நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்
தோழர் மானமிகு மஞ்சை வசந்தன் அவர்கள் 'நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலைப் படித்தேன். சுவைத்தேன்.
நாத்திகன் - புரட்சியாளர் - இளைஞர்களின் எடுத்துக்காட்டான எழுச்சி நாயகன் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தோழர் பகத்சிங் வழ்க்கை வரலாறு பற்றி, சாதனைகள் - தாக்கங்கள் பற்றி பல நூல்கள் இதற்கு முன் வெளிவந்துள்ளன என்றாலும், இவரது இந்நூல் ஒரு தனித்த தன்மையான நவில்தொறும் நூல்நயம் கூறும் ஓர் அரிய நூலாகும்.
இளைஞன் பகத்சிங்கை எது புரட்சியாளனாக ஆக்கியது? ஏன் நாத்திகன் ஆனான்?
அத்தகைய நாத்திக உணர்வு அவருக்குள் எப்படிப்பட்ட தன்னல மறுப்பை உருவாக்கி, உண்மையான ஒப்புயர்வற்ற புது உலகத்தைப் படைக்க ஏங்கிய புரட்சியாளராக உயர்த்திற்று?
இதுகுறித்த பல்வேறு கருத்தியல் நிகழ்வுகளையெல்லாம் தொகுத்து, உண்மைக் கருத்தோவியத்தினை எழுதி, நம்மைச் சிந்திக்க வைக்கிறார் ஏற்றமிகு நூலாசிரியர் தோழர் மஞ்சை வசந்தன் அவர்கள்.
'நாத்திகப் புரட்சியாளரான பகத் சிங் ஒரு பயங்கரவாதி அல்ல' என்பதை அவரது கருத்துக்களைக் கொண்டே உறுதிசெய்து, வாசகர்களுக்கும் புரிய வைக்கிறார்.
தனது லட்சியம் - இலக்கு எது என்பதில் தெளிவாக இருந்த பகத் சிங், வேறு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களை சாவு உலகத்தில் தள்ளும் இன்றைய கொடுமையான மனிதகுல் விரோதிகள்போல் அல்லாது, மனிதத்தை நேசித்ததால், மரணத்தை யாசித்த மாவீரன் அவர்!
இவருடன் ஒப்பிட வரலாற்றில் இதற்கு முன், கொண்ட கொள்கைக்காக மரணத்தை - விஷக் கோப்பையினை முத்தமிட்ட கிரேக்க அறிஞர் சாக்கரடீசைத்தான் கூற முடியும்
தனது கொள்கை லட்சியம் - இலக்கு நிறைவேற, தான் கொடுக்கும் விலை தனது உயிர் என்பதில் எவ்வளவு தெளிவான உறுதியுடன், துளிகூடக் கலங்காது மாவீரனாக மரண மேடையில் நின்றுள்ளார்!
தந்தை பெரியார்தம் 'குடிஅரசு' தலையங்கம் - இந்தியாவிலேயே அக்காலத்தில் பகத்சிங்கிற்காக எழுதப்பட்ட சிறந்த ஆய்வுரை. லட்சிய வீரர்களுக்குரிய இலக்கனம் தந்தை பெரியார்தம் துணிவு, தெளிவு, புரட்சியுள்ளம் - இவற்றைப் படம் பிடித்துக் காட்டுவது, இன்றுள்ள பகத்சிங் பாராட்டுரையாளர்கள் பலரும் அறியாத ஆவணம் ஆகும்!
அதையே நூலின் திறவுகோலாக ஆக்கியிருக்கும் ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்.
'காதலா? கடமையா?' 'கொள்கையா? குடும்பமா?' என்பதற் கெல்லாம் பகத்சிங் வாழ்க்கை பாடங்களாகப் பளிச்சிடுகின்றது!
''நாங்கள் எதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றால், நாங்கள் உங்கள் அரசுக்கு எதிராய்ப் போர் தொடுத்துள்ளோம். உங்கள் தீர்ப்பிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது. எனவே, எங்களைப் போர்க் கைதிகளை நடத்துவது போலவே நடத்த வேண்டும். அதாவது போர்க் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் போது, சுட்டுக் கொல்வதுபோல் எங்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
'உயிர் வெல்லமல்ல; உரிமைக்குக் கொடுக்கும் உயர்ந்த விலைபொருள்' என்றல்லவா துணிந்தனர்.
மார்க்ஸ் பற்றியும், எத்தனை தெளிவுடன் அவரது கருத்தியலை அணுகியுள்ளார் பகத்சிங் என்பதை நூலாசிரியர் அருமையாகப் படம் பிடித்துள்ளார்!
நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், குழந்தைகளாக தவழ்ந்த காலகட்டத்தில், தந்தை பெரியார் - "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற தலைப்பில் (பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் 1934இல் சிறு வெளியீட்டினை தோழர் ப.ஜீவானந்தம் மூலம் 'தமிழாக்கி' வெளியிட்டு, அதற்குரிய தடை வழக்குகளைச் சந்தித்த வரலாறு என்ன சாதாரண வரலாறா? அடக்குமுறைக்கும் ஆளான வரலாறு அக்காலத்தில் நினைக்கக் கூடியதா?
'பெரியார் ஒரு தொலைநோக்காளர்' என்பதும் இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
'இலட்சியத்திற்காக தங்களை அழித்துக்கொள்ளும் புரட்சியாளர்கள் எவரும் வரலாற்றில் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்பட்டே வீரிய விளைச்சலாக வெளிவருகின்றனர் என்பதுதானே காலங்காலமாக உள்ள வரலாற்றின் நிகழ்வுகள்.
இளைஞர்களே, இந்நூலைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்! அறிவுப் புரட்சி, ஆயுதப் புரட்சியைவிட ஆழமானது! முதலில் தேவையானது என்று முடிவுக்கு வந்து செயலாற்றுங்கள்!
நூலாசிரியருக்கு நம் பாராட்டுக்கள்! படித்துப் பயன் பெறுக!
- கி.வீரமணி
தொடர்புடைய மற்ற பதிவுகள்: