மாநில சுயாட்சி - முரசொலி மாறன்
திராவிட நாடு கொள்கையை ஒத்திவைத்தபிறகு திமுக முன்னெடுத்த முக்கியமான கொள்கை முழக்கம், மாநில சுயாட்சி. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எழுபதுகளின் தொடக்கத்தில் மாநில சுயாட்சி கோஷத்தை உரக்க ஒலித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற புதிய கோஷம் தமிழகம் முழுக்க ஒலித்தது. அது, டெல்லியிலும் எதிரொலித்தது.
அப்போது மத்திய, மாநில உறவுகள், மத்திய அரசின் அதிகாரங்கள், மாநில அரசுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முரசொலி மாறன் எழுதிய நூலே இந்த மாநில சுயாட்சி. இது நான்கு பாகங்களைக் கொண்டது. கூட்டாட்சிக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி முதல் பாகமும், இந்தியாவில் கூட்டாட்சிமுறையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டாம் பாகமும், இன்றைய அரசியலமைப்புச் சட்டம் பற்றி மூன்றாம் பாகமும், எதற்காக மாநில சுயாட்சி கோரப்படுகிறது என்பது பற்றி நான்காம் பாகமும் விவரிக்கின்றன.
மாநில சுயாட்சி என்பது இந்தியாவைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குத் தூக்கப்படும் கொடுவாள் என்றும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு எதிராக வைக்கப்படும் வேட்டு என்றும் தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வோர் அல்லது பிறரைக் குழப்ப முனைவோர் ஆகிய இரு சாராருக்கும் அளிக்கப்பட்டுள்ள விரிவான விடைதான் மாறன் எழுதிய இந்த விளக்க நூல் என்று புத்தகத்துக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.
பிரிவினையை முற்றிலும் ஒருமித்த முடிவாகக் கைவிட்டபிறகு; அந்த லட்சியங்களை – அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முறையில், இந்திய ஒற்றுமைக்குச் சிறிதும் குந்தகம் ஏற்படாத வகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தி, அடைவதற்கு; திமுக பின்னர் ஏற்றுக்கொண்ட மார்க்கம்தான் மாநில சுயாட்சி என்கிறார் முரசொலி மாறன்.
மத்திய, மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் பரவலாகக் கிளம்பியுள்ள இந்தச் சூழ்நிலையில், மாநில சுயாட்சி நூலை மறுபதிப்பாக சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியக் கூட்டாட்சி முறை குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
நன்றி: ஆர்.முத்துக்குமார் (Facebook)
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - என் உரை
மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - டாக்டர் கலைஞர் அணிந்துரை
மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - நாவலர் அணிந்துரை
மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - பேராசிரியர் அணிந்துரை