பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - முதல் பதிப்பின் முன்னுரை
பத்தாண்டுகளுக்கு முன்னர் இவ்விஷயம் குறித்த ஆய்வை நான் எடுத்துக்கொண்டேன். ஒரு இந்தியப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியருக்கே உரிய நெருக்கடியான கடமைகளும் முறையான நூலக வசதியின்மையும் மதிக்கத்தக்க முன்னேற்றமெதையும் சாதிப்பதிலிருந்து என்னைத் தடுத்துவிட்டன. இந்நூலின் பெரும்பகுதி இரண்டு கல்வி ஆண்டுகளில் (1954-56), கீழைத்தேய மற்றும் ஆஃப்ரிக்க ஆய்வுகளுக்கான பள்ளியில் முடிக்கப்பட்டது. இது பாட்னா பல்கலைக் கழகம் பெருந்தன்மையோடு கொடுத்த ஆய்வு விடுப்பாலேயே சாத்தியமாயிற்று. ஆகவே இந்நூல் கணிசமான அளவுக்கு 1956இல் இலண்டன் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எனது முனைவர் பட்ட ஆய்வைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
இந்நூலின் போக்கில் பல்வேறு உதவிகளை எனக்களித்த முனைவர் எஃப். ஆர். அல்ச்சின், பேரா. எச். டபிள்யூ. பெய்லி, முனைவர் டி. என். தவே, முனைவர் ஜே. டி. எம். டெர்ரெட், பேரா. சி. வான் ஃப்யூஹரர் ஹைமண்டார்ஃப், பேரா. டி டி கோசாம்பி, பேரா. ஆர். என். சர்மா, முனைவர். ஏ. கே. வார்டர் மற்றும் இந்நூலுக்கென எனக்கு உதவிய பல நண்பர்களுக்கும் நன்றி கூற விழைகிறேன். மதிப்புமிக்க ஆலோசனைகளும் உரிய நேரத்தில் ஊக்கமும் அளித்த முனைவர் எல். டி. பார்னெட் அவர்களுக்கு நான் நன்றியுடையேன். மதிப்புக்குரிய எனது நண்பர் முனைவர் தேவ் ராஜ்க்கு நான் நன்றி கூறியாகவேண்டும்; பிழைதிருத்தம், அதுசார்ந்த இதர பணிகளில் அவரின் உதவியின்றி இந்நூல் வெளியிடப்படுவது மேலும் தாமதமாகியிருக்கும். இந்நூலுக்கான பொருளடைவைத் தயாரித்ததிலும் நான் பிழைதிருத்தம் மேற்கொள்வதிலும் எனக்கு உதவிய முனைவர் உபேந்திரா தாக்கூருக்கும் நான் நன்றியுடையவன். அனைத்திற்கும் மேலாக, பேரா. ஏ.எல் பாஷம் அவர்களுடன் பணி புரிந்தது என் நற்பேறு ; தமது மாணவர்களின் சுதந்திரமான அறிவை விழைந்து, நட்பார்ந்த வழிகாட்டுதலை அவர் அளித்தது இந்நூலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. எனினும் கவனியாது நேர்ந்துவிட்ட பிழையான தகவல்களுக்கும், முடிவுகளுக்கும் அல்லது தொழில்நுட்ப ரீதியான ஒழுங்கின்மைகளுக்கும் நானே பொறுப்பாவேன். நான் எவ்வளவோ செய்தும் நேர்ந்துவிட்ட சில அச்சுப்பிழைகளை நீக்க இயலவில்லை.
ஆர். எஸ் சர்மா