புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp

 

நினைவு அலைகள் மூன்றாம் பகுதிக்கு டாக்டர் நெ.து.சு. அளித்த முன்னுரை

'நினைவு அலைகள்' என் வாழ்க்கை வரலாறு ஆகும். இது மூன்று பகுதிகளாக விரிந்துள்ளது. இவ்வளவு விரிவாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தற்புகழ்ச்சியாக மாறிவிடாதா?

நான் தன் வரலாறு எழுத விரும்பவில்லை. சத்ய கங்கையின் ஆசிரியர், பகீரதன் பல முறை என்னைத் தூண்டி வந்தார். “உங்கள் காலப் பெரியோர்களைப்பற்றி, நேருக்கு நேர் அறிந்தவர்கள் சொல்லாமற் போனால், அது சமுதாயத்திற்கு இழப்பாகும். அந்தக் காலத்துச் சிந்தனையாளர்கள், கிளர்ச்சிக்காரர்கள், சாதனை யாளர்கள் பிற்காலத்தவர்களுக்கு உரமாக அமைவார்கள் எனவே, உங்கள் காலச் சூழல்களையும், சிக்கல்களையும் விளக்கும் வகையில் விரிவாகவே எழுதுங்கள்" என்று அவர் அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த வலையில் வீழ்ந்தேன் நான் எழுதியுள்ளதைத் 'தன் வரலாறு' என்று சொல்வதைவிட நினைவு அலைகளாகக் கருதுவதே பொருத்தமாகத் தோன்றிற்று அம் முயற்சி என்னை உங்கள் முன் நிறுத்துகிறது.

நினைவு அலைகள் எழுபது ஆண்டுகளின் அலைகளைக் காட்ட முயல்கிறது. அக்கால எல்லையில் கண்ட மாற்றங்கள் பற்பல, அவற்றிற்கு வித்தாக அமைந்த உணர்ச்சிகள், எழுச்சிகள் நடவடிக்கைகள் எண்ணற்றன. ஒவ்வொரு நீர்த்துளியிலும் கதிரவனின் ஒளியைக் காணலாம். ஒவ்வொரு மனிதனிலும் சமகாலக் கதிரொளிகளின் வீச்சைக் காணலாம்.

நெ.து.சுந்தரவடிவேலுவாகிய நான், மாந்தர் மாக்கடலில் ஒரு சிறு துளி! வரலாற்றுக் கதிர்கள் என்னைத் தாக்கியுள்ளன. செழுமைப்படுத்தியுள்ளன. பயன்படுத்தியுள்ளன.

திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சிற்றூரில் பிறந்த என்னை முதுகலைப் பட்டதாரியாக்க உதவியவர் பலராவர் பெற்றோரின் தொலை நோக்கில் தொடங்கிய அம் முயற்சிக்கு உதவிய ஆசிரியர்கள் அனைவருமே நல்லவர்கள் எனினும் டாக்டர் கள்ளுக்காரன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்வது நன்றிக்கடன் ஆகும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், கல்விக்கு இடையூறு இன்றி இந்திய விடுதலைக்கும் தமிழின் மேம்பாட்டிற்கும் சாதி சமத்துவத்திற்கும் பாடுபட்ட 'வனமலர்ச் சங்கத்தையும்' அது நடத்திய 'பித்தன்' என்ற திங்கள் இதழையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டாமா? இவற்றைப் பற்றிய தகவல்கள் சில பக்கங்களைப் பிடித்துக் கொண்டன.

காந்தியடிகளின் தலைமையில் பொங்கிய விடுதலை உணர்வு என்னைப் போன்ற பல நூறாயிரம் இளைஞர்களை, நாட்டுப் பற்றாளர்களாக மாற்றியுள்ளது.

பரந்த இந்தியாவின் தென் மேற்குக் கோடியில் வைக்கம் என்ற பேரூரில் நடந்த சமுதாய உரிமைப் போராட்டம், சமத்துவ அலைகளை எழுப்பி வளர்த்தது அவற்றை விரிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளேன். அப்படி விரித்துக் கூறாவிடின் "இயற்கையில், உரிமை வேட்கை சமத்துவ உணர்வு ஆகியவற்றைப் பெற்ற அற்புத மனிதன் நான்" என்ற பொய்த் தோற்றத்திற்கு இடம் கொடுத்துவிடுவேன்.

வேலையில்வாத் திண்டாட்டத்தால் வாடி வதங்கியவன் நான். அந்நிலையை மாற்ற எனக்கு உதவிய திருவாளர்கள் ஏ.கே. தங்கவேவர், திருவொற்றியூர்டி சண்முகம், வெங்கடசாமி நாயுடு, எம். பக்தவத்சலம், சூணாம்பேடு ஜமீன்தார் அருணாசலம் ஆகியோருக்கு என் வரலாற்றில் இடம் உண்டு.

திருவாளர் கள் ரகுபதி, சங்கரலிங்க தாசு போன்றவர்கள் அரசு அலுவலர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். தன்னிடம் ஊழியம் புரிந்தவன் உயர்வதைக் கண்டு அழுக்காறு கொள்ளாத திருவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி அய்யர்; டி. எஸ். கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரின் நிழலில் நான் வளர்ந்தேன். அவர்கள் மனநிலை பிறரையும் ஊக்கப்படுத்துவதாக!

முருகேசன், மேகவர்ணன், லோகநாதன் என்னும் கடைதிலை ஊழியர்கள் முதல், தங்கவேலு, வீராசாமி, இராசகோபால் சண்முகம் போன்ற பணியாளர்கள் பரிவோடும் நேர்மையோடும் பணி புரிந்ததால், நான் என் அலுவலின் பேரில் முழு நாட்டஞ் செலுத்த முடிந்தது.

பொதுக் கல்வி இயக்குநர் பதவியிலிருந்து நான் ஓய்வு பெற்று ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப் போகின்றன இருப்பினும் அன்று என்னுடைய தனி உதவியாளராக இருந்த திரு. ஏ. ராமசாமி இன்றும் அவ்வப்போது வந்து, என்கு உதவி செய்கிறார்! கைம்மாறு பெற மறுக்கிறார் என்னே அவருடைய பற்றும் பாசமும்,

கல்வித் துறையின் முதல் படிக்கட்டாகிய, இளநிலை பள்ளித் துணை ஆய்வாளர் பதவியில் கால் எடுத்து வைத்த நான் இந்தியாவின் மூத்த பல்கலைக் கழகங்கள் மூன்றில் ஒன்றான சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்து, ஆறு ஆண்டுகள் பணி புரியும் பேறு எனக்குக் கிட்டிற்று. அதே பல்கலைக் கழகம் 209.1983 அன்று திருவாளர் கள் ஆர் வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம், எம்.ஜி இராமச்சந்திரன், நோபல் பரிசு பெற்ற என் சந்திர சேகர், எம். ஏ. முத்தைய செட்டியார், ராஜா ராமண்ணா, டாக்டர் தம்பையா, டி.சி. கோத்தாரி, கா. அப்பாத்துரையார், சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முதலிய 10 பெருமக்களுடன் இணைத்து, சிறப்பு டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்திற்று. ஒவ்வோர் நிலையிலும் எனக்குப் பாதுகாவலாக விளங்கி ஊக்கப்படுத்திய பெரியோர்களைக் குறித்து எழுதியுள்ளேன்.

வல்லவர்கள் சிலர், புல்லனைய என்னைப் பயன்படுத்தி முன்னறியாச் சாதனைகளுக்குக் கருவிகளாக இயக்கியுள்ளனர். மூதறிஞர் ராஜாஜி அவர்கள், முதலமைச்சராக இருந்த போது அவரது சீரிய தலைமையின் கீழ், அவருக்கு நிறைவாக நான் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

கல்வி வள்ளல் காமராசர் கல்வி மடை திறக்கவும், எல்லோர்க்கும் கல்வி நீரோடை எட்டவும் செய்வதற்கு எளியேனைப் பயன்படுத்தினார் என்பது வரலாறு பகல் உணவுத் திட்டம் இலவசக் சீருடைக் கொடை பள்ளிச் சீரமைப்பு இயக்கம் ஞானத் தந்தைத் திட்டம், இலவச மேற்பார்வைப் படிப்பு முறை முதலிய மின்னாற்றலைக் கொண்டு சென்ற கம்பியாக நான் இருந்தது என் நற்பேறாகும்.

இந்திய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதற்குப் பாடுபட்டேன். காமராசர் தொடங்கிய இலவசக் கல்வித் திட்டத்தை நிறைவு செய்யும் பணிக்கு முதல்வர் பக்தவத்சலனார் என்னைப் பயன்படுத்தினார்.

எல்லோரும் எழுத்தறிவு பெறும் பெருந் திட்டத்திற்கு ஆய்வுப் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி விளக்குவதற்கு முதலமைச்சர் அண்ணாவுக்குப் பயன்பட்டேன்.

கல்லூரிக் கல்வியை வளர்ப்பதற்கும், அந் நிலைக் கல்வியைச் செழுமைப்படுத்தவும் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டைப் பெருக்கவும் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்னைப் பயன்படுத்தினார்.

முதல்வர் டாக்டர். எம்.ஜி இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப் படங்கள் வாயிலாகவும், பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப் பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார்.

'பெரியார் வரலாறு வண்ணப்படங்கள்' என்ற நாலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன.

பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இரு பகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து, சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.

முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப்பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமாராகிய பண்டித நேரு அவர்கள், தமிழ் நாட்டுக் கல்வி வளர்ச்சியையும் பகல் உணவுத் திட்டத்தையும் பொது மக்களைக் கொண்டே பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கத்தையும் பெரிதும் பாராட்டி வளர்த்து வந்தார். அச் செயல்களை உரிய முறையில் விவரித்துள்ளேன். தொடக்கக் கல்வி பற்றிய யூனெஸ்கோ மாநாடுகள் இரண்டு இவற்றை வரவேற்றுப் பரித்துரைத்தன வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மாநாடுகளைப் பற்றி இந்நூலில் படிக்கலாம்.

பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் கல்வி இணை ஆலோசகனாகப் பணி புரிந்தேன். உழவர் எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடித் திட்டத்தையும் யூனிசெப் அறிவியல் திட்டத்தையும் இறுதி வடிவம் கொடுத்து நடத்த வாய்ப்புக் கிடைத்ததை என் வரலாறு சொல்ல வேண்டாமா?

நான் பங்கு கொண்ட உலகத் தமிழ் மாநாடுகள், பன்னாட்டுக் கல்வி மாநாடுகள் பற்றிய விவரங்கள் ஏராளம்.

'நினைவு அலைகள்” என்னும் என் வரலாறு உண்மையில் தமிழக, இந்தியக் கல்வி வரலாற்றின் கூறுகள் ஆகும். எனக்கு ஒதுக்கியுள்ள இடத்தைப் போல், பன் மடங்கு இடத்தை, பல நிலை நிகழ்ச்சிகளுக்கும் நல்லவர்களுக்கும் கொடுத்துள்ளேன்.

என்னுடைய அரசுஊழியக்காலத்தில் நூற்றுக்கணக்கான பலநிலை அலுவலர்களோடு, உதவியாளர்களோடு, பணியாளர்களோடு நான் வேலை செய்ய நேர்ந்தது.

அவர்கள் எல்லோரும் மொத்தத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று சொல்லாம்.

நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் தங்கள் சாதி, சமய அரசியல் கோட்பாடு வேற்றுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் இயக்கம் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

நிர்வாகிகளையும், பொதுக்களையும் ஊக்குவித்தவர்கள் தமிழ்நாட்டின் இருபால் ஆசிரியர்களே! என் பதவிக் காலத்தில் அவர்கள் தங்கள் நலன்களைப் பற்றி யே சிந்திக்காமல் தங்கள் நலன்களைப் பற்றிச் சிந்திக்கும் பொறுப்பை இயக்குநரிடம் விட்டு பொது நலத்தைப் பற்றியே சிந்தித்துச் செயல் பட்டார்கள். செயற்கரிய செய்து காட்டினார்கள். தன்னம்பிக்கையும் பிறருடைய நம்பிக்கையும் பெற்றவர்களாக விளங்கினார்கள். என்னுடைய வெற்றியின் ஒவ்வொரு அணுவும் அவ்வாசிரியர் களுக்கு உரியதாகும்.

'நினைவு அலைகள்' பத்தாண்டுப் பணி என்னுடைய கால்களில் மிகப் பெரியது. மூன்று பகுதிகளைக் கொண்டது. 2300 பக்கங்களைக் கொண்டது. நினைவு அலைகள் மூன்று பாகங்களுக்கப்பால் பெரியவர்களுக்காக 30 நூல்களுக்கு மேல் 3000 பக்கங்கள் அளவில் எழுதியுள்ளேன். அவை போக 11 சிறுவர்களுக்கான நூல்களை (வள்ளுவன் வரிசை) என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன்.

நினைவு அவைகளை இவ்வளவு விரிவாக எழுதி முடித்ததில் நான் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியதாக மன நிறைவு கொள்கிறேன். என்னுடைய வாழ்நாள் ஊழியத்தின் தொடர்ச்சியாகவே இது அமைந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல் இரண்டு பகுதிகளைச் சுடச்சுட ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் இந்தப் பகுதியையும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று திரும்பிப் பார்க்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை!

பத்தாண்டுகள் மாதம் இருமுறை என்னுடைய நினைவு அலைகள்' தொடர்ந்து தம்முடைய 'கத்ய கங்கை' யில் வெளிவருவதற்கு இடம் கொடுத்த அருமை நண்பர் பகீரதன் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லேன். பகீரதன் உதவவில்லை என்றால், 2300 பக்கங்களில் என் வரலாறு வெளிவர வாய்ப்பு நேர்ந்திருக்காது. அவருக்கு என் நன்றி நிறைந்த வாழ்த்துகள்.

தமிழ் நூல்களை வெளியிட்டு மகிழ்ச்சி கொள்வதில் முன்னணியில் இருப்பவர் எனது அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்களாவார். அவர் என்னுடைய எட்டு நூல்களை ஏற்கெனவே வெளியிட்டு உதவியுள்ளார்.

நினைவு அலைகள் முதல் பகுதியை (894-40=934) பக்கத்தில் டிசம்பர் 1983 லும் இரண்டாம் பகுதியை (494-28-522) பக்கத்தில் ஆகஸ்ட் 1985 லும் வெளியிட்டுள்ளார். இது அவர் எனக்காக வெளியிடும் பதினோராவது நூலாகும். எனக்காக அவர் மொத்தத்தில், 11 நூல்களையும் சேர்த்து, 3500 பக்கங்களுக்கு மேல் அச்சேற்றி வெளியிட்டுள்ளார். 'நினைவு அலைகளை அவர் மிகப்பெரும் பொருளை முதலீடு செய்து துணிச்சலோடு வெளியிட்டமைக்குப் பெரிதும் நன்றியுடையேன்.

'நினைவு அலைகள்' மூன்று பகுதிகளையும் அச்சிட்ட நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு மிக நன்றி உடையேன்.

'நினைவு அலைகள்' மூன்றாம் பகுதியினைத் தொடரி கட்டுரைகளாகச் 'சத்திய கங்கை' எழுதுகையில், சில கட்டுரை களை நான் சொல்லச் சொல்ல எழுதி உதவி புரிந்த கவிஞர் திரு. முருகு சரணன், திரு. கோ. வேதநாயகம் ஆகியோருக்கு நன்றி உடையேன்.

'நினைவு அலைகள்' எல்லாப் பகுதி களையும் தொகுத்து, வகுத்து, பிழை திருத்தி வெளியிட துணை நிற்கும் பேராசிரியர் திரு. தி.வ. மெய்கண்டார் அவர்களுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன்.

நெ.து. சுந்தரவடிவேலு

12.101988

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்: