மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பதிப்புரை
மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பதிப்புரை
தலைப்பு |
மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் |
---|---|
எழுத்தாளர் | பில் கஸ்பர்|சி.ஆரோக்கியசாமி|டேவிட் ஸ்மித்|க.சுப்ரமணியன்|பரிதி|ச.பிரபுதமிழன் |
பதிப்பாளர் |
விடியல் |
பக்கங்கள் | 1 + 2 + 3 = 980 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.600/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/marxsiyam-indrum-endrum-3-books.html
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பதிப்புரை
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் - காலந்தோறும் மனிதர்கள் நன்றியுடன் நினைவு கூரவும், மனவலிமை பெறவும் பயன்படும் பெயர்கள். கம்யூனிசம் என்பதைப் "பேயாகப்" பார்த்து முதலாளிகளும் ஆளும் வகுப்பும் 170 ஆண்டுகளுக்கு முன் நடுங்கினர் என கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளது. உண்மையில் இன்றளவும் கம்யூனிசத்தைப் 'பேயாகவே" பார்க்கிறது ஆளும் வகுப்பு.
இருவரும் எதனால் ஆளும் வகுப்பிற்குப் "பேயாக'' மாறிப்போனார்கள் என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் பேசு பொருள். 170 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களது அறிவுணர்ச்சி மூலம் உருவாகி, எதிர் வரும் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டிய அறிக்கையை, உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு விளக்கவுரைகளுடன், அச்சிட்டுப் பரப்பிக் கொண்டாடுகின்றனர்.
தமிழில் சோவியத் வெளியீடாக, சில பத்து பைசாக்களுக்கு விற்கப்பட்ட ரா.கிருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பு பெரும்பாலானவர்களைச் சென்றடைந்துள்ளது. தோழர். எஸ். வி. இராஜதுரையின் விளக்கக் குறிப்புகளுடன் (முகம், NCBH) வெளிவந்த அறிக்கையும் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார், தோழர்கள் இஸ்மத் பாஷா, பார்த்தசாரதி, தேவபேரின்பன், கி. இலக்குவன் போன்றோரின் முயற்சிகளும் இங்கு நினைவுகூரத்தக்கது. அவர்களது வேட்கையின் தொடர்ச்சியே இந்த வெளியீடு.
அறிக்கையின் உள்ளடக்கம் தாண்டி, அதன் இன்றைய பொருத்தப்பாடு குறித்த, அதாவது அறிக்கையில் இருக்கும் கருத்துகள் செயல் வடிவில் நம் கண்முன் உள்ளதைப் பற்றிய புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கு தரவேண்டியதன் முயற்சியே இந்த மொழியாக்கம். வழக்கம் போல் உள்ள மொழிபெயர்ப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, சொல்லுக்குச் சொல் விளக்கம் என்ற முறையைத் தவிர்த்து, சொற்களுக்குப் பொருள் தரவேண்டி சிறு/குறு வாக்கியங்களைப் பயன்படுத்துவது என்னும் முறையும், வாக்கியத்தின் கருத்தை உள்ளடக்கிய, இயைந்த சில வாக்கியங்களை அமைத்து அதன் பொருளை விளக்கும் முறையும் இந்த மொழியாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எதற்காக இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதற்கான விளக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிக்கையின் பொருத்தப்பாடு பற்றிப் பேசுபவர்கள் பாட்டாளி, மூளை உழைப்பாளி என அனைத்து மட்டங்களிலும் உருவாக வேண்டும். அதுவே செயலாற்ற வேண்டிய சமூகத்திற்கான தொடக்கநிலைப் பாடம். தன்னளவில் கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடிய சொற்களும், வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இம்முறை, மார்க்சியத்தை கொண்டு சேர்க்கப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
மானிட சமூகத்தில், நிலவிய சமூக அமைப்புகள் மற்றும் இனி எதிர் வரும் சமூகம் எனக் காட்சிகளாக மனதில் விரியும்படியாக, மாமேதைகள் இருவரும் அறிக்கையைச் செதுக்கியுள்ளனர். அதற்கான ஆற்றலை அவர்கள் பெற்றுக்கொண்ட சமூக, அரசியல், வரலாற்றுப் பின்புலங்கள் நமது தொடர் ஆய்வுக்கு உரியவை. இந்நூல் ஆசிரியரான பில் கஸ்பரின் நோக்கமும் அதுவே. கம்யூனிஸ்ட் அறிக்கையுடன் விளக்கங்களையும், பிறகட்டுரைகளையும் தொகுத்துத் தந்துள்ள அவரது முறை இந்நூலின் தனிச் சிறப்பை உணர்த்துகிறது. மார்க்ஸ் எங்கெல்ஸ்-மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை பில் கஸ்பர் வடிவமைத்துள்ளார்.
அறிக்கையின் உள்ளடக்கத்தில், மூலதனம் அதன் வளர்ச்சிப் போக்கில் அடையும் பல்வேறு நிலைகளைப் பற்றியும், அதன் அடிப்படையில் மாறும் சமூகத்தைப் பற்றியும் விளக்குவதன் மூலம் கம்யூனிஸ்ட் அறிக்கை, உலகப் பொதுமறையாகிவிட்டது எனக் கூறலாம். குறிப்பாக 1990 கள் முதல், உலகம் தழுவிய மூலதனப் பாய்ச்சலை, உலகமயமாக்கல் எனும் நிகழ்வை, அதை ஒட்டி நமது சமூகத்தில் நடந்த மாற்றங்களை, வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்திற்கு வாக்கியம் தொடர்புபடுத்தி படிக்கும் போதுதான் அதன் முழு வீச்சும் நமக்குப் பிடிபடும்.
உயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாட்டையும், அதன் பிறகு தொழிலாளி வகுப்பு தன் 'மதிப்பை' எவ்வாறு பறிகொடுக்கும் என்பதையும் திரைப்படம் போலக் காட்சிப் படுத்துகிறார்கள் மார்க்சும் எங்கெல்சும். தொடர்ந்து விரிவடைந்து செல்லும் மூலதனத்தின் எல்லைகளைக் குறிபார்த்துச் சொல்லும் அறிக்கை அத்துடன் நில்லாது, மாற்றங்களை எதிர்கொள்ளும் சமூகத்தில் ஒவ்வொரு வகுப்பினரது நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகளைத் தெளிவாக விரித்துரை செய்கிறது. வரலாற்றுக் கடமையாக பாட்டாளிகளின் முன்னுள்ள எதிர்காலப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் கூறுகிறது.
கடந்த கால வரலாற்றில் சமூக சமத்துவம் தொடர்பான, முன்னோடிகளாக இருந்த போக்குகளை ஆய்வு செய்து, மதிப்பீடுகளையும், எச்சரிக்கைகளையும் தருவதன் மூலம், கம்யூனிச சமூகம் படைக்கப்படும் பொழுது தேவைப்படும் முன்நிபந்தனைகள் மற்றும், முன்தயாரிப்புகளை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் முன்னறிவிப்புகளாகத் தந்துள்ளனர்.
தங்களது அறிக்கையின் விளைவுகளைத் தங்கள் காலத்திலேயே கண்டு, உறுதி கொண்ட அவர்கள் மேலும் பல பத்தாண்டுகள் அக்கருத்தியலில் ஊன்றி நின்று பல்வேறு படைப்புகளின் மூலம் கம்யூனிசத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.
உலக அளவில் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிய தரவுகளை உள்ளடக்கிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அறிக்கையும், மூலதனம் நூலுமே அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ள நூல்களாக இன்றும் இருக்கின்றன.
மனித சமூகக் கட்டமைப்பைப் பற்றி இயற்கையிலிருந்து பெறப்பட்ட அறிவிலிருந்தும், சமூக அமைப்பை இயக்கும் ஆற்றல்களைப் பற்றிய கள ஆய்வுகளிலிருந்தும், வரலாற்று நிலைகளில் காணப்பட்டத் தரவுகளின் அடிப்படையிலும் இருவராலும் எழுதப்பட்டதே கம்யூனிஸ்ட் அறிக்கை. மனித குலத்தின் மீதான பேரன்பும், கண்முன் எழுந்த கடமையும், இறுதிவரை தொடர்ந்த உழைப்பும் நிரம்பியுள்ள அவர்களது எழுத்துகள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாத தனித்தன்மையைக் கொண்டுள்ளன.
கம்யூனிஸ்ட் அறிக்கை, சமூக வளர்ச்சி நிலைகளின் பிறப்பு, நடப்பு, முடிவு என அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காகவும், மூலதனம் அதன் நுட்பமான அறிவுச்செறிவிற்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இன்றைய காலகட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் படித்துச் செயலாற்றிட வேண்டியே விடியலின் இந்த வெளியீடு.
கடைநிலை உழைப்பாளியும் கம்யூனிஸ்ட் அறிக்கையை கற்றுத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக மொழியாக்கத்தில் கடும் உழைப்பைச் செலுத்திய கே. சுப்பிரமணியன் அவர்களுக்கு விடியலின் நன்றி.
மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த உதவி நல்கிய தோழர்கள் சி. ஆரோக்கியசாமி, இ.சி.ராமச்சந்திரன் ஆகியோருக்கும் எமது நன்றி.
மக்கள் பதிப்பாக இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் விடியலின் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: