பெண்ணும் ஆணும் ஒண்ணு - வாசகர் கருத்துகள்
பெண்ணும் ஆணும் ஒண்ணு - வாசகர் கருத்துகள்
'தி இந்து' தமிழ் நாளிதழ் வாசகர் கருத்துகள்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான "மானிட சமுத்துவம்" இயல்பு நிலையில் அவதிப்படுவதை பாலினம் தகர்த்து மனித சமூகமாக நோக்கிய ஓவியா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
- நிவேதா, நெய்வேலி
எழுத்தாளர் ஓவியா அவர்களின் முப்பது வாரக் கட்டுரைகள் பெண்களுக்கு மட்டுமல்லாது மனிதகுலத்துக்கே விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அமைந்தன.
- பொன்.குமார், கோட்டூர்
முன்பு பெண் முன்வந்து ஏதேனும் கருத்து சொன்னால் 'படிக்காத கழுதை பேச வந்து விட்டாள்' என்று சொன்ன ஆணாதிக்கவாதிகள் இன்று அதே சூழ்நிலையில் 'படிச்ச திமிரில் பேசுகிறாள்' என்கிறார்கள். பெண் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தடைகளைத் தாண்டித்தான் எடுத்து வைக்க வேண்டியுள்ளது. 'தவறாமல் ஒலிக்கும் தடைக்குரல்' வாயிலாக ஒவியா இதை வெளிப்படுத்தியுள்ளார்.
- கே.கே.பி.வி.புலவன்
செயற்கைத் தூண்டல்கள் நித்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் இயற்கைத் தேவையை தவறு என்று கண்டிக்கும் சமூகத்தினால் தான் பதின்பருவச் சிக்கல்கள் எழுகின்றன. குழந்தைகளின் சார்புத்தன்மையே தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியாக, வெற்றியாகக் கருதி வாழும் பெற்றோர்களினாலேயே பின்னாளில் பிள்ளைகள் இனக்கவர்ச்சியைக்கூட காதலென தவறுதலாகப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கு தூண்டப்படுகிறது என்று காதலின் யதார்த்த நிலைமையை எடுத்துரைத்த ஓவியாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
- மா. சினேகா, ஈரோடு
பெரியாரியலாளர் ஒவியா அவர்களின் பார்வை, தேவையான கூர்மையுடன் சமூகத்தின் பெயரால் நிலவும் பெண்கள் குறித்த பல்வேறு கூறுகளை விளக்குவதாக இருந்தது. பொதுவுடைமைக் கட்சியின் பிருந்தா காரத் போல, ஒரே தளத்தில் கணவருடன் இணையாகப் பயணிக்கும் நிலை ஒருசிலரைத் தவிர, பிற பெண்களுக்கு கிட்டிவிடுவதில்லை. எந்த வகைத் திருமணமானாலும், அந்த கட்டுக்குள் வந்துவிட்டால் பெண்களின் செயல்பாடானது விரல்களைத் தாண்டி வளரும் நகங்களாக வெட்டப்பட்டு, கணவரைத் தாண்டி வளர்ந்து விடாமல் காக்கப்படுகிறார்கள்! குடும்பத் தலைவி என்ற காகித கிரீடத்துடன் திருப்திப் பட்டுக் கொள்வதையே பெருமையாகவும் பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், பெண்களுக்கு 'திருமணத்திற்கு முன் - திருமணத்திற்கு பின்' என்ற இரண்டு கட்ட வாழ்க்கை இயல்பானதாக ஆக்கப்பட்டு விட்டதே என்பதையும் மறுப்பதற்கில்லை.
- வி.சந்திரமோகன், போஸ்டல் காலனி, பெரியநாயக்கன்பாளையம், கோவை
நன்றி: தி இந்து தமிழ்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html