மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் - யார் இந்த ஸ்டீவன்?
மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் - யார் இந்த ஸ்டீவன்?
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/mannulagaiyum-vinnulagaiyum-vendra-stephen-hawking.html
யார் இந்த ஸ்டீவன்?
சுந்தர ராமசாமி, 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலில் எழுதியிருப்பார். ஸ்டீவனுக்கும் அது பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, மருத்துவர்கள் அவரது ஆயுளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டு கெடுவை மேலும் 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தவர் ஸ்டீவன் ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளைதான் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி. அங்கிருந்துதான் தொடங்குகிறது இந்தப் பிரபஞ்சத்தை அளக்க முயன்ற அறிவியல் மேதையின் பயணம்.
ஸ்டீவன் ஹாக்கிங் தனது 76வயதில் மார்ச் 14 அன்று காலமானார். 1942, ஜனவரி 8ம் தேதி பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் தனது பிறந்தநாளைப் பற்றிக் கூறும்போது மாபெரும் விஞ்ஞானி கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்துப் பிறந்தேன் என்பார். கலீலியோ நினைவுநாளில் பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் மற்றுமொரு மாபெரும் அறிவியலாளர் ஐன்ஸ்டைன் பிறந்து சரியாக 139 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் இறந்தது அறி வியலைப் பொறுத்தவரை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அந்தத் தற்செயலிலும் ஒரு தொடர்பு இருக்கிறது. மூன்று பேருமே அவரவர் காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி இருந்த புரிதலைப் பல மடங்கு அதிகரித்தவர்கள்; சரியாகச் சொல்வதென்றால் அதுவரை பிரபஞ்சத்தைப் பற்றி மனித குலம் நம்பியதைப் புரட்டிப்போட்டவர்கள்.
ஸ்டீவன் ஹாக்கிங் நமக்கு ஏன் முக்கியமானவர் ? அவருடைய கண்டுபிடிப்பால் நம் அன்றாட வாழ்க்கையில் ஏதும் பயனடைந்திருக்கிறோமா? ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகளின், அதாவது கண்டறிதல்களின் நடைமுறைப்பயன் நம்மை நேரடியாக வந்தடைய சில பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், நடைமுறைப்பயன்களைக் கடந்தும் ஹாக்கிங்கின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டு. அதுதான் கற்பனைத்திறன் ! ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற வாக்கியம் ஒன்று: ''அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். ஏனெனில், அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத்திறனோ இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அளாவுவது; இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமல்ல, இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது. இதற்கு நேரடி உதாரணமாக ஐன்ஸ்டைனின் வாழ்க்கையும் இருந்தது. வெறும் பென்சில், காகிதம்!
அறிவியலையும் இந்த உலகத்தையும் புரட்டிப்போட்ட ஐன்ஸ்டைனின் முக்கியமான மூன்று கோட்பாடுகள் 1905ல் வெளியாகின. 'ஒளிமின் விளைவு', 'பிரெளனியன் இயக்கம்', 'சிறப்பு சார்பியல் கோட்பாடு'. காலமும் இடமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை, ஒளியின் வேகத்தைத் தாண்ட முடியாது, ஒளியின் வேகத்தை நெருங்கினால் ஒரு பொருள் அளவில் மிக மிகச் சுருங்குவதுடன் அதன் நிறையானது நம்பவே முடியாத அளவில் அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளை அவர் உருவாக்கியது சுவிட்சர்லாந்தின் காப்புரிமை நிறுவனம் ஒன்றில் கிளர்க்காகப் பணியாற்றியபோது!
பெரிய தொலைநோக்கிகள், நுட்பமான கருவிகளைக் கொண்ட ஆய்வகம் போன்றவற்றைக் கொண்டு வேலை நேரத்துக்கு இடையே வெறும் பென்சிலையும் காகிதத்தையும் தன் கற்பனையையும் கொண்டே தன் ஆரம்ப காலக் கண்டுபிடிப்புகளை ஐன்ஸ்டைன் நிகழ்த்தினார். ஒரு பென்சில், காகிதம், ஒரு கற்பனை... இந்த உலகம் அதற்குப் பின் முற்றிலுமாக மாறியது.
ஐன்ஸ்டைனின் மேதைமை புரிந்துகொள்ளப்படாமல் காப்புரிமை அலுவலத்தில் அவர் முடக்கப்பட்டார் என்றால், ஹாக்கிங்கின் நிலை இன்னும் மோசம். சக்கர நாற்காலியில் முடங்கி, கண்களையும் ஓரிரு விரல்களையும் தவிர எதையும் அசைக்க முடியாத நிலை. 'ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்' என்ற நோயின் காரணமாக, தசை நரம்புகளின் கட்டுப்பாட்டை இழந்து குறுகிய காலத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவம் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தபோது ஸ்டீவனுக்கு வயது 21.
இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்தையும் விளக்கக்கூடிய 'மாபெரும் விதியைக் கண்டுபிடிக்க முயன்ற அந்த இளைஞனிடம் இன்னும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்தான் நீ உயிரோடு இருப்பாய்' என்று மருத்துவர் கூறிய போது ஹாக்கிங் என்ன நினைத்திருப்பார்? எல்லா மனிதர்களையும் போல அப்படியே நொறுங்கித்தான் போனார். ஆனால், மனிதர்கள் இரண்டு வகைப்படுவார்கள். அதீதமான அழுத்தத்தில் ஒன்று மடிந்து போவார்கள், இல்லையென்றால் திமிறி, வெடித்தெழுவார்கள். ஸ்டீவன் இரண்டாவது ரகம்.
கருந்துளை கருப்பா?
கருந்துளைக்குள் போன எதுவும் வெளியில் வர முடியாது என்ற கருத்தாக்கம்தான் அப்போது பரவலாக நிலவியது. கருந்துளைகளிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசிய ஆரம்பித்து இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும் என்று ஹாக்கிங் கண்டறிந்தார். அது மட்டுமல்லாமல், பரவலாக நம்பப்படுவதுபோலல்லாமல் கருந்துளைகள் உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது கண்டுபிடிப்பை 'நேச்சர்' இதழில் 'கருந்துளை வெடிப்புகள். என்ற தலைப்பில் 1974ல் கட்டுரையாக எழுதினார் ஹாக்கிங். அவருடைய கண்டுபிடிப்பு 'ஹாக்கிங் கதிர்வீச்சு' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
கருந்துளைகளை அதுவரை இந்தப் பிரபஞ்சத்தின் தனித்தீவாகத்தான் அறிவியலாளர்கள் பார்த்தார்கள். ஆனால், "கருந்துளை என்பது, சூழ்ந்துள்ள பிரபஞ்சத்திலிருந்து தன்னைத் தனியாகத் துண்டித்துக்கொண்ட பொருள் அல்ல என்பதை 'ஹாக்கிங் கதிர்வீச்சு காட்டுகிறது. இதுதான் மிகவும் முக்கியமான விஷயம்” என்றார் ஹாக்கிங். ஒரு வகையில் தாவோயிஸம் கூறும் பிரபஞ்ச ஒருமையை நிலைநாட்டுகிறது கருந்துளையைப் பற்றிய ஹாக்கிங்கின் கருத்து. கருந்துளைக்கு நிகழ்வதைப் பிரபஞ்சத்துக்கும் பொருத்திப்பார்க்கிறார் ஹாக்கிங். திரைப்படத்தைப் பின்னோக்கி ஓட்டிப்பார்ப்பதைப் போல் பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பின்னோட்டிப் பார்த்தால் ஒரு கட்டத்தில் பெருவெடிப்பு (அதாவது, பிரபஞ்சத்தின் தொடக்கம் வரும்; பெருவெடிப்பே ஒருமைநிலையிலிருந்துதான் (சிங்குலாரிட்டி) தொடங்குகிறது . என்றார் ஹாக்கிங்.
பிரபஞ்ச வரலாற்றைப் பூமி போன்று கோள வடிவில் ஹாக்கிங் கற்பனை செய்தார். பிரபஞ்சத்தின் காலத்தை பூமியின் அட்சக்கோடாக உருவகித்துக்கொண்டால் காலம் வடதுருவத்தின் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்கிறது. 'பெருவெடிப்புக்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்று கேட்பவர்களுக்கு ஹாக்கிங்கின் பதில் இது: "வட துருவத்துக்கு வடக்கே என்ன என்று கேட்பது போல்தான் இது. பெருவெடிப்புக்கு முன்பு இடமும் இல்லை , காலமும் இல்லை.”
அந்த ஒற்றை மந்திரம்
இயற்பியலாளர்கள் தேடிக்கொண்டிருக்கும் 'புனிதக் கோப்பை என்று ஒரு விஷயம் உண்டு. இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து விஷயங்களையும் விளக்கிவிடும் ஒற்றைக் கோட்பாடுதான் அது. 'அனைத்தையும் பற்றிய கோட்பாடு (எ தியரி ஆஃப் எவரிதிங்) என்று அது அழைக்கப்படுகிறது. முரண்பட்டு முறுக்கிக்கொண்டிருக்கும் ஈர்ப்புவிசையையும் குவாண்டம் கோட்பாட்டையும் பிணைத்து ஒரே கோட்பாடாக ஆக்கி ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அதன் மூலம் விளக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஐன்ஸ்டைன் காலத்திலிருந்து பலரும் முயன்று கொண்டிருந்தார்கள். அந்த முயற்சியில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் இருந்த ஹாக்கிங்கைக் காலம் ஏமாற்றிவிட்டது.
அதிநவீனத் தொழில்நுட்பம், செயற்கை அறிவு போன்றவற்றின் காலத்தில் மனிதக் கற்பனையின் உன்னதத்தை நிரூபித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஹாக்கிங். இவற்றோடு ஹாக்கிங்கின் முக்கியமான பங்களிப்பொன்று உண்டு. அவரது 'காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு' நூலின் மூலம் கருந்துளை, பெருவெடிப்பு போன்ற விஷயங்களைப் பொதுமக்கள் பரப்புக்குக் கொண்டுவந்தது. ஹாக்கிங் பிரபலமாக ஆனதற்கு அவரது வாழ்க்கையும் ஒரு காரணம்; சக்கர நாற்காலியில் ஒரு பக்கம் தலையைச் சாய்த்தபடி நம் மனக்கண்ணில் தோன்றும் அவரது உருவமும் ஒரு காரணம். இவை அனைத்துக்காகவும்தான் நாம் என்றென்றும் ஹாக்கிங்கைக் கொண்டாட வேண்டும்!
ஆசை
நன்றி: காமதேனு