Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அணிந்துரை

 

 

 

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமென்று அறியப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகை வட்டம் கீழ்வெண்மணியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த கோரப் படுகொலையில் 44 உயிர்கள் பலியாயின. சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், வயதானவர் கள் என்று ஒரு ஓலைக் குடிசைக்குள் பயந்து ஒதுங்கியவர்களை நெருப்பு வைத்து உயிருடன் எரித்த அந்தக் கொடுமை குறித்து நாடே அதிர்ச்சியடைந்தது. மனித நேயமிக்கவர்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். இப்படியும் நடக்குமா என்று பலர் வேதனைப் பட்டனர். இந்தச் சம்பவத்தில் நீதி எப்படி செயல்பட்டது, காவல் துறை எப்படி அந்த வழக்கை நடத்தியது என்பது குறித்தும், அரசும் காவல்துறையும் அந்த வழக்கு சம்பந்தமாக தயாரித்த ஆவணங்கள், நீதிமன்றங்கள் இது குறித்து வழங்கிய தீர்ப்புகள் பற்றி தோழர்கள் மயிலை பாலு, அலைகள் சிவம் ஆகிய இருவரும் முயற்சி எடுத்து ஒரு ஆவணம் கூட விடுபடாமல் சேகரித்து தொகுத்து ஆங்கிலத்தில் இருந்ததை தமிழாக்கம் செய்து " நின்று கெடுத்த நீதி'' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 25.12.1968 இரவு 11.15 மணிக்கு கீவளூர் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ள முதல் தகவல் அறிக்கையில் இருந்து 6.4.1973 -ல் சென்னை உயர்நீதிமன்றம், “இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பது திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது'' என்று வழங்கி இருக்கும் தீர்ப்பு வரையிலான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

 முதல் தகவல் அறிக்கை

25.12.1968 இரவு 10.30 மணி முதல் 3.30 மணி வரை கீவளூர் காவல் நிலையத்தில் மூன்று முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்யப்படுகிறது. ஒன்று: 326/68. மாலை 7.30 மணிக்கு சம்பவம் நடந்ததாகக் கீழ்வெண்மணியைச் சேர்ந்த ஆர். பக்கிரிசாமி என்பவர் தகவல் தந்ததாகக் கூறி 10.30 மணிக்கு வழக்குப் பதிவாகிறது. இது கீழ்வெண்மணியில் உள்ள ஆர். பக்கிரிசாமி அவருடைய தகப்பனார் ராமசாமி இருவரையும் விவசாயத் தொழிலாளர்கள் வெட்டியதாக உள்ள வழக்கு, இரண்டு: 327/68 இரவு 10 மணிக்கு சம்பவம் நடந்த தாகக் கீழ்வெண்மணி முனியன் என்பவர் தகவல் தந்ததாகக் கூறி இரவு 11.15 மணிக்கு வழக்குப் பதிவாகிறது. இது கீழ் வெண்மணி

தெருவில் நெருப்பு வைத்து துப்பாக்கியால் சுட்ட வழக்கு. 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டது பற்றிய இந்த முதல் தகவல் அறிக்கையில் 302வது பிரிவு இடம் பெறவில்லை. இந்த வழக்கு குறித்த தகவல் அறிக்கை 26.12.1968 மாலை 6 மணிக்குத்தான் அனுப்பி வைக்கப் படுகிறது. மூன்றாவது: 328/68. இரவு 7 மணிக்கு சம்பவம் நடந்ததாக இருக்கையைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தகவல் தந்ததாக இரவு 3.30 மணிக்கு வழக்குப் பதிவாகிறது. இது இருக்கை பக்கிரிசாமிப் பிள்ளையை விவசாயத் தொழிலாளர்கள் வெட்டிக் கொன்றுவிட்ட தாக உள்ள வழக்கு.

இந்த மூன்று முதல் தகவல் அறிக்கைகளையும் படித்தாலே வழக்குகளில் பரிச்சயம் உள்ள யாரும் (சட்டப்படிப்பு தேவை யில்லை) இந்த வழக்கு வெற்றி பெறாது; குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். இந்த வழக்கு இப்படித்தான் முடியும் என்பது இந்தக் கொலை நடத்தியவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தெரியும். அதுதான் இந்த வழக்கில் நிலைநாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது அரசுத்தரப்பு குற்றத்தை நிரூபிக்கவில்லை என்று கூறி நீதிபதிகள் தங்கள் கதையை முடித்திருக்கிறார்கள்.

இருபது ரூபாய் அபராதம் போட்டார்கள்; 250 ரூபாய் போட்டார்கள் என்றுதான் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதே தவிர, இதைக் கொடுக்காமலேயே விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவராக இருந்த, டீக்கடை நடத்திக் கொண்டிருந்த முத்துசாமியிடம், “நீ வாங்கி இருக்கும் 250 ரூபாயைக் கொடு'' என்று கட்டாயப்படுத்தியதோ, 25.12.1968 மாலை அவரை கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் கட்டித் தூக்கிப்போய் இராமானுஜ நாயுடு வீட்டில் பூட்டிவைத்ததோ அந்த வீட்டுப் பெண்கள் முத்துசாமியைக் கொல்லைப் புறமாக வெளியே போய்விடு என்று அனுப்பி வைத்ததோ இந்த ஆவணத்தில் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 25 ஆம் தேதி நிகழ்ச்சியின் துவக்கம் இருக்கை பக்கிரிசாமியைத் தூக்கிச் சென்றதுதான் என்று காட்டுவதற்காக, முத்துசாமியைத் தூக்கிக் கொண்டு போனதுதான் இந்த நிகழ்ச்சியின் துவக்கம் என்பதை மறைத்து, அது இந்த வழக்கில் எங்கும் வந்துவிடாமல் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 25.12.68 நிகழ்ச்சி என்பது திட்டமிட்ட நிகழ்ச்சி என்பது வசதியாக மறைக்கப்பட்டு திட்டமிட்ட சதிக்குரிய இ.த.ச 120 பி பிரிவு இந்த வழக்கில் தலைக்காட்டாமலே மறைக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் வசதிபடைத்தவர்கள், சொந்தக் கார் வைத்திருப்பவர்கள் இப்படி செய்வார்களா என்ற கேள்வியை உயர்நீதி மன்றம் எழுப்ப வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டது.

இரு வழக்கில் இருவித தண்டனை

327/68 வழக்கில் இராமய்யன் வீடு தவிர 22 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். 14 பேர் மீது குண்டுகள் பாய்ந்து அவர்கள் உடம்பில் இருந்து 33 குண்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் மேலாக இராமய்யன் வீட்டில் 44 பேர் உயிருடன் வைத்து எரிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அலறிய சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்டிருக்கிறது உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து தெருப்பக்கக் கதவிற்கு வெளித்தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள். ஒரு தாய் தான் பெற்ற மகன் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியே தூக்கி எறிகிறாள். அந்தக் குழந்தையும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த வெறிபிடித்தக் கூட்டம் அந்தப் பிள்ளையைக் கண்ட துண்டமாக வெட்டி மீண்டும் தீயில் தூக்கி எறிகிறார்கள்.

தீயில் எரித்துக் கொல்லப்பட்டவர்கள் குறித்து 5 பஞ்சாயத்தார் கள் அமைத்து காவல் துறையால் எழுதி வாங்கப்பட்ட பஞ்சாயத் தார் முடிவு இந்தப் புத்தகத்தின் வழக்கு ஆவணங்களில் இருக்கிறது. "வீட்டிற்குள் இருந்தவர்கள் வீடு தீப்பிடித்ததால் இறந்திருக்கலாம் என்று தனித்தும் ஏகோபித்தும் அபிப்பிராயப்படுகிறோம்''. காவல் துறை ஆவணங்களை எப்படித் தயாரிக்கிறது பார்த்தீர்களா? "தீப்பிடித்ததால், தீ வைத்ததால் அல்ல.'' அதேபோல் எரிக்கப்பட்ட 22 வீடுகள் குறித்தும் வழக்கு ஆவணத்தில் தீப்பிடித்து எரிந்திருக் கிறது; நெருப்பால் எரிந்த கூரை வீடு, நெருப்புப் பிடித்து எரிந்து விட்டது - இப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர தீவைத்து எரிந்தது என்று எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.

ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்த என். கோபாலுக்கு ஆயுள் தண்டனை. நாகை, சென்னை, டெல்லி நீதிமன்றங்கள் அனைத்திலும் ஒரே தண்டனை. தண்டனை முடிந்துதான் விடுதலை.

ஆனால் 44 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும்போது நாகை அமர்வு நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பிலேயே இ.த.ச. 302 வது பிரிவின் கீழ் தண்டனை இல்லை. வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த 23 பேரில் 15 பேர் நாகையிலேயே விடுதலை. 8 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை, சிலருக்கு 2 முதல் 10 ஆண்டுகள்; ஏககாலத்தில் 8 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை; சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 பேரும் விடுதலை.

நீதிபதிகளின் தீர்ப்பில் சில பகுதிகள்

நாகை அமர்வு நீதிமன்றத்தில் அனைத்து விசாரணைகளையும் தொகுத்து 237 பகுதிகளாக மதிப்பீடு செய்து கடைசியாக நீதிபதி கூறுகிறார். (பக். 367) “குற்றவாளிகளுக்கு விதிக்க வேண்டிய தண்டனை குறித்து நான் கவனத்துடன் பரிசீலித்தேன். இந்தக் குற்றவாளிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். வீடுகளுக்கு திட்டமிட்டே தீ வைத்திருக்கிறார்கள். தீயிடல் மூலம் மூன்று தெருக்களை முற்றிலுமாக அழித்திருக் கிறார்கள். துப்பாக்கியால் சுட்டு இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாயிகளைக் கொல்ல முயற்சித்திருக்கிறார்கள். மேலும் கொடுங் காயமும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இந்தக் குற்றவாளிகள் தீ வைத்தது தொடர்பான சம்பவத்தில் 42 அப்பாவி மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் அச்சம் தரும் தண்டனை தேவை என்பது என் கருத்தாக உள்ளது." இப்படி தனது கருத்தைப் பதிவு செய்த நீதிபதி அவர்கள் 23 பேரில் 15 பேரை விடுதலை செய்துவிட்டு 8 பேருக்கு மட்டும் இ.த.ச. பிரிவு 149 உடன் இணைந்த 436 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித் தார். 302 -வது பிரிவு வழக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடுகிறார்கள்: வந்தவர்களுக்கு ஹரிஜனங்களைத் துன்புறுத்துவது நோக்கமல்ல. இருக்கை பக்கிரிசாமியை மீட்கத்தான் வந்தார்கள். "கீழ்வெண்மணி யில் ஹரிஜனங்கள் வசிக்கும், முக்கியமாக இடது கம்யூனிஸ்ட்க ள் வசிக்கும், ஐந்து தெருக்களும் கிழக்குத் தெரு, தெற்குத் தெரு ஆகிய இந்தத் தெருக்களிலும் இருப்பதைக் குறிப்பிடலாம். அணிதிரண்ட கூட்டத்தின் முக்கியமான நோக்கம் ஹரிஜனங்களைத் துன்புறுத்து வதுதான் என்றிருந்தால் இந்த அனைத்துத் தெருக்களிலும் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை''

"அரசாங்க சாட்சி 11 (இராமய்யன்) வீட்டில் தஞ்சம் புகுந்த 42 அப்பாவி விவசாயிகள் அந்த வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டதால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது. அ.சா. 11 வீட்டுக்குத் தீ வைத்தவர்களுக்கு அந்த வீட்டுக்குள் 42 பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்பதையும் அவர்களை எரித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும் அறிவது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது." இதில் நாகை நீதிமன்ற கருத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கும் இருக்கும் வேறுபாட்டை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

உயர்நீதி மன்றத்தின் உச்சகட்ட மதீப்பீடு " இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பது திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. (அழுத்தம் நமது) அடுத்து “இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள் (தமிழ் நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் வந்த பிறகு) முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயி களைப் பழிவாங்கும் அளவுக்குப் பலவீனமான எண்ணம் கொண்டிருப் பார்கள். இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்து வந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப் பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது." சம்பவ இடத்திற்கு மிராசுதாரர்களே நேரடியாக வந்து குற்றங்களை செய்தார்கள் என்பது அரசு தரப்பு வாதம்.

விடுதலை

"பதிவான ஒட்டுமொத்த சாட்சியத்தையும் பரிசீலித்ததில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரையும் குற்றவாளியாக நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீர்மானிக்கும் நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாகையில் வழங்கிய தண்டனையில் இருந்து விடுதலை செய்கிறோம்.''

தெரிவதென்ன

இந்தத் தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள் 23 வீடுகளைத் தீக்கிரை யாக்கியவர்கள், துப்பாக்கியால் சுட்டு 33 குண்டுகளுடன் 14 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியவர்கள் யார்? இவ்வளவு பாதிப்புக்கும் ஆளானவர்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் இந்தக் கொடுங் குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று நமது நாட்டு சட்டங்களால் நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் இவர்கள் இதைச் செய்தார்கள் என்று நீதிமன்றங்கள் ஏற்காது. இதுதான் இன்றைய சமூக, வர்க்கச் சூழல். இதற்கான ஆவணங்கள் முழுவதையும் தேடிப்பிடித்து இன்றைய இளைய தலைமுறைக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி ஆவணங்களை “நின்று கெடுத்த நீதி'' என்ற புத்தக வடிவமாக ஆக்கித்தந்துள்ள அருமைத் தோழர்கள் மயிலை பாலு, அலைகள் சிவம் ஆகிய இருவருக்கும் மீண்டும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெண்மணிக் கனல் அணையாமல் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நூல் நிச்சயம் பயன்படும்.

 

இடம்: தாம்பரம்                                                                                                                             தோழமையுடன்

நாள்: 22. 4.09.                                                                                                                                         கோ. வீரய்யன்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு