ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
முன்னுரை
பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்தக் கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்குப் பெரும் பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for International Development US AID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி 'உதவி' அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கு இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை, மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப் பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேரரசு எவ்வளவு பழமையானதுதான் என்றாலும் ஆனால் உலகமயமாக்கல் முழுவீச்சில் நடை பெற்று வரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.
நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.
ஒரு பொருளாதார அடியாளின் மனசாட்சி என்ற பெயரில் - 1982 - இல் - நான் எழுதத் திட்டமிட்டிருந்த நூல் இப்படித்தான் தொடங்கியது.
இந்த நூலை ஈக்வடாரின் குடியரசுத் தலைவரான ஜெய்மே ரோல்டோஸுக்கும், பனாமாவின் அதிபரான ஒமர் டோரிஜோஸுக்கும் அர்ப்பணித்திருந்தேன். இவர்கள் இருவரும் எனது வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள். என்னால் மிகவும் மதிக்கப்பட்டவர்கள். ஒத்த கருத்துக் கொண்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள். இந்த இருவரும் அப்போதுதான் நிகழ்ந்த பயங்கரமான விமான விபத்துகளில் உயிரிழந்திருந்தனர். அந்த விபத்துகள் தற்செயலானவை அல்ல. உலகப் பேரரசைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த தொழில் நிறுவனங்கள், வங்கித் தலைமைகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையில் நிலவி வந்த கூட்டணியை எதிர்த்து நின்றதன் காரணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் பொருளாதார அடியாட்களான நாங்கள் தோல்வியடைந்ததால், சி.ஐ.ஏ.வால் இயக்கப்பட்ட இன்னொரு வகையான அடியாட்களான 'குள்ளநரிகள்' இப்படுகொலைகளை நிகழ்த்தினர்.
நான் இப்புத்தகத்தை எழுதுவதை நிறுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டேன். அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் நான்கு முறை இதை மீண்டும் தொடங்க முயன்றேன். 1989 - இல் பனாமா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, முதல் வளைகுடாப் போர், சோமாலியா, ஒசாமா பின்லேடனின் எழுச்சி போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்த போதெல்லாம் இப்புத்தகத்தைத் திரும்பவும் எழுதத் தொடங்கத் தீர்மானிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மிரட்டல்கள் அல்லது கையூட்டுகள் என்னை இடையிலேயே கைவிடும்படி செய்தன.
2003 - இல் ஒரு வலிமை வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய பதிப்பகத்தின் தலைவர் இதன் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டுச் சொல்லியே ஆக வேண்டிய ஆணித்தரமான கதை” என்று குறிப்பிட்டார். ஆனால் வருத்தத்துடன் சிரித்தபடி தலைமை நிர்வாகிகள் ஆட்சேபிப்பார்கள் என்பதால் இதை வெளியிடும் ஆபத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். பதிலாக இதை ஒரு நவீனமாக மாற்றி விடும்படி அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார். "ஜான் லீ கேரி அல்லது கிரஹாம் கிரீன்' போன்ற நாவலாசிரியராக உங்களை விற்று விடலாம்.
ஆனால் இந்நூல் ஒரு கற்பனைக் கதையல்ல. என் சொந்த வாழ்க்கை . எந்தப் பன்னாட்டு நிறுவனத்திற்கும் சொந்தமாயிராத ஒரு பதிப்பகத்தின் துணிச்சல் மிகுந்த பதிப்பாளர் எனக்கு உதவ ஒப்புக் கொண்டார்.
இந்தக் கதை சொல்லப்பட்டே ஆக வேண்டும். நம் காலத்தில் உள்ள நெருக்கடிகள் கடுமையானவைதான். ஆனால் நமக்கு முன் ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் குறிப்பிட்ட பொருளாதார அடியாளின் கதை, நாம் ஏன் இப்போது கடக்கவே முடியாததாகத் தோன்றும் நெருக்கடிகளைச் சந்திக்கிறோம், இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியதாகும். நமது கடந்த காலத் தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை அனுகூலமாக்கிக் கொள்ள முடியும் என்பதனாலேயே இந்தக் கதை சொல்லப்பட்டாக வேண்டும். செப்டம்பர், 11 தாக்குதலின் காரணமாக, இரண்டாவது ஈராக் போரின் காரணமாக, 2001 செப்டம்பர் 11 - இல் தீவிரவாதிகளின் கரங்களில் உயிரிழந்த மூவாயிரம் பேர்களோடு, அதே நாளில் உலகெங்கும் பட்டினியாலும் அது தொடர்பான காரணங்களாலும் இன்னொரு இருபத்து நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதன் காரணமாக இந்தக் கதை சொல்லப்பட்டே ஆக வேண்டும். உயிர் வாழத் தேவையான உணவைப் பெற முடியாமல் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் இருபத்து நான்காயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள்.' எல்லாவற்றையும் விட முக்கியமாக இவையனைத்தையும் மாற்றும் வல்லமையையும், செல்வத்தையும் இன்று ஒரு நாடு பெற்றுள்ளது என்பதால், அந்த நாடு நான் பிறந்த, பொருளாதார அடியாளாகச் சேவை புரிந்த அமெரிக்காதான் என்பதால் இந்தக் கதை சொல்லப்பட்டே ஆக வேண்டும்.
அச்சுறுத்தல்களையும், கையூட்டுகளையும் இறுதியாக என்னைக் கடந்து வரும்படி செய்தது எது?
இதற்கு ஒரு சுருக்கமான பதிலைச் சொல்ல வேண்டுமானால், பட்டம் பெற்ற பின் உலகைத் தனியே எதிர்கொள்ளச் சென்ற என் ஒரே மகள் ஜெஸிகாவைத்தான் குறிப்பிட வேண்டும். நான் சமீபத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவது பற்றிச் சிந்தித்து வருகிறேன் என்பதை அவளிடம் சொல்லி என் அச்சத்தைப் பகிர்ந்து கொண்டபோது அவள் சொன்னாள், “கவலைப்பட வேண்டாம் அப்பா. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால், நீ விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத் தரப் போகும் பேரக்குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்”. இதுதான் அந்தச் சுருக்கமான பதில்.
விரிவான பதில் இதுதான்: நான் பிறந்து வளர்ந்த நாட்டின் மேல் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வு, நமது நாட்டின் தந்தையர் கொண்டிருந்த இலட்சியங்களின் மேல் நான் கொண்டுள்ள அன்பு, உலகின் அனைத்து மக்களுக்கும் 'வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சிக்கான தேடல்' ஆகியவற்றை வாக்களிக்கும் அமெரிக்கக் குடியரசின் பால் எனக்குள்ள ஆழமான பற்று, 9/11-க்குப் பிறகு பொருளாதார அடியாட்கள் இந்தக் குடியரசை உலகப் பேரரசாக மாற்றிக் கொண்டிருக்கும் போது இனி மேலும் மெளனமாக இருக்கக்கூடாது என்று நான் செய்த தீர்மானம் ஆகியவையே. இதுவும் ஒரு நீண்ட பதிலின் சாராம்சம்தான். வரவிருக்கும் அத்தியாயங்களில் இப்பதில் மேலும் விரிவாக விளக்கப்படும்.
இது ஓர் உண்மைக் கதை. இதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வாழ்ந்திருக்கிறேன். இதில் இடம் பெற்றுள்ள இடங்கள், மக்கள், உரையாடல்கள், உணர்வுகள் அனைத்துமே என் வாழ்க்கையின் பகுதிகள்தான். இது எனது தனிப்பட்ட கதை, என்றாலும் அது நமது வரலாற்றை வடிவமைத்த, நாம் இப்போதுள்ள இடத்திற்கு நம்மைக் கொண்டுவந்து சேர்த்த, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய உலக நிகழ்வுகளின் பின்னணியில் நிகழ்ந்தது. இந்த அனுபவங்கள் மற்றும் உரையாடல்களைத் துல்லியமாகத் தர எல்லா முயற்சிகளையும் எடுத்து இருக்கிறேன். வரலாற்று நிகழ்வுகள் பற்றி நான் விவாதிக்கும் போதெல்லாம், உரையாடல்களைத் திரும்ப வழங்கும் போதெல்லாம் வெளியிடப்பட்ட ஆவணங்கள், தனிப்பட்ட ஆவணங்கள், மற்றும் குறிப்புகள், என்னுடைய
------------------------------------------------------------------------------------------------------------------------------
I The United Nations World Food Programme, http://wfp.org/index.asp? section=1 (accessed December 27, 2003). பட்டினியைத் தடுப்பதற்கான தேசிய நிறுவனம் 'ஒவ்வொரு நாளும் பட்டினியாலும் குணப்படுத்தக்கூடிய நோய்களாலும் ஐந்து வயதிற்குட்பட்ட 34,000 குழந்தைகள் உயிரிழந்து வருகின்றன என்று மதிப்பிட்டுள்ளது. (http://napsoc.org, accsses December 2007). Starvationnet “பட்டினியோடு தண்ணீ ரால் வரும் நோய்கள் மற்றும் எய்ட்ஸால் ஏற்படும் மரணங்களையும் சேர்த்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் இறப்பவர்கள் தொகை 50,000-ஐ நெருங்கிக் கொண்டுள்ள து. (http://starvation.net, ac cessed December 27, 2003).
------------------------------------------------------------------------------------------------------------------------------
மற்றும் அந்நிகழ்வுகளோடு தொடர்புடைய மற்றவர்களது நினைவுகள், முற்றுப்பெறாத எனது ஐந்து மூலப் பிரதிகள், மற்ற ஆசிரியர்களது வரலாற்றுக் குறிப்புகள், முக்கியமாக முன்பு கிடைக்கப் பெறாமல் இருந்த அல்லது இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவல்களை வெளிப்படுத்தும் நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே செய்துள்ளேன். இந்நூலில் குறிப்பிடப்படும் விஷயங்கள் குறித்து இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பும் வாசகர்களுக்காக இறுதியில் குறிப்புகளைத் தந்துள்ளேன். சில இடங்களில் ஓட்டம் தடைப்படக் கூடாது என்பதற்காக ஒருவரோடு பல நேரங்களில் நடந்த உரையாடல்களை ஒரே உரையாடலாக மாற்றித் தந்திருக்கிறேன்.
உண்மையில் எங்களை நாங்களே பொருளாதார அடியாட்கள் என்று அழைத்துக்கொள்கிறோமா என்று என்னுடைய பதிப்பாளர் கேட்டார். ஆமாம் என்று நான் உறுதியளித்தேன். பெரும்பாலும் அதன் முதலெழுத்துக்களைக் (EHMS) கொண்டு மட்டுமே எங்களை நாங்கள் அழைத்துக்கொண்டோம் என்றபோதிலும், உண்மையிலேயே 1971 - இல், எனது குருவான கிளேடினுடன் வேலை செய்யத் தொடங்கிய முதல் நாளிலேயே அவள், "எனக்கு அளிக்கப்பட்ட வேலை உன்னை ஒரு பொருளாதார அடியாளாக உருவாக்குவதுதான். உன் மனைவி உட்பட இது யாருக்கும் தெரியக்கூடாது' என்று அறிவித்திருந்தாள். பின்பு "ஒரு முறை இதில் கால்வைத்து விட்டால் பின்பு வெளியே போவது என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று வேறு அவள் என்னை எச்சரித்திருந்தாள்.
நான் அடிவைத்த துறையின் அடிநாதமான பொய்மைக்குக் கிளேடின் ஒரு கவர்ச்சிகரமான உதாரணம். அழகும், புத்திசாலித்தனமும் அவளை மிகவும் சக்தி வாய்ந்தவளாக்கியிருந்தன. எனது பலவீனங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தனக்குச் சாதகமான விதத்தில் மிகச் சரியாக அவள் பயன்படுத்தினாள். இப்பணியை அவள் செயல்படுத்திய விதம் இந்த அமைப்பிற்குப் பின்னால் உள்ளவர்கள் எவ்வளவு நுணுக்கமானவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டியது.
நான் செய்ய வேண்டியது என்ன என்பதை விவரித்தபோது கிளேடின் ஒளிவு மறைவு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. “அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப்பின்னலின் பகுதியாக மாறுவதற்கு உலகத் தலைவர்களைத் தூண்டுவது. முதலில் இந்தத் தலைவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு நமது அரசியல், பொருளாதார, இராணுவத் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக அவர்கள் தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள், மின்சக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொறியியல், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள்," என்று அவள் சொன்னாள்.
இந்த அமைப்பு மூர்க்க வெறிகொண்டு ஓடியதன் விளைவுகளை இன்று நாம் பார்க்கிறோம். மனிதத்தன்மையற்ற சூழல் நிலவுகின்ற, மனிதர்களைக் கசக்கிப் பிழிகின்ற ஆசியத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நமது மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத் தரப்பட்டது போன்ற கூலியையே தந்து வருகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே விஷப் பொருட்களை (toxins) மழைக் காடுகளினூடே ஓடும் ஆறுகளுக்குள் கொட்டுகின்றன. அவை திட்டமிட்டே விலங்குகளையும், தாவரங்களையும் அழிப்பதோடு, பழம் பண்பாடுகளைப் பின்பற்றும் மக்களையும் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவிக்கின்றன. மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளை அளிக்க மறுக்கின்றன. நமது நாட்டிலேயே பன்னிரெண்டு மில்லியன் மக்கள் அடுத்த வேளை உணவைக் குறித்துக் கவலை கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆற்றல் வளத்துறை என்ரானை' உருவாக்குகிறது. வரவு செலவு கணக்குத் துறை ஆண்டர்சனை ** உருவாக்குகிறது. பணக்கார நாடுகளின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரின் வருமானத்திற்கும், ஏழைநாடுகளின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரின் வருமானத்திற்கும் இடையேயான விகிதாசாரம் 1960 லிருந்து 70 வரை 30.1 ஆக இருந்தது 1995-இல் 74.1 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் டாலர் செலவிடுகிறது. ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது.
இப்படியிருக்கும்போது தீவிரவாதிகள் ஏன் நம்மைத் தாக்குகிறார்கள் என்று நாம் அப்பாவித்தனமாக ஆச்சரியப்படுகிறோம்!
திட்டமிட்ட சதியே நமது தற்போதைய பிரச்சனைகளுக்குக் காரணம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். அது அவ்வளவு எளிமையானதாக இருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அப்படியிருந்துவிட்டால் இந்தச் சதியாலோசனையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வளைத்துப் பிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டுவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் இந்த அமைப்பு ஒரு சதியைவிடப் பல மடங்கு அபாயகரமானது என்றால் எத்தித் தள்ளப்படுகிறது. சதியாலோசனையில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவால் அல்ல, வேதவாக்கியத்துக்குச் சமமாக மதிக்கப்படும் ஒரு கோட்பாட்டாலேயே இந்த அமைப்பு வழிநடத்தப்படுகிறது. எல்லாப் பொருளாதார வளர்ச்சியும் மனித குலத்திற்கு நன்மையே செய்கிறது. வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க நலன்களும் மேலும் பரவலாக்கப்படும் என்பதுதான் அந்தக் கோட்பாடு. அதற்கு ஒரு பின்விளைவும் உண்டு. பொருளாதார வளர்ச்சி என்ற நெருப்பைக் கிளறி விடுவதில் முன்னணியில் உள்ளவர்கள் மேன்மைப்படுத்தப்படவும் பரிசளிக்கப்படவும் வேண்டும். அதே நேரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அது.
இந்தக் கோட்பாடு தவறானது. பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினருக்கே பலனளிப்பதையும், பெரும் பகுதியினருக்கு அது அழிவையும் வறுமையையுமே அளிப்பதையும் நாம் அறிவோம். இந்த அமைப்பை நடத்திச் செல்லும் தலைவர்களுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தால் இந்த அநீதி நியாயப்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தே நமது பிரச்சனைகள் பலவற்றுக்கு அடிப்படைக் காரணமாகவும், சதி பற்றிய கருத்துகள் பரவுவதற்கு ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. பேராசைப்படுவதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பரிசளிக்கப்படும்போது பேராசை நியாயமானதாக, தூண்டுகோலாக, உந்துவிசையாக ஆகிவிடுகிறது. பூமியின் இயற்கை வளங்களை அரக்கத்தனமான நுகர்வுக்கு உட்படுத்துவதைப் புனிதமான ஒன்றாகக் கருதும்போது, சமனற்ற வாழ்க்கை வாழும் இந்தச் சிறுபான்மை மேட்டுக்குடியினரைப் பின்பற்றும்படி நமது குழந்தைகளுக்குக் கற்றுத் தரும்போது, சிறுபான்மையினரான மேல்தட்டு வர்க்கத்தினரின் சேவகர்களாகப் பெரும்பான்மை மக்களை வரையறுக்கும் போது நாம் தொல்லையை நாடிப் போகிறோம். நாம் தேடியது கிடைக்கிறது.
உலகப் பேரரசை நோக்கிய பாய்ச்சலில் முன் நிற்கும் நிறுவனங்களும், வங்கிகளும், அரசாங்கங்களும் (சுருக்கமாகச் சொல்வதானால், நிறுவன அதிகார வர்க்கம்) தங்கள் அதிகாரங்களையும் பண பலத்தையும் பயன்படுத்தி, நமது பள்ளிகளும், ஊடகங்களும் இந்தக் கற்பனையான கருத்தையும் அதன் விளைவுகளையும் ஆதரிக்கும்படி செய்கின்றன. இந்த அரக்கத்தனமான இயந்திரமயமான உலகப் பண்பாட்டின் தீராத பசி கண்ணில் தென்படும் அனைத்தையும் நுகர்ந்து விட்டு இறுதியில் தன்னைத்தானே விழுங்கிக்
------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்ரான்: மின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய மாபெரும் பன்னாட்டு நிறுவனம். பின்பு இந்நிறுவனம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி மூடப்பட்டது. (மொ-ர்) ** ஆண்டர்சன்: பிரபலமான கணக்குத் தணிக்கை நிறுவனம் (மொ-ர்)
2. U.S.Department of Agriculture findings, reported by the Food Research and Action Center (FRAC) http://frac.org (accessed December 27, 2003)
3. United Nations. Human Development Report. (New York: United Nations, 1999).
4. “1998-இல் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் உலகிலுள்ள அனைவருக்கும் தூய்மையான உணவும் சுகாதார வசதிகளும் அளிக்க தற்போது செலவிடப்பட்டு வரும் தொகைக்கு மேலாக இன்னும் ஒன்பதாயிரம் கோடி டாலர் தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அனைவருக்கும் பேறு கால சேவைகள் அளிக்க இன்னும் பன்னிரெண்டாயிரம் கோடி டாலர் தேவைப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான உணவையும், அடிப்படை உடல் நலம் பேணும் வசதிகளையும் அளிக்க இன்னும் பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டால் போதும். இன்னொரு ஆறாயிரம் கோடி டாலர் செலவிட்டால் போதும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி அளித்து விடலாம். எனவே நாற்பதாயிரம் கோடி டாலர் செலவிட்டால் போதும், இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம்.” John Robbins, Author of Diet for a New America and The Food Revolution, http:// foodrevolution.org (accessed December 27, 2003),
------------------------------------------------------------------------------------------------------------------------------
கொள்வதைத் தவிர வேறு மாற்று வழி இல்லாத ஒரு கட்டத்திற்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
நிறுவன - அதிகார வர்க்கம் என்பது ஒரு சதிக் கும்பலல்ல; அது சில பொதுவான மதிப்பீடுகளையும், லட்சியங்களையும் முன்னிறுத்தியுள்ளது. இந்த வர்க்கத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று இந்த அமைப்பை நிலை நிறுத்துவதும், அதை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதுமாகும். இதன்
சூத்திரதாரிகளின் வாழ்க்கை , அவர்களது மாளிகைகள், உல்லாசப் படகுகள், ஜெட் விமானங்கள் போன்றவை எல்லையற்ற நுகர்வுக் கலாசாரத்தில் நம்மைத் தள்ளுவதற்கான தூண்டுகோல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை வாங்குவது மறுக்க முடியாத கடமை; பூமியைக் கொள்ளையிடுவது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது. இக்கருத்தை நம் மீது திணிக்கச் சாத்தியமான எல்லா வாய்ப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு ஏலம் கூறும் வேலையைச் செய்ய என்னைப் போன்றவர்களுக்குப் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் வேலையில் தோல்வியடைந்ததால் இன்னும் மோசமான அடியாட்கள் - குள்ளநரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் - அரங்கிற்கு வருவார்கள். அவர்களும் தோல்வியடையும் பட்சத்தில் அந்த வேலை இராணுவத்தின் தலையில் சுமத்தப்படுகிறது.
இந்நூல், ஒப்பீட்டளவில் ஒரு சிறிய குழுவில் நான் பொருளாதார அடியாளாக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாகும். அதே பாத்திரத்தை ஆற்றக்கூடியவர்கள் இப்போது ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கு இன்னும் அழகான பட்டங்கள் சூட்டப்படுகின்றன. அவர்கள் மன்சான்டோ , ஜெனரல் எலெக்ட்ரிக், நைக், ஜெனரல் மோட்டார்ஸ், வால் - மார்ட் உள்ளிட்ட உலகின் மாபெரும் நிறுவனங்களில் உள்ள நடைபாதைகளில் நடை பயில்கிறார்கள். உண்மையில் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னுடையதைப் போலவே அவர்களுடைய கதையும்தான்.
இது உங்கள் கதையும்கூட, உண்மையாகவே முதன்முதலாக உலகம் முழுவதையும் கட்டியாளும் ஒரு பேரரசின் கதை. இந்தக் கதையை நாம் மாற்றியமைக்காவிட்டால் அது நிச்சயம் துன்பமயமாகத்தான் முடியும் என்று வரலாறு காட்டுகிறது. எந்தப் பேரரசும் நீடித்து நிலைத்திருந்ததே கிடையாது. அவை ஒவ்வொன்றுமே பயங்கரமான தோல்வியையே தழுவியுள்ளன. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாய்ச்சலில் அவை பல பண்பாடுகளை அழிக்கின்றன. தாங்களும் இறுதியில் அழிவையே சந்திக்கின்றன. எந்த நாடும், நாடுகளின் கூட்டணியும், மற்றவர்களைச் சுரண்டி நீண்டகாலம் செழித்திருந்து விட முடியாது.
இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதும், அதன் மூலம் நம் வரலாற்றை மாற்றியமைப்பதுமேயாகும். நாம் எப்படி உலகின் மூல வளங்களின் மேல் தீராப் பசியை உருவாக்கும் பொருளாதார இயந்திரத்தால் சுரண்டப்படுகிறோம், அது எப்படி அடிமைத்தனத்தை முன்னிறுத்தும் அமைப்புகளை உருவாக்குகின்றது என்பதை நம்மில் போதுமான அளவினர் உணர்ந்து கொண்டால் அதை இனிமேலும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது. சிலர் மட்டும் செல்வத்தில் மூழ்கித் திளைக்கும் போது பெரும்பாலோர் வறுமையிலும், சீரழிந்து போன இயற்கைச் சூழலிலும், வன்முறையிலும் வதைபடும் இவ்வுலகில் நம் பாத்திரத்தை மறு ஆய்வு செய்வோம். சமூக நீதி, ஜனநாயகம், அன்பு ஆகியவற்றை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான பயணத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம்.
பிரச்சனை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது தீர்வை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி பாவம் செய்ததை ஒப்புக் கொள்வதே பாவ மன்னிப்பின் தொடக்கம். எனவே இந்த நூல் நமது மீட்சிக்கான தொடக்கமாக இருக்கட்டும். அதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும், சமத்துவம் மிக்க கண்ணியமான சமூகங்கள் பற்றிய கனவை நனவாக்கவும் அது நமக்குத் தூண்டுதலாக இருக்கட்டும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள என் வாழ்வில் முக்கியப் பங்காற்றிய பலரது பங்களிப்பு இல்லாமலிருந்திருந்தால் இப்படியொரு நூல் எழுதுவது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். இவர்களிடம் கற்ற பாடங்களுக்கும், பெற்ற அனுபவங்களுக்கும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
இவர்களைத் தவிர தனிமைப்பட்டிருந்த என்னை, என் கதையை வெளிப்படையாகச் சொல்வதற்கு ஊக்கமளித்த, ஸ்டீபன் ரெக்ட்ஸ்ஃ பென், பில் ட்விஸ்ட், லைனே ட்விஸ்ட், ஆன் கெம்ப், ஆர்ட் ரோஃபே மற்றும் 'கனவை மாற்றும் பயணங்கள் மற்றும் பயிலரங்கங்களில் பங்குகொண்ட பலர், குறிப்பாக என் சக பயிற்சியாளர்களான ஈவா புரூஸ் லின் ராபர்ட்ஸ்
ஹாரிக் மேரி டென்டல் மற்றும் இருபத்தைந்தாண்டு காலமாக எனக்கு மனைவியாக மட்டுமல்லாமல் துணைவியாகவும் இருந்து வரும் வின்பிரட் மற்றும் என் மகள் ஜெஸிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்னாட்டு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளின் அரசியல் மர்மங்கள் குறித்த தனிப்பட்ட பார்வையையும், தகவல்களையும் வழங்கிய பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்களில் குறிப்பாக மைக்கேல் பென் - எலி, சபரினா பொஎலொக்னி, ஜூவான் கேப்ரியேல் கராஸ்கோ, ஜெம்மி கிரான்ட், பால் ஷா மற்றும் பெயர் குறிப்பிடப்பட விரும்பாத ஆனால் உங்களை நன்கறிந்துள்ள பலருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலின் கையெழுத்துப் பிரதி தயாரானவுடன் பெர்ரட் கோல்லர் பதிப்பக்கத்தின் ஸ்டீபன் பியாஸான்டி தொடர்ந்து முன்னேற என்னை ஊக்குவித்ததோடு, திறமை வாய்ந்த ஆசிரியர் என்ற முறையில், பல மணி நேரம் செலவழித்து இந்நூலை வடிவமைக்க எனக்கு உதவியுள்ளார். ஸ்டீபனுக்கும், என்னை அவருக்கும் அறிமுகப்படுத்திய ரிச்சர்ட் பெர்ல்க்கும், மற்றும் இந்நூலைப் படித்து விமர்சனங்கள் வழங்கிய நோவா பிரவுன், ரன்டி பியட், ஆலன் ஜோன்ஸ், கிரிஸ் லீ, ஜெனிபர் லிஸ் லாவ்ரி பெலுசூட் ஆகியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்நூலைப் படித்து விமர்சனங்கள் வழங்கியதோடு நில்லாமல், மொழிநடையில் எனக்கேற்பட்ட சிக்கல்களைக் கடந்துவர உதவிய மிக உயர்ந்த இலக்கியத் திறனுடைய டேவிட் கோர்ட்டென், எனது முகவர் பால் பெடோர்கோ, நூலை வடிவம் வாலெரி புரூஸ்டர் சொற்பிரயோகத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், அற்புதமான தத்துவஞானம் கொண்டவரும், இந்த நூலின் Copy Editor ஆன (பிரதி சரி பார்த்தவருமான) டொட் மன்ஸாவிற்கும் எனது நன்றிகள்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்து, இவ்வுலகை இன்னும் மேம்பட்டதாக ஆக்க இடையறாது உழைத்து வரும் பெர்ரட் கோல்லரின் நிர்வாக ஆசிரியர் ஜீவன் சிவசுப்பிரமணியன், கென் லுபோஃப், ரிக் வில்சன், மரியா ஜீஸஸ் ஆகுல்லோ , பேட் ஆன்டர்சன், மரீனா குக், மைக்கேல் க்ரோவ்லி, ராபின் டொனோவன், கிரிஸ்டன் ப்ரான்ட்ஸ் டிஃபனி லீ கேத்தரீனே லெங்குரோன்னி, டயான்னே பிளான்ட்டர் மற்றும் ஏனைய ஊழியர்களின் பால் நான் கொண்டுள்ள நன்றியுணர்வையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
என்னோடு மெய்ன் (MAIN) நிறுவனத்தில் பணிபுரிந்து, உலகப் பேரரசை நிலைநிறுத்துவதற்குத் தங்களை அறியாமலேயே பணிபுரிந்து வந்த பொருளாதார அடியாட்கள் அனைவருக்கும் நான் கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக இந்த நிறுவனத்தில் நேரடியாக என்னிடம் பணியாற்றிய, தொலைதூரப் பகுதிகளுக்கு என்னுடன் பயணம் செய்த, பல அற்புதமான கணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழங்குடிப் பண்பாடுகள் மற்றும் மந்திரவாதம் பற்றிய எனது முந்தைய நூல்களை வெளியிட்ட நூலாசிரியனாகும் பாதையில் என்னைச் செல்லத் தூண்டிய புதைந்து கிடக்கும் பன்னாட்டு மரபுகள் (Inner Traditions International) - ன் ஈஹுட் ஸ்பெர்லிஸ் மற்றும் அவரது ஊழியர்களுக்கு எனது நன்றிகள்.
அடர்ந்த காடுகளிலும், பாலைவனங்களிலும், மலைகளிலும், ஜகார்த்தா நகரின் வாய்க்கால் ஓரம் அமைந்திருந்த குடிசைகளிலும் இன்னும் உலகம் முழுவதுமுள்ள எண்ணற்ற நகரங்களிலுள்ள சேரிகளிலும் உள்ள தங்கள் வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்ற, தங்கள் உணவையும், வாழ்வையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட, எப்போதும் எனக்கு உணர்வும் ஊக்கமும் அளித்து வரும் மக்களுக்கு நான் என் றென்றைக்கு மாகக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜான் பெர்க்கின்ஸ்
ஆகஸ்ட் 2004