நெஞ்சுக்கு நீதி பாகம் 4 - முன்னுரை
'நெஞ்சுக்கு நீதி' நான்காவது பாகத்தில் உங்கள் விழி மலர்கள் விரிகின்றன.
முதற்பாகம், நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல் 1969 வரையிலான என் வாழ்க்கை வரலாற்றையும், என் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த இயக்க வரலாற்றையும் மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புகளையும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதாகும்.
1969 முதல் 1976 வரை ஏழாண்டுக் கால வரலாற்றுக் குறிப்புகளையும், என் வாழ்க்கைக் குறிப்புகளையும் தொகுத்தளிப்பது தான் ‘நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம்.
1976க்குப் பிறகு 1991 வரையிலான 15 ஆண்டுக் கால சரித்திர நிகழ்வுகளை நினைவூட்டுவது தான் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகம். மூன்றாம் பாகத்தில் 1988ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் தான் முழுமையாக எழுதப்பட்டுள்ளன.
எனவே இந்த நான்காம் பாகத்தில் 1989 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடந்த முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் முதல் பாகம் 755 பக்கங்கள்; இரண்டாம் பாகம் 586 பக்கங்கள், மூன்றாம் பாகம் 612 பக்கங்கள். நான்காம் பாகம் 633 பக்கங்கள் என மொத்தம் 2586 பக்கங்கள் என அமைந்துள்ளது.
நான்காம் பாகத்தை என் எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைத்திடும் போது உங்களிடம் தந்துள்ளேன். 'நான்காம் பாகம் முற்றும்' என்று எழுதுவதற்கே இயலாமல் இன்னும் பல நிகழ்ச்சிகள் காத்துக் கிடக்கின்றன.
காலம் இடம் தந்தால்; அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விட்டுப் போனவைகளையும் இட்டு நிரப்பி 'ஐந்தாம் பாகம்' தருவதற்கு முயற்சி எடுப்பேன்.
இல்லையேல் என்னைத் தொடர்ந்து தொண்டாற்றுபவர்கள்’. அப்பணி மேற்கொள்வர்.
அன்புள்ள,
மு.கருணாநிதி