மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ் மூலதனம் - பதிப்புரை
மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ் மூலதனம் - பதிப்புரை
தலைப்பு |
மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் |
---|---|
எழுத்தாளர் | பில் கஸ்பர்|சி.ஆரோக்கியசாமி|டேவிட் ஸ்மித்|க.சுப்ரமணியன்|பரிதி|ச.பிரபுதமிழன் |
பதிப்பாளர் |
விடியல் |
பக்கங்கள் | 1 + 2 + 3 = 980 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.600/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/marxsiyam-indrum-endrum-3-books.html
கார்ல் மார்க்ஸ் மூலதனம் - பதிப்புரை
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் - மானுடம் போற்றும் அறிவியலாளர்களின் பெயர்ப்பட்டியலில் மறைக்கப்பட்டுவிட்ட பெயர்கள். ஆனாலும் சமூகத்தின் இயங்குதலை இயற்கையின் வினையாற்றுதலுடன் பொருத்தி, இயற்கையான சமூக அறிவியலை நமக்கு விளக்கிய மாமேதைகள்.
'கம்யூனிசம்', 'மார்க்சியம்', 'சோசலிசம்' என்று அழைக்கப்படும் கருத்தியல்கள் பெரும்பான்மை மக்களின் சிந்தனையை எவ்வகையிலும் சென்றடையாவண்ணம் ஆளும் வகுப்பினரால் இன்றளவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுவே மூலதனம்'. (முதல், முதலம், மூல முதல் போன்ற பொருத்த பாட்டு சொற்களில் வழங்கப்படும் 'மூலதனம்' சிந்தனையைத் தூண்டுவது)
பிற உயிரினங்கள் போலல்லாது மனிதன் தனது உணவுத் தேடலில் தொடங்கி, உயிர் பிழைப்பது வரை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணித்த வரலாறு இயற்கை அறிவியலாகப் பாடத் திட்டங்களில் உலகெங்கும் இருக்கிறது. பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் இதன் தொடச்சி விடுபட்டு, சட்டென்று நின்று விடுகிறது. அதற்குப் பிறகான அந்த வரலாற்றுத் தொடர்ச்சியைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலக மக்கள் அனைவருக்கும் உள்ள ஒரே வாய்ப்பு மார்க்சியத்தைப் படிப்பது மட்டுமே. அதைக் கற்கும் போதுதான் மேற்சொன்ன வரலாறு 'சட்டென்று ' நின்றுபோனதற்கும், மறைக்கப்பட்டதற்குமான காரணங்கள் தெளிவாகும்.
பல மொழிகளில் பல பதிப்புகளைக் கண்ட உலகப் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று 'மூலதனம்'. தமிழில் தோழர் தியாகுவின் பொறுப்பான உழைப்பாலும் (NCBH), தோழர் ஜமதக்னி அவர்களின் சீரிய முயற்சியாலும் (முனைவர் நாகநாதன்) மூலதனம் முழுமையாக முன்பே வெளிவந்துள்ளது. தமிழில் மார்க்சியத்தை அறிமுகம் செய்வதில் தொடங்கி இன்றையப் பொருத்தப்பாடுகள் வரை படிப்பதற்கு ஏரளமான நூல்கள் வெளிவருகின்றன.
மூலதனத்தைப் படித்து புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. இதைக் கருத்தில் கொண்டே டேவிட்ஸ்மித் எழுதிய, விளக்கப்படங்களுடன் கூடிய இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலில் படங்களுடன் (பில் ஈவன்ஸ்), மூலதனத்தின் பிழிவை உயிர்ப்புடன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாகத் தருகிறார் டேவிட்ஸ்மித். மூலதனத்தின் இன்றைய பொருத்தப்பாட்டை விளக்கி கூடுதலாக ஒரு இணைப்பையும் தந்திருக்கிறார்.
உலகை இயக்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளான' மூலதனத்தைப் பற்றிய தொடக்கநிலைப் புரிதலுக்கு 18 தலைப்புகளின் வழியாக நம்மை கொண்டு செல்வதில் டேவிட் ஸ்மித் வெற்றி பெறுகிறார். மேலும் விரிவாக மார்க்சின் மூலதனத்தைப் படிப்பதற்கு தூண்டும் நூல் இது. தமிழ் வாசகர்கள் இதற்கு மேல், தோழர்கள் தியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் மொழியாக்க நூல்களுக்குச் செல்லவேண்டும்.
மூலதனத்தைப் பற்றிய மார்க்சின் புரிதல்களும், விளக்கங்களும் அனைத்து வகுப்பினரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். பண்டங்களின் சந்தைமதிப்பில் அடங்கியுள்ளது வெறும் உழைப்பு மட்டுமே அல்ல என்றாகி விடும்போது, பரிமாற்றம் மூலம் வரும் பணம் ஒரு பக்கம் திரண்டு, உழைப்பை, உருவாக்குபவனிடமிருந்து அந்நியமாக்குகிறது. இதற்கு அடிப்படையாக இருக்கும் உபரி மதிப்பைப் பற்றியே மார்க்ஸ் கண்டுரைத்தார். மார்க்சும் எங்கெல்சும் படைத்த கம்யூனிசம் முதலாளிகளுக்கு "பேயாக'' தோற்றமளிப்பதற்கு காரணம், பண்டத்தின் மதிப்பு மற்றும் உபரி மதிப்பு பற்றிய அவர்களது கோட்பாடுகள்தான். இக்கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்டு உழைப்பாளியும் பாட்டாளியும் என்ன செய்யலாம் என்பது எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மற்றவர்கள் (?) (அப்படி ஒரு வகுப்பு உண்மையில் தற்காலிகமானது மற்றும் பொய்த் தோற்றம், மாயத் தோற்றம் போன்றது) எதற்கு மூலதனம் படிக்க வேண்டும்.
பண்டங்களின் மதிப்பு, நிலையான மூலதனம், மாறும் மூலதனம், நிதி மூலதனம் மற்றும் இலாபவிகிதம் போன்று பல கூறுகளைப் பற்றிய மார்க்சின் கூற்றுகள் உழைப்பாளிகளுக்கு மட்டுமே தேவையானவை என கட்டமைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி வகுப்பு சுரண்டப்படுவது மூலதனத்திரட்டலின் அடிப்படையாக இருப்பது போலவே தற்காலிகமாக இச்சுரண்டல் அமைப்பில் உழைப்பாலும் வாய்ப்புகளாலும் வளம் சேர்த்துக்கொண்டுள்ள நடுத்தர வகுப்பினர் (சேவைத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை போன்றவற்றின் மூளை உழைப்பாளிகள் மற்றும் சிறு குறு நடுத்தர மூலதனமுடைய முதலாளிகள், வணிகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மதிப்பூட்டும் கூலிப்பணியாற்றும் முதலாளிகள் போன்றோர்) மூலதனத்தின் இலாப வெறியால் நடைபெறும் பொருளாதார வீழ்ச்சிகளாலும் மூலதன முதலாளிகளின் அடிமை அரசுகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலும் தங்களது பாதுகாப்பான வாழ்க்கையை, 'மதிப்புகளை' இழந்து துயரநிலைக்குத் தள்ளப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் எனும் வடிவில் நிலையான மூலதனம் அதிகரித்து இலாபவிகிதத்தைக் குறைப்பதையும், நிலையான மூலதனம் பெரிய அளவில் செய்யப்படாத துறைகள் (தகவல் தொழில் நுட்பம், வங்கிகள், நிதி முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதையும் மார்க்ஸ் மட்டுமே விளங்க வைக்கிறார்.
இலாப விகிதத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி மூலதனம் காலந்தோறும் எடுத்து வந்துள்ள அவதாரங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைத் தரவில்லை. அவற்றில் ஒவ்வொரு நிலையிலும் தோல்வி கண்ட முதலாளியம், இறுதியாக நிதி மூலதனத்திலும் ஊகவணிகத்திலும் சரணடைந்துள்ளது. அதன் வாழ்நாளும் முதலாளியம் எதிர்பார்ப்பது போல் தொடர வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் முட்டுச் சந்தில் சிக்கிய பொழுதெல்லாம் தொழில் நுட்ப ரீதியாக, மிகை உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் (Lean Manu facturing, ERP), அதி உயர் தொழில்நுட்பமுடைய இயந்திரங்களின் மூலம் மனிதரில்லா உற்பத்தி போன்ற முறைகளையும் கையாண்டு தற்காலிகமாக மீண்ட முதலாளியம் இறுதியாகச் சந்திக்கப் போவது நிதிமூலதன, ஊகவணிக நெருக்கடிகளையே.
காட்டாக இன்றைய காலகட்டத்தில் சொத்து வடிவங்களாக எளிய மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தங்கம், நிலம், வீடு, பணம் போன்றவற்றின் கடந்த 30-40 ஆண்டுகால வளர்ச்சியை (?) ஒப்பிட்டு பார்க்கும் போது மார்க்ஸ்' மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது தெரியவரும். எந்த ஒரு பண்டமும், பணவகையில் மதிக்கப்படும் போது, அம்மதிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்று தெரியாமல் தான் சந்தையில் வாங்கப்படுகிறது. மேலே கூறிய நான்கு பொருட்களில் நிலத்தின் மதிப்பு மட்டுமே பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் அதனுள் அடங்கிய உழைப்போ, வேறு எதுவுமோ இல்லை. ஊதிப் பெருக்கப்பட்டுள்ள சந்தையின் தேவையை மட்டுமே கொண்டுள்ளது. இது போன்ற தேவைகள் நிலைத்த தன்மையுடையன அல்ல. அரூபமாக இவற்றுள் முதலாளிய சமூக அமைப்பில் சேர்ந்துவிடும் கூறுகளே நாம் கொடுக்கும் விலை என்பதும், நமது சொத்தின் மதிப்பு என்பதும் ஆகும்.
நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் இயற்கை அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, மார்க்சின் சமூக, அறிவியல், பொருளியல் கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிமுகம் நமது வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்றும். வாழ்க்கையின் கேள்விகளைப் புரியவைப்பதில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் விற்பன்னர்களாக, மாமேதைகளாக உள்ளனர்.
மதிப்புக்கோட்பாடு பற்றிய புரிதலை எளிமைப்படுத்த வேண்டி மார்த்தா ஆர்னேக்கர் எழுதிய முதலாளியத்தில் உபரி மதிப்பின் கோட்பாடு' (தமிழில் மு. வசந்தகுமார், நிழல்வண்ணன் விடியல் 2017) என்னும் சிறு கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளோம்.
நூலின் மொழிபெயர்ப்பை இயல்பானதாக அமைத்துக் கொடுத்த ச. பிரபு தமிழன், சி.ஆரோக்கியசாமி ஆகியோருக்கு எமது நன்றி.
மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த உதவிய விக்னேஷ், இ.சி. ராமச்சந்திரன், இலக்கியா மற்றும் நூலை அழகுற வடிவமைத்துக் கொடுத்த மதிராஜ் ஆகியோருக்கும் எமது நன்றி.
மக்கள் பதிப்பாக இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் விடியலின் நெஞ்சார்ந்த நன்றி.