Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நெஞ்சுக்கு நீதி பாகம் 5 - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
ஐந்தாம் பாகம்

முன்னுரை

“நெஞ்சுக்கு நீதி" ஐந்தாம் பாகம் இதோ புத்தகமாக வெளிவரவுள்ளது. இதன் நான்காம் பாகத்திற்கு 15-6-2003 அன்று முன்னுரை எழுதினேன். அதற்குப் பிறகு ஒன்பதாண்டு முடிந்து பத்தாம் ஆண்டில் ஐந்தாவது பாகம் தயாராகி உள்ளது.

உலகத்தில் எத்தனையோ பேர் தங்களுடைய சுயசரிதையை நூலாக எழுதியிருக்கிறார்கள். நான்காம் பாகம் வரை மொத்தம், 2,586 பக்கங்கள் - ஐந்தாம் பாகம் மட்டும் மொத்தம் 1030 பக்கங்கள். 1996ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலான என்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றையும் இந்த ஐந்தாம் பாகத்தில் தொகுத்திருக்கிறேன். 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலம், கழகம் ஆட்சிக் கட்டிலிலே இருந்த காலம் என்பதால் நிகழ்ச்சிகள் அதிகமாகி விட்டன. ஐந்தாம் பாகம் நூலாக தயாரான நிலையிலேயே ஆறாவது பாகத்தினை இரண்டு மாதங்களாக எழுதத் தொடங்கி விட்டேன்.

நான்காம் பாகத்திற்கான முன்னுரையை எழுதும் போது "காலம் இடம் தந்தால்; அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விட்டுப் போனவைகளையும் இணைத்து “ஐந்தாம் பாகம்' தருவதற்கு முயற்சி எடுப்பேன்" என்று சொல்லியிருந்தேன்.

காலமும் இடம் தந்து, அதை வாய்ப்பாக ஆக்கிக் கொண்டு ஐந்தாம் பாகத்தையும் முடித்து, ஆறாவது பாகத்தையும் தொடங்கி விட்டேன். ஐந்தாம் பாகம் நூலாக வெளி வருகிறது. ஐந்து பாகங்கள் வரை மொத்தம் 3,616 பக்கங்கள் எழுதியுள்ளேன். இத்தனை பக்கங்களை எழுதியிருக்கிறோமா என்று பார்க்கும் போது எனக்கே மலைப்பாக உள்ளது.

என் வாழ்க்கைச் சரித்திரத்தில் இதுவரை ஆறு பாகங்களை எழுதியுள்ள நான் 12 முறை சட்டப் பேரவைத் தேர்தலிலே நின்று அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு முறை மேலவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அங்கேயும் பணியாற்றியிருக்கிறேன். சற்று விவரமாக அதுபற்றி எழுத வேண்டுமேயானால், முதன் முதலில் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நின்று 1962வரை குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன். 1962ஆம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஐந்தாண்டு காலம் 1967 வரை பணியாற்றியிருக்கிறேன். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியிலே நின்று, வெற்றி பெற்ற போது, 1969ஆம் ஆண்டு வரை பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையிலே பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணி புரிந்தேன். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1971ஆம் ஆண்டு வரை கழக உறுப்பினர்களின் கட்டளையை ஏற்று முதல் முறையாக முதலமைச்சராகப் பணியாற்றினேன். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1976ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பணியாற்றினேன். 1976ஆம் ஆண்டு கழக ஆட்சிக் கலைக்கப் பட்டு ஓராண்டு காலம் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அண்ணாநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று 1983ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினேன்.

1983ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேராசிரியரோடு இணைந்து சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். 1984ஆம் ஆண்டு மேலவை உறுப்பினராகி, அங்கே எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினேன். நான் மேலவை உறுப்பினரான காரணத்தி னாலேயே 1986இல் மேலவையே கலைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியிலே போட்டியிட்டு, வென்று, மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றேன். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் துறைமுகம் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்றேன் என்ற போதிலும், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியிலே போட்டியிட்டு, வெற்றி பெற்று நான்காவது முறையாக முதலமைச்சரானேன். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியிலே போட்டியிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்தேன். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற போது ஐந்தாம் முறையாக முதலமைச்சராக 2011ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். 2011இல் நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியிலே நின்று வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக் கிறேன். இரண்டாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக அண்ணாவின் அமைச்சரவையில் பணியாற்றியிருக்கிறேன். 24ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருக்கிறேன். 1957ஆம் ஆண்டு பேரவையிலே நுழைந்த நாள் முதல் 55 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற பணிகளை ஆற்றியிருக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் 100வது ஆண்டுத் தொடக்க விழாவினை நடத்தி முடித்திருக்கிறோம். அந்த நூறாண்டு வரலாற்றில் 90 ஆண்டுகளைக் கழித்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால் நானும், பேராசிரியரும் அதிலே இடம் பெற்றிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் 1949இல் பிறந்தது. அதற்கு வயது 63 ஆகிறது. அண்ணா அவர்கள் மறைந்த 1969ஆம் ஆண்டிலிருந்து 43 ஆண்டுகளாக இந்த இயக்கத்தின் தலைவனாக இருக்கும் அரும்பெரும் பேற்றினையும் பெற்றிருக்கிறேன். இயற்கை அளித்த இந்தக் காலத்தில் நான் ஆற்றிய பணிகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு தான் இந்த “நெஞ்சுக்கு நீதி" மீண்டும் கூறுகிறேன், இது என்னுடைய வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; நமது கழகத்தின், தமிழகத்தின் வரலாற்றையும் இணைத்தே எழுதியுள்ளேன். எனக்குப் பிறகும், ஏன் இப்போதும் கூட, இளைஞர் சமுதாயத்திற்கு இந்தத் தொடர் நிச்சயம் பயன்படும் என்பதால் அவர்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், வரலாற்று ஆய்வாளர் களுக்கும், என் உயிரனைய கழக உடன்பிறப்புக்களுக்கும், இந்த ஐந்தாம் பாகத்தை நூலாக வெளியிடும் திருமகள் நிலையத்தாருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அன்புள்ள

(மு.கருணாநிதி) 

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு