நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - முன்னுரை
குழந்தைகளும் ஆண்களும் பெண்களுமாய் நாற்பத்து நான்கு பேர் துள்ளத் துடிக்கத் தீயில் கருகி மாய்ந்துபோன கோரச்சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அந்தச் சம்பவ நினைவுகள் கடக்காமல் அங்கேயே நிற்கின்றன.
இவர்களை அழித்த சூத்திரதாரி பின்னர் அழிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் அழித்து விட்டதாக நினைத்து பூமியில் அந்த நாற்பத்து நான்கு பேரும் விதைகளாய் விழுந்து செழித்துவிட்டார்கள். தங்களின் கனவுக்கேற்பவே செங்கொடி இயக்கத்தை அசைக்க முடியாமல் வளர்த்து விட்டார்கள்.
சங்கம் சேர்ந்து தலை நிமிர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்துக் காக இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதி வழங்கிய முறையைச் சொல்வதுதான் இந்த நூல். நிர்வாகத் தூண் செயல்பட்ட விதமும் இதன் மூலம் தெரியவரும்.
பெண்டு பிள்ளைகளை இழந்த எம் விவசாயக் கூலித் தொழிலாளத் தோழர்கள் வழக்கைச் சந்திக்கக் காவல் நிலையம் சென்றிருப்பார்கள், மிரட்சியோடு அவர்களின் விசாரணையை சந்தித்திருப்பார்கள்; நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பார்கள்; வழக்குரைஞர்கள் பேசுவதைக் கேட்டு வியந்திருப்பார்கள். அறியாத ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட தீர்ப்பு களின் சாராம்சமும் அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கும்.
தாய்மொழியில் தாங்கள் அளித்த வாக்கு மூலத்தையே பிறர் படித்துக் காட்ட சரியென ஒப்பி கைநாட்டு வைத்திருப்பார்கள் பலர். இந்த நிலையில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நீதிமன்றத் தீர்ப்புகளின் விவரமும் முழுமையாக அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
செவிவழிச் செய்தியாக மட்டுமல்லாமல் இந்த ஆவணங்கள் பற்றி ஆதியோடந்தமாக அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. அவர்களைப் போன்ற விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் - அவர்கள் மீது அக்கறை கொண்ட அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
நீதியும் நிர்வாகமும் எப்படி வர்க்கச் சார்போடு இருக்கின்றன என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் உண்டு. வெறும் வார்த்தைகளால் சொல்லக் கேட்டுக் கொள்ளாமல் எழுத்துக்களாகப் பதிவு செய்து வைப்பதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு உதவும்.
எனவே நாற்பது ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அந்த ஆவணங்களைத் தாமதமாகவேனும் தமிழில் வெளிக் கொண்டு வருவதற்கு அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் பெ. நா. சிவம் அவர்கள் மேற்கொண்ட முயற்சி வெகுவாகப் பாராட்டத்தக்கது என்றால் அது ஒரு சடங்காகவே இருக்கும். அவரது ஒவ்வொரு முயற்சியும் தமிழ் வாசகர்களுக்கு அரிதினும் அரிதைத் தேடித் தருபவை. அவற்றின் சிலவற்றுக்கு எனது மொழிபெயர்ப்புப் பங்களிப்பும் உள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு.
இந்த ஆவண நூலில் அரசுத் தரப்பு சாட்சிகளான விவசாயத் தொழிலாளிகள் மற்றும் எதிர்த்தரப்பு சாட்சிகள் அளித்த வாக்கு மூலங்கள் தமிழிலேயே இருந்தவை. காவல் துறை, தடய அறிவியல் துறை, மருத்துவத் துறை ஆவணங்களும் மருத்துவர்கள் அளித்த வாக்கு மூலங்களும் நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அளித்தத் தீர்ப்புகளும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை மொழிபெயர்த்தபோது, கீழ வெண்மணி யின் தலித் விவசாயத் தொழிலாளிகளோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவர்கள் பட்ட வேதனைகள், சந்தித்த சோதனைகள், வாழ்க்கை அவலங்கள் ஒருபக்கம் மனக்கண்ணில் விரிந்தன. மறுபக்கமோ எதிரி வர்க்கத்தின் எகத்தாளங்கள், திமிர்த்தனங்கள் இந்த முதலைகளின் பற்களைப்பிடுங்க விவசாயக் கூலிகளான வீரப்புதல்வர்கள் காட்டிய துணிச்சல்கள் தெரிந்தன.
இவற்றில் மருத்துவத் துறை சார்ந்த ஆவணங்களின் மொழி பெயர்ப்பில் உதவி செய்த மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் அவர்களுக்கும் சட்டம் சார்ந்த மொழி பெயர்ப்பில் துறை சார்ந்த சிறப்பு சொற்கள் மற்றும் சில தொடர்களுக்கு விளக்கம் அளித்து உதவிய வழக்குரைஞர் சி. திலகா மற்றும் தோழர் திரு. ராசய்யா ஆகியோருக்கும் நன்றி சொல்வது மிகமிக அவசியம்.
இந்த முன்னுரையை எழுதும்போது என்னுள் ஏற்பட்ட சிறு உறுத்தலையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். இந்த நூலுக்கான ஆவணங்கள் நிகரி (Xerox) யாகத்தான் கிடைத்தன. இவற்றில் மிகமிகச் சொற்பமான இடங்களில் எழுத்துக்கள் வெட்டுப்பட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தன. அவற்றையும் சரி செய்து விட வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்பட்டது. மூலப் பிரதியைப் பெற முயற்சி செய்தோம். "ராமய்யாவின் குடிசை' ஆவணப்படத் தயாரிப்புக்காக ஆவணங் களை சேகரித்த தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் ஆவணங்களின் மூலப் பிரதி இருப்பதாக அறிந்தோம். அவரும் பிரதிகளைத் தந்து உதவுவதாகக் கூறினார். ஆனால் பின்னர் அவரை செல்பேசியில் தொடர்பு கொண்ட போதெல்லாம் வெளியூரில் இருப்பதாகவும், படப்பிடிப்பில் இருப்பதாகவும் சொன்னது உண்டு; எதுவும் பேசாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டதும் உண்டு. கடைசி நிமிடம் வரை அவரின் உதவி கிடைக்காமலேயே போனதால் "மதிப்புறத்து பட்ட மரு போல" மிக மிகச் சொற்பமான ஒரு சில இடங்களில் மட்டும் வார்த்தைகளை முழுமையாக்க அவரது உதவி கிடைக்கவில்லை என்ற வருத்தமே அந்த உறுத்தல்.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாய் நிலைத்திருக்கும் கீழ்வெண்மணிச் சம்பவ ஆவணங்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பை எனக்களித்த தோழர் அலைகள் சிவம் அவர்களுக்கும் எனது மொழியாக்க நூல்களை வாசித்து என்னை செழுமைப் படுத்துகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த ஆவண நூல் ஒவ்வொரு போராளியின் இல்லத்திலும் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
தோழமையுடன்
மயிலை பாலு