நினைவு அலைகள் - தன் வரலாறு (பகுதி 1) - பதிப்புரை
தாமரைத்திரு டாக்டர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்கள் கல்வித்துறையில் இளநிலை ஆய்வாளர் தொடங்கி, பொதுகல்வி இயக்குநர் வரையிலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆறு ஆண்டுகள் துணை வேந்தராகப் பணியாற்றியவர் ஆவார்.
அவருடைய நினைவு அலைகள் என்னும் இந்நூலில் தமிழகத்தின் ஒரு நூறு ஆண்டைய கல்வி வரலாறும், சமூக வரலாறும் செறிவாகக் காணப்படுகின்றன.
இளமைக்காலம் முதலே தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட டாக்டர் நெ.து.சு. அவர்கள் இறுதிவரை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்தார் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மிகச்சிறப்பாக நடத்திய போது, நெ.து.சு. அவர்கள் ஈரோட்டுக்குச் சென்று அதில் கலந்து கொண்டார்.
பெரியாரின் கொள்கையை ஏற்றுச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதனால் பல இன்னல்களை அனுபவித்தார் ஆனால் அதை அவர் சுகமாகவே ஏற்றுக் கொண்டார்.
இந்நூல் டாக்டர் நெ.து.சு அவர்களின் தன் வரலாறாக மட்டும் அமையாமல் தமிழக கல்வி வரலாறாக, சமூக வரலாறாக அமைந்துள்ளது.
வரலாற்றுச் செய்திகளை மிக எளிமையாக அதைச் சொல்வதைப் போல் எழுதியுள்ளார்.
இந்நூலை வெளியிடுவதில் தமிழக்குடி அரசுக் பதிப்பகம் பெருமையடைகிறது. மெய்ப்புத் திருத்தம் செய்து உதவிய மா.சா இராமமூர்த்தி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணிணி தட்டச்சு செய்து கொடுத்த சித்ரா அவர்களுக்கும், நல்லமுறையில் அச்சிட்டுகொடுத்த கவிக்குயில் அச்சத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை தமிழ்க்குடி அரசுப்பதிப்பத்திற்காக
24.102010 வாலாசா வல்லவன்