பெண் ஏன் அடிமையானாள் | இரண்டாம் அத்தியாயம் – வள்ளுவமும் கற்பும்
இரண்டாம் அத்தியாயம் – வள்ளுவமும் கற்பும்
கற்பு என்ற நமது கட்டுரைக்கு மறுப்பாக திருக்குறளை மேற்கோளாகக் காட்டி, நமது தோழர் ஒருவர் ஒரு நீண்ட மறுப்பு எழுதியுள்ளார்.
அதில் நாம், “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால், இக்கருத்துகளைக் கூறியிருக்கமாட்டார்” என்று குறிப்பிட்டிருந்ததற்கு நமது தோழர் அதை ஒருவாறு ஒப்புக்கொண்டு, ‘தன்னலங் கொண்ட கூட்டத்தார் ஏற்றுக் கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ!’ என்று பதில் கூறியிருக்கிறார்.
இங்குப் பெண்களைத் தன்னலங்கொண்ட கூட்டத்தார் என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதி வழங்கியதாகுமா? என்பதை யோசிப்பதோடு, பெண்கள் தர்மம் என்று எழுதுவதில் ஆண்கள் இம்முறையைக் கொண்டு பிரவேசிப்பது தன்னலங்கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகிறேன். (இந்த இடத்தில் “கருத்து” இன்னது என்பதை முடிவுகட்டாவிட்டாலும்) “தமிழ்நாட்டில் வாழ்ந்த - வாழுகின்ற பெண்ணரசிகளும் அக்கருத்துகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்” என்று எழுதியிருக்கின்றார்.
எந்த பெண்ணரசியாகிலும் தம்மை ஆண் பிறவிக்கடிமை என்றாவது, தாம் அப்பிறவிக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையைவிட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருக்காலும் ஒப்போம்.
'பல தலைமுறைப் பழக்கத்தால் பெண்கள் அக்கருத்துகளை ஏற்றுக் கொள்கின்றனர்' என்று நாம் எழுதியிருப்பதும், அதைத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொள்வது போலாகும் என்பதற்கு ஒப்பிட்டு, நாம் எழுதியிருப்பதும், “தாய்மார்களைப் பழித்துக் கூறியதாகும்” என்று நமது தோழர் கூறியிருக்கிறார்.
அதற்குக் காரணம் காட்டுவதில், “தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் கிடைக்கவொட்டாமல் செய்துவிட்டதால் அன்னார்கள் அறியாமை உடையவராகிவிட்டார்கள், பெண்களுக்கு அது பொருந்தாது” என்றும் நமது தோழர் சொல்லுகிறார்.
இதை அவர் ஆராய்ச்சியுடன் கூறியிருப்பதாக நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், எந்தக் காலகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற கூட்டம் ஏற்பட்டதோ, எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தார்கள் தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்தனரோ அக்காலத்திலேயே அந்தக் கூட்டத்தாராலேயே பெண் மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு, தாழ்த்தி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் நமது தோழர் உணர முடியவில்லை என்பதும் நமக்கு அறிய முடியவில்லை, தவிர, பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக இவர் ஒரு அவ்வைப்பிராட்டியை எடுத்துக்காட்டுகின்றார். அதே மூச்சில் திருவள்ளுவரையும் எடுத்துக்காட்டியிருப்பாரானால், தாழ்த்தப்பட்டோர்களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டிருப்பார். எனவே, நாம் ஒன்றிரண்டு பெண்ணரசிகளைப் பற்றிப் பேச வரவில்லை என்பதையும் தற்காலத்தில் வாழும் நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் வீதமுள்ள பெண்களைப்பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகின்றோம்.
இப்படிச் சொல்லுவதால், நாம் தாய்மார்களையே பழித்துக் கூறியதாகுமானால், நமது தோழர் சொல்வதிலிருந்து அவர் “தாழ்ந்த சாதி” என்பவர்களைப் பழித்துக் கூறியதாக ஏற்படவில்லையா? என்று வினவுகின்றோம்.
தவிர, அவ்வைப் பிராட்டியாரும் திருவள்ளுவரையே அரண் செய்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவ்வையாரின் ‘தையல் சொற்கேளேல்’ என்கின்ற முதுமொழியை எடுத்துக்காட்டி, அதற்கு அரணாக வள்ளுவரின் “பெண் வழிச் சேரல்” என்கின்ற வாக்கைச் சுட்டிக்காட்டுகின்றார். “பேதமை என்பது மாதர்க்கணிகலம்” என்கிற பிராட்டியாரின் முதுமொழியையும் கூடவே குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் நமது தோழர் தனது கடைசி ஆயுதத்தை ஏந்தியிருக்கின்றார் என்றே கூறவேண்டியிருக்கிறது. பெண்களும் பகுத்தறிவுள்ள - சிந்தனா சக்தியுள்ள மனித ஜீவன்தான் என்பதை ஒப்புக்கொள்ளும் எவரும் இம்மூன்றையும் ஒருக்காலும் நடுவுநிலைமை உள்ளவர் வாக்கென்றோ, உண்மையை ஆராய்ந்த அறிவுடையோர் வாக்கென்றோ ஒப்புக்கொள்ள முடியாதென்பதே நமது துணிபு.
அங்ஙனமில்லையாயின், அவ்வக்கால நிலைக்கேற்றதென்றாவது சொல்லியாக வேண்டும். இங்கு சற்று வாசகர்களுக்குச் சங்கடமுண்டாகும் என்பது நமக்குத் தெரியும்; ஆகிலும் குற்றமில்லை; முதலாவது அவ்வையும், வள்ளுவரும் சகோதரர்கள் என்பது ஒரு கதை. ஆதி என்கின்ற புலைச்சிக்கும், பகவன் என்கின்ற பார்ப்பானுக்கும் பிறந்த பிள்ளைகள் ஏழில் இவர்கள் இருவர் என்று அக்கதையே சொல்லுகின்றது. இவற்றுள் மற்றொரு விசேடமென்ன வென்றால், மேற்கண்ட ஆதிக்கும், பகவனுக்கும் புணர்ச்சி முடிந்ததும் பிள்ளை பிறந்ததாகவும், அதை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. இது சம்பந்தமாக மற்றும் பலப்பல கதைகளும் உண்டு. அன்றியும், மற்றும் பலப்பல அவ்வைகள் இருந்தார்கள் என்றும் சிலர் கூறுவார்கள்.
எனினும், இது விஷயத்தில் புராணக் கூற்றையும், தெய்வீக மூட நம்பிக்கையையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, மேற்கண்ட நீதி வாக்கியங்களும், குறள்களும் யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதையும் கவனியாமல், மேற்படி வாக்கியங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதுபோன்ற மற்ற வாக்கியங்களுக்குப் பொருள் காணுவதுபோலவே இவைகளுக்கும் பகுத்தறிவைக் கொண்டு பொருள் காணுவோமேயானால் மேற்கண்ட முதுமொழிகளின் கருத்தான “பெண்கள் சொல்லைக் கேட்கக்கூடாது” என்பதும், “அறியாமை என்பது பெண்களது ஆபரணம்” அதாவது, அவர்களின் தன்மைக்கு ஏற்றது என்பதும், “பெண்கள் இஷ்டப்படி நடக்கக்கூடாது” என்பதுமே பொருளாகி விளங்குகின்ற கருத்துகள்தான் காணக் கிடக்கும். இனி இதற்கு விசேட உரைகளும், தத்துவார்த்தங்களும் பலப்பல சொல்ல பல வித்துவான்கள் முந்தக்கூடும். ஆனாலும், தத்துவார்த்தமும், விசேட உரையும் சொல்ல முடியாத சப்தங்களும், எழுத்துகளும், வாக்கியங்களும், செய்யுள்களும் உலகத்தில் கிடைப்பது அரிது என்பது யாவரும் அறிந்ததாகும். ஆதலால், இதற்கு மாத்திரம் தத்துவார்த்தமும், விசேட உரையும் கொண்டு பொருள் கூற வரவேண்டிய காரணம் அறிவாளிகளால் ஒப்புக்கொள்ளக்கூடியதாகாது.
அவ்வை முதுமொழியும், வள்ளுவர் குறளும் யார் சொன்னார்கள் என்பது இங்குக் காணவேண்டிய விஷயமல்ல, மற்றபடி, இவ்விரண்டும் நீதி நூல்களில் சிறந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆதலால் இதைப்பற்றிப் பேசவே இங்கு முன் வருகிறோம். இதில் குறுக்கே நிற்கும் சங்கடமென்னவென்றால், இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட நீதிகளை உணர்ந்தவர்கள், இவ்வளவு பெரிய பிழைகளை இழைத்திருப்பார்களா? என்னும் விஷயமாகும். ஆனால், எல்லா விஷயங்களுக்கும் இவ்வாயுதத்தை உபயோகிக்க முற்படுவதால், அவ்வாயுதம் சில சமயங்களில் உபயோகிப்பவர்களையே மோசம் செய்துவிடக் கூடும். அல்லாமலும், காலதேச வர்த்தமானத்தைக் கொண்டுதான் யாரும் எதையும் சொல்லியிருக்க முடியுமேயல்லாமல், பார்ப்பனர்கள் சொல்வதுபோல் எதையும் கடவுள் சொன்னார் என்பதும், அது எக்காலத்திற்கும் ஏற்றது என்பதும், இக்காலத்திற்கு பொருத்தமற்றதாகும். இவ்விரு பெரியார்ளும் உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்நீதி நூல்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம் பரவியிருந்த காலமென்பதையாவது ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். தவிர, அவ்வைப் பிராட்டியார் பெயராலோ, வள்ளுவர் பெயராலோ சொல்லப்பட்ட நீதிகளை ஆக்கிய கர்த்தர்கள் நம்மைப்போன்ற மனிதத் தன்மை வாய்ந்தவர்கள் என்பதை முதலாவதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் மேலே குறிப்பிட்டதுபோல், தெய்வத்தன்மைகள் என்று சொல்லப்படுவதை அதாவது, மனிதத் தன்மைக்கு மேற்பட்டது என்பதையும் மூட்டைகட்டி வேறாக வைத்துவிட்டுப் பார்த்தால்தான் உண்மை விளங்கும். அப்படியில்லாவிட்டால், யாரும் எதையும் சொல்ல இடமேற்பட்டுவிடும். ஆகவே, அப்படிப் பார்த்தால்தான் இவர்கள் இப்படிச் சொன்னதற்கு நியாயம் கிடைக்கும். அதாவது அக்காலத்திய நிலைமைக்கு யாராயிருந்தாலும் நீதி இப்படித்தான் சொல்லி இருக்க முடியும் என்கின்ற முடிவு காணலாம்.
எப்படியென்றால், “கம்பர்” அறிவுத் திறமுடைய கவி என்பதில் யாருக்கும் வேறுபாடு இராது. ஆனாலும், அப்படிப்பட்ட கம்பர் ராமாயணம் பாடினார் என்றால், ஆரியர் செல்வாக்குக் காலத்தில், ஆரிய ஆதிக்கத்தில் மக்களுக்கு உணர்ச்சி உள்ள காலத்தில் பாடியதானதால், அதில் வால்மீகி உரைத்த கருத்துகளை மாற்றி அதிலுள்ள ஆபாசங்களை எல்லாம் நீக்கி, ஆரியர்களுக்கு முழு உயர்வையும், ஆதிக்கத்தையும் வைத்து மக்கள் கொண்டாடும்படியாகப் பாடியிருக்கின்றார்.
அதுபோலவே, இப்பொழுதும்கூட எவ்வளவு அறிவு முதிர்ச்சியும், ஆராய்ச்சி முதிர்ச்சியும் பல பண்டிதர்களுக்கு இருந்தாலும் ஆரிய ஆதிக்கத்தை மறுப்பதற்குப் பயப்படுகின்றார்கள்; ஆரிய உயர்வையே பேசுகின்றார்கள். காரணம், 'ஆரியருக்குப்பயந்தல்ல’ வென்று சொல்லிக் கொண்டாலும், அவர்களுக்கு ஏற்பட்ட ஆரியப்பழக்க வழக்கமும், ஆரியர் கதைகளையே படிப்பதும், ஆரிய ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தின கடவுள் தன்மைகளையே வணங்கி வருவதும், ஆரியக் கதையை ஆதரித்துப்பாடுவதும், எழுதுவதும் ஆகிய குணங்களே இப்படித்தான் நடக்கச் செய்யும். எனவே, இம்முறையில் குழந்தைப் பருவ முதல் வளர்ந்து சரீரத்தின் மூலமாகவும், மயிர்க்கால்கள் மூலமாகவும் ஆரியத்தன்மையை ஏற்றுக்கொண்டு மூளையை நிரப்பிவைத்திருப்பவர்கள் என்ன செய்யக்கூடும்? ஆதலால், அவர்கள் பரிசுத்தத் தன்மையும், மேன்மையும் உற்றவர்களானால், அக்காலத்திற்கேற்ப கூறினார் என்பதோடு முடித்து விடுவதே நன்று. அப்படி இல்லாமல், எக்காலத்திற்கும் ஏற்றதென்போமாயின் அவைகள் குற்றம் குற்றமே, ‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’ தான்.
பின்பு, நமது தோழர் சமத்துவம் என்பதுபற்றி என்ன என்னமோ அவசியமில்லாத அநேகவற்றைச் சொல்லுகின்றார். அதைப்பற்றி இங்கு இது சமயம் ஒரு விவகாரம் வைத்துக்கொள்ளவும் அவ்வளவு அவசியமில்லை என்றாலும் கடைசியாக அவர் குறிப்பிடும் சமத்துவக் கொள்கையாவது என்ன என்று எடுத்துப் பார்த்தாலும் அதிலும் முற்றும் முறையாகச் சொல்லாமல் நழுவிவிட்டார் என்றே கூறவேண்டும். அதாவது, “பெண் மக்கள் தமது உரிமையையும், தேவையையும் ஆண்மக்கள் தடையில்லாமலும், பெண்ணின தடையின்றி அவர்களுக்குத் துன்பமில்லாமல் பெறுதலும், ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ்வதும் ஆண், பெண் சமத்துவமாகும்” என்று சொல்லுகிறார்.
ஆனால், அதே மூச்சில், “ஆண் உரிமை யாது? பெண் உரிமை யாது? அன்னாரின் தனித்தனி தேவைகள் யாவை? என்பதைப்பற்றி ஆராய்வது வேறொன்று விரித்தலாகும்” என்று சொல்லிவிட்டார்.
இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்கவேண்டும்? என்பதேயாகும். அப்படி இருக்க, நமது தோழர் அதை ஆராய்வது வேறொன்று விரித்தல் என்னும் குற்றமாகிவிடும் என்பது, 'உள்ளதை விரிக்கப் பயந்து மறைத்தல்' என்கின்ற குற்றத்திற்கு ஆளாகுமே தவிர, வேறில்லை என்று சொல்ல வருந்துகிறோம்.
தவிர, “ஆணின் தன்மை வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் கொண்டு விளங்குகிறது” என்றும், “பெண்ணின் தன்மை அன்பு, மேன்மை, சாந்தம், பேனுந்திறம் கொண்டு விளங்குகிறது” என்றும் சொல்லுகின்றார். இம்முடிவுதான் நமது தோழர், திருவள்ளுவருக்கு வக்காலத்துப் பெற்று மறுப்பெழுத முன்வரச் செய்துவிட்டதென்பது இப்பொழுது நமக்கு நன்றாய் விளங்குகின்றது.
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
அன்றியும், மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் நமது தோழர் குறிப்பிட்ட இருபாலார் குணங்களும் சமமாக இருக்கவேண்டும் என்பதே நமது கருத்தாகும். இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால், அது செயற்கையால் - ஆண்களின் சுயநலத்தால் - சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது. கர்ப்பமாக பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எந்த விதத்திலும் அதாவது, வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை முதலியவைகளில் மாறுபட்டுவிட வேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பம் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண் மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணுந்திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகி விடாதென்றும் சொல்லுவோம்.
உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி.
தவிர, ‘தற்கொண்டாள்’ என்பதற்கு அன்பைக் கொண்டவள் என்கின்ற பொருளை வருவித்துக் கொள்வது இங்கு வள்ளுவருக்குக் காப்புச் செய்யக் கருதியதாகுமேயல்லாமல் குறளுக்கு நீதி செய்ததாகாது.
அன்றியும், பெண்ணிடமிருந்து ஆண் அறியவேண்டிய குணம் ஒன்றும் இல்லையென்பதும் அப்படியிருந்தால் தான் தற்கொண்டாள் என்பதாகச் சொல்லலாம் என்பதும் பொருத்தமற்றதென்றே சொல்லலாம்.
அதுபோலவே, ‘தொழுதெழுவதையும்’ ஆணுக்குக் குறிப்பிட்ட நியதி இல்லையென்பதும் பொருத்தமற்றதே ஆகும். பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால், ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கு உரிமை வேண்டும், ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும் இதுதான் ஆண் - பெண் சரிசம உரிமை என்பது. இஃதில்லாது எதுவானாலும் சுயநன்மையும் மூர்க்கமுமேயல்லாமல் அன்பு அல்லவென்றே சொல்லிவிடுவோம்.
தவிர, நமது தோழர் அவர்கள் குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர் கற்பு கூறியிருப்பதாகச் சொல்லுகின்றார். இருக்கலாமானாலும், பெண்களுக்குச் கூறியதுபோல் இல்லையென்றுதான் சொல்கிறோம். அதாவது, ஆண்களின் கற்புக்கு நமது தோழர் அவர்கள் இரண்டு குறள்களை எடுத்துக்காட்ட கூறியிருக்கிறார். அவை:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் - மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் - பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
இவைகளை ஆண்கள் கற்பை வலியுறுத்தக் கூறியதாகக் கூறுகிறார் போல் காண்கிறது. இவைகள் அதற்காகக் கூறியதல்ல என்பது நமது அபிப்பிராயம். அதாவது முதற்குறளுக்கு “காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை; பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்கவேண்டும்” என்பதுதான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
இரண்டாவது குறள், விலைமாதரைப் புணர்கின்றவர்க்குக் கூறிய பழிப்புரையேயல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித்திரியும் ஆண்களைக் குறித்துக் கூறியதல்லவென்பது நமதபிப்பிராயம், நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர நிர்ப்பந்தமில்லை. ஆகவே, இருபாலாருக்கும் சமநிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறள்களையும் நாம் கூறக்கூடும்.
தவிர, கடைசியாக நமது தோழர் நமக்கு உணர்த்தும் அறிவுக்கு நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் விரும்புவது போலவே ஆன்றோர் நூல்களில் அய்யம் தோன்றும் இடங்களில் அய்ய வினாவாகவே எழுதி வருகிறோம். ஆனால், இக்கற்பு விஷயத்தில் நாம் குறிப்பிட்ட குறளின் கருத்தில் நமக்கு அய்யமில்லை என்று கருதுவதோடு, நமது கூற்றுக்கு ஆதரவாக மற்றும் சில அறிஞர்களின் கருத்தையும் பெற்றோமென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மற்றும், குறள் விஷயத்திலும், குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண்டுள்ள பக்தி நமது தோழர் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்லவானாலும் குறைந்ததல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதற்கு அநேக சான்றுகள் உண்டு. மற்றபடி நமது தோழர் குறிப்பிட்ட கடைசி குறள்கள் இரண்டையும்பற்றி அதாவது பெரும்பான்மை மக்களது கருத்துக்கு மாறுபடுவதும் பெரியோரிடம் குறை காணுவதும் மடமை என்கின்ற பொருள் கொண்ட வேறு இரண்டு குறள்பற்றி நாம் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில், சரி என்று பட்டதைச் சொல்லும் தன்மை எவனிடமிருந்தாலும் அவன் இக்குறள்கள் மாத்திரமல்ல, இதுபோன்ற வகைகள் பலவற்றிற்கும், மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாராயிருக்க வேண்டியவன்தான் என்கின்ற முடிவால் கவலைப்படவில்லை.
புத்தகத்தை இங்கே வாங்கலாம்