ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்)
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
இன்னும் சில ஒப்புதல் வாக்குமூலங்கள்
'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் ஜான் பெர்கின்ஸின் இந்தத் தன் வரலாற்று நூல் மூன்று பாகங்களைக் கொண்டது. 1963-1971 கால கட்டம் வரையிலான முதல் பாகமும், 1971-1981 வரைக்குமான இரண்டாம் பாகமும், 1981-முதல் 2004 வரையிலான மூன்றாம் பாகமும் சேர்ந்த இந்த சுயசரிதையை ஜான் பெர்கின்ஸ் மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் அமைதியாகத் தொடங்குகிறார். “என் வாழ்க்கை மிகச் சாதாரணமாகத்தான் தொடங்கியது. நான் ஒரு மத்திய தர வர்க்கக் குடும்பத்தில் ஒரே மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தேன்.”
பணப் புழக்கம் குறைவாக இருந்த குடும்பத்தில் பிறந்து இலவசக் கல்வி பயின்ற பெர்கின்ஸ் கோடிக்கணக்கான டாலர் மோசடிகளில் ஈடுபட்டு ஒரு பொருளாதார அடியாளாக உருமாறுவதன் பக்கங்கள் பரபரப்பானதொரு புதினத்தின் மொழி நடையில் விவரணம் பெற்றிருப்பது இந்த புத்தகத்தின் மீதான ஒரு தனி கவனத்தை அளிக்கிறது.
அந்நிய மூலதனம், தாராளமயம், உலகமயமாக்கல் என்கிறார்கள். இந்தியாவை வல்லரசாக்குவோம் என்கிற இந்திய அரசியல்வாதிகளின் கோமாளிக் கூச்சல் ஒரு பக்கம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே ஆண்டவர்கள் 'இந்தியா ஒளிர்கிறது' என்றும் கூட அப்பட்டமாகப் பொய் சொல்லி வைத்தார்கள். இவற்றினூடாக இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வாழ்க்கைத் தரம் படுபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதே தவிர எவ்வித ரட்சிப்புமில்லை. இந்த அதிகார பீடங்கள் நம் மண்ணையும் வளத்தையும் நம் கண்முன்னரே விழுங்குவதைப் பார்த்தபடி இருக்கச் சபிக்கப்பட்டிருக்கிறோம் நாம். இப்படியான ஒரு வன்முறை நம்மேல் நிகழ்த்தப்படுவதன் பின்னணியில் இருப்பது யார் என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் கேளிக்கைகளில் மூழ்கி மதி மயங்கிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொள்வதே இல்லை. அந்தக் கேள்வி நம்மிடமிருந்து எழாத வண்ணம் நம்மை ஆள்பவர்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு மாதிரி சகிக்கப் பழகிக் கொண்டுள்ளோம்.
உலகின் எல்லா நாடுகளையும் திட்டமிட்டுச் சூறையாடி வரும் பொருளாதார அடியாட்கள் பன்னாட்டு நிதி அமைப்புகளின் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப் பெட்டிகளில் குவிப்பதையும், தேசத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் பண முதலைகளுக்கு தீனியாகத் திணிப்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்க அரசு செயல்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவின் விசுவாசிகளாக மாற்றுவதுதான் இந்தப் பொருளாதார அடியாட்களின் தலையாய பணி. இதற்கு சுளையான வெகுமதி இவர்களுக்கு கிடைத்துவிடுகிறது.
அமெரிக்க மாயையில் இந்தியப் பொருளாதார மேதைகள் சிக்கி தேசத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜான் பெர்க்கின்ஸின் மனசாட்சி பேசுவதை இந்தியர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒரு முக்கிய ஆவணம்.
"நீ ஒருவன் மட்டுமே பொருளாதார அடியாள் அல்ல. நம் தொழில் மட்டமானது தான். ஆனால் நாம் ஒரு அரிய வகையைச் சேர்ந்தவர்கள். நீ இதிலிருக்கிறாய் என்பதை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது. உன் மனைவி உட்பட " இப்படியான மூளைச் சலவைக்குப் பிறகு கிளம்பிச் செல்லும் நாசகர சக்தி என்னென்ன விளைவுகளை உருவாக்கி ஓய்கிறது. அது ஓய்கிறதா, தொடர்கிறதா?
வாசகர்களை அயர்ச்சி கொள்ள வைக்காத இரா.முருகவேளின் மொழி பெயர்ப்புப் பணி குறிப்பிடத்தக்கது. ஜான் பெர்கின்ஸ் போன்று பலரும் தங்கள் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தந்து அமெரிக்க முகமூடியைக் கிழித்தெறியக் காத்திருப்பது உண்மை .
பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - முன்னுரை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - பொருளடக்கம்