுவாயா

சிவனே? என வினவியுள்ளார் கவிஞர் சக்தி அருளானந்தம். சிவன் தன்னில் பாதியை சக்திக்கு கொடுத்தான் என்பர். ஆனால் அங்கும் ஆணாதிக்கமே ஆட்சிச் செய்கிறது என அம்பலப்படுத்தியுள்ளார். பெண்ணியத்தில் குறிப்பிடத்தக்க கவிதை. இத்தொகுப்பு இடம் பெற்ற கவிதை ‘இருண்மையிலிருந்து’

பெண்மொழி, பெண் உடல் மொழி ஆகிய இரண்டையும் தாண்டி ஓர் உச்சஸ்தாபியில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் சுகிர்தராணி. ’இரவு மிருகம்’ தொகுப்பு மூலம் பெண்ணியத்துக்குப் போராடியவர். அனைத்து பெண் கவிஞர்களுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆவேசக்காரர்.

பல கோடி ஆண்டுகள்

கழித்தொரு பரிணாமத்தில்

உபயோகமற்று

உன் குறி மறைந்து போகும்

அக்கணத்தில் புரியும்

உன் சந்ததிகளுக்கு

எம் யோனிகளின் வீரியம் என்கிறது ‘யோனிகளின் வீரியம்’ கவிதை. இங்கு ‘யோனிகள்’ என்பதை பெண்ணைக் குறிப்பதாகவேயுள்ளது. ஆணியம் அழிந்து போகும். பெண்ணியமே தொடரும் என்கிறார். பெண்மையே வெற்றி பெறும் என்கிறார்.

பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை. இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் முதன்மைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம் .பெண் உரிமையே கோரிக்கை. பெண் சமத்துவமே தேவை. பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட கவிதைகள் பிரச்சனைகளை, சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது. ஆணாதிக்க சமுதாயத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை. எதிர்க்கவும் அஞ்சவில்லை. பெண்ணுக்கான விடுதலை, உரிமை, சுதந்திரம், சமத்துவம் வெகு தூரத்தில் இல்லை என்பதையே பெண் கவிஞர்களில் கவிதைப்படைப்புகள் கட்டியங் கூறுகின்றன. ஆயிணும் அவைகைள பெண் சமூகம் விரைவில் பெற பெண்ணியப் படைப்புகள் அவசியம் ஆகிறது. அத்தகைய பெண்ணியப் படைப்புகளுக்கு நவீன இலக்கியமே களமாக உள்ளது.

 

- பொன்.குமார்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு