பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 1
பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 1
அணிந்துரை - 1
சமத்துவத்துக்கான போராட்டத்தில் ஓர் வலிமையான ஆயுதம்!
இரா. ஜவஹர்
மூத்த பத்திரிகையாளர்
தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது மரபு மீறல்! 'ஆணும், பெண்ணும்' என்று சொல்வதுதானே மரபாக இருக்கிறது? ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்று பெண்ணை முன்னிலைப் படுத்துகிறது! பெண்ணைத் தாழ்த்துகிற, அடிமைப்படுத்துகிற எல்லா மரபுகளையும் இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது; உடைத்து நொறுக்குகிறது!
என் தோழமை மகளும், பெரியாரியல் சிந்தனையாளருமான் தோழர் ஒவியா இதை 'இந்து' தமிழ் நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழில் தொடராக எழுதிய போதே தொடர்ச்சியாக நான் படித்தேன். இப்போது புத்தகமாகத் தொகுத்துப் படிக்கும்போது இது மேலும் சிறந்து விளங்குகிறது.
தோழர் ஓவியா பெரியாரியல் சிந்தனையாளர் மட்டுமல்ல; அம்பேத்கர், காரல் மார்க்ஸ், அலெக்சாண்ட்ரா கொலந்தாய் உள்ளிட்ட மேதைகள் பலரின் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்ட முற்போக்காளர். ஆகவேதான் இந்தத் தலைவர்களின் சொல்லும், செயலும் இந்தப் புத்தகத்தில் பொருத்தமான பல இடங்களில் இடம் பெறுகின்றன.
ஓவியா ஒரு களச் செயல்பாட்டாளரும் கூட என்பதால், பல்வேறு விஷயங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவதற்கு அந்த அனுபவங்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன. கரு முதல் கல்லறை வரை ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கட்டம் கட்டமாக அவர் விளக்கிச் செல்கிறார்.
பெண் குழந்தை பிறந்தால், அது ஏதோ ஆறுதல் சொல்ல வேண்டிய விஷயமாக ஏன் இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் கருப்பு நிறம்தான். ஆனால் பெண் குழந்தைகள் கருப்பு நிறத்துடன் பிறந்துவிட்டால், வீட்டிலும், பள்ளி, கல்லூரியிலும், மற்ற இடங்களிலும் அந்தக் குழந்தைகள் புறக்கணிப்புக்கு ஆளாகும் நிலையை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்புகிறார். பெண் என்றால் குழந்தையாக இருக்கும்போதே வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்துகிறார்கள்; அவளது இலக்கு என்பதே திருமணம்தான் என்று கூறி, அந்த வருங்காலக் கணவனுக்காகவே அவளைத் தயார் செய்கிறார்கள்; “தன்னைக் காப்பாற்ற வருகிற, தான் பணிவிடை செய்ய வேண்டிய, அந்த ராஜகுமாரனின் குதிரைக் குளம்பொலிச் சத்தத்துக்காகக் காத்திருக்கும் காலமே, அவர்கள் தாய் வீட்டில் இருக்கும் காலமாக இருக்கிறது”என்கிறார். இவையெல்லாம் எவ்வாறு அவளுடைய சுயத்தை அழிக்கின்றன; பெண்ணை அடிமையாக்குகின்றன என்பதை விரிவாக விளக்குகிறார்.
இந்த இடத்தில் எங்கெல்ஸ் கூறியது நினைவுக்கு வருகிறது. குடும்பம் என்பது ஆங்கிலம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளில் Family என்று சில எழுத்து வேறுபாடுகளுடன் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சொல்லின் மூல அர்த்தம் 'வீட்டுவேலை செய்யும் அடிமை' (Household Slave) என்பதாகும். ரோம சாம்ராஜ்யத்தில் வீட்டு வேலை செய்துவந்த அடிமைகளைக் குறிப்பிடும் இந்தச் சொல்லை, குடும்பம் என்ற அமைப்பைக் குறிப்பதற்கு ரோமானியர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்று எங்கெல்ஸ் கூறுகிறார். கணவனுக்கும் மற்றவர்களுக்கும் அடிமை வேலை செய்பவர்களாகப் பெண்களைக் குடும்ப அமைப்பே பயிற்றுவிக்கிறது.
இத்தகைய பயிற்சிகளில் ஒன்றுதான் சுமங்கலி பூஜை. அதாவது கணவனுக்கு முன்பே தான் இறந்துவிட வேண்டும்; விதவையாக வாழக் கூடாது என்று கடவுளைப் பெண்கள் வேண்டிக் கொள்ளும் பூஜை! அது என்ன 'விதவை'? கணவனை இழந்தவள் 'விதவை' அல்லது 'கைம்பெண்' என்றால், மனைவியை இழந்தவனை எப்படி அழைப்பது? கணவனை இழந்தால் பெண் ஏன் தனித்து வாழக் கூடாது? அல்லது ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்புகிறார் ஓவியா.
ஒவ்வொரு விஷயத்திலும் பெண் தாழ்த்தப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார். உடலின் இயற்கையான கழிவுகளாகச் சிறுநீரும், மலமும் வெளியேறுவதைப் போல, பெண் உடலின் இயற்கையான கழிவுதான் மாதவிடாய்க் கழிவும். இதில் மட்டும் என்ன தீட்டு இருக்கிறது? என்று அவர் கேட்கிறார். ''ஒரு வகையில் சானிட்டரி நாப்கின் கம்பெனிக்கு நன்றி சொல்ல வேண்டும்... இந்த வளர்ச்சி பெண்களின் நடமாட்டத்தை அதிகரித்து உள்ளது”என்று பாராட்டுகிறார். ஆனால் சொல்வது ஒவியாவாச்சே! அடுத்த வரியிலேயே இப்படிக் கேட்கிறார்: ''தங்கள் கம்பெனியின் நாப்கினைப் பயன்படுத்தினால், மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் உயரம் தாண்டலாம், தூரம் தாண்டலாம் என்று விளம்பரம் கொடுக்கும் கம்பெனிகள், தங்களது நாப்கின்கள் சுத்தத்தைத் தருவதால், அதை உபயோகிக்கும் பெண்கள் கோயிலுக்குப் போகலாம், திருமணங்களுக்குப் போகலாம், பிற மங்கல காரியங்கள் எனக் கருதப்படும் காரியங்களில் ஈடுபடலாம் என்று விளம்பரம் கொடுக்க முடியுமா?"
இவ்வாறு எதையும் நுட்பமாகப் பார்க்கும் ஒவியா, சொற்களைக் கூட நுட்பமாகக் கையாள்கிறார். சமம் என்றால் ஒரே மாதிரி என்று அர்த்தம் இல்லை என்கிறார். ஆண் - பெண் என்பது இயற்கையானது; ஆனால் ஆண்மை - பெண்மை என்பது இயற்கையானது அல்ல; அது கடந்து போன வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது என்கிறார்.
உடல் உறவு, காதல், திருமணம், மணமுறிவு, மறுமணம், தனித்து வாழ்தல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் போன்றவை பற்றி அவர் முன் வைக்கும் வாதங்கள், அளிக்கும் விளக்கங்கள் எல்லாம் நமது கலாச்சாரக் 'காவலர்களைக்' கதற வைக்கும்!
"திருமணத்துக்கு முன்பு பாலுறவு அல்ல, பாலுணர்வே தவறு என்று கருதுகிற பைத்தியக்காரச் சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்", என்று தான் சந்தித்த அனுபவத்தைக் கூறி விளக்குகிறார். இந்த வெற்றிடத்தை நாம் கவனிக்காமல் ஓர் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க ஒருபோதும் முடியாது. "இந்த இடத்தில் தான் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி அவசியம் என்பதை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. காக்கை, குருவிக்கெல்லாம் யாராவது பாலியல் கல்வி நடத்துகிறார்களா என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். ஆனால் காக்கையும், குருவியும் கல்யாணம் செய்து கொள்வதில்லை. அந்தக் கல்யாணத்துக்கு முன்பும், கல்யாணத்துக்கு வெளியிலும் பாலுணர்வையோ, பாலுறவையோ தடை செய்வதில்லை. பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது என்றால் எந்த ஓர் அறிவையும் முறைப்படுத்திப் பெறுவதன் மூலம் அதில் ஏற்படும் துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாக மனித சமுதாயம் திகழ்வதால்தான்." என்று வலுவாக வாதிடுகிறார் ஓவியா.
தனி வாழ்வில் பெண்களின் நிலை இப்படி இருக்கிறது என்றால், பொது வாழ்விலும் பெண்களின் நிலை போராட்டமாகவே இருக்கிறது. வேலைக்குச் செல்வதிலாகட்டும், அரசியல், சமூகக் களங்களில் ஆகட்டும், ஒவ்வொரு அங்குலத்திலும் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக் கட்டைகளை அவர் விவரிக்கிறார். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது எத்தனை ஆண்டுக் காலமாக இழுத்தடிக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பெண்களை முடக்குகின்ற ஆணாதிக்கத்தின் பல்வேறு கூறுகளை அவர் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
ஓவியாவின் சரளமான மொழி நடையும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய திரைப்படப் பாடல்கள் வரை ஆங்காங்கே அவர் எடுத்தாள்வதும் இந்தப் புத்தகத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
பாலின பேதத்தை ஒழித்து, மனிதர்கள் அனைவருக்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் ஒரு வலிமையான ஆயுதமாக இந்தப் புத்தகம் விளங்கும்.
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html