மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - என் உரை
வெகுநாள் வேட்கையின் விளைவு இரண்டாண்டு கால உழைப்பிற்குப் பின்னர் இன்று உங்கள் கரங்களில் இப்படிப் புத்தகமாக மலர்ந்திருக்கிறது.
மாநில சுயாட்சிக் கோரிக்கை மட்டுமல்லாது, இன்றைய மத்திய-மாநில உறவுகளின் பல கூறுகளும் இதில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
அரசியல் அமைப்புச் சட்டம் நாவல் போலப் படிப்பதற்குச் சுவையாக இருக்க முடியாது. அதிலும், உலகத்தில் இதுவரை எழுதப்பட்ட அரசியல் சட்டங்களிலேயே மிகவும் பெரியது, நம்முடையது. எனவே அதைப் பற்றிய அம்சங்களை ஆராய்வதும் ஒரு விறுவிறுப்பான நாவல் போல அமைவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பிரச்சினையோ அரசியல் அமைப்புச் சட்டத்தை மையமாகக் கொண்டது.
எனவே, அதன் சகல அம்சங்களையும் புரிந்துகொண்டால்தான் நமது விவாதத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டுமல்ல, அறிவார்ந்த
வகையிலும் அணுக முடியும். அந்த நோக்கத்தோடு எழுதப்பட்ட இப்புத்தகத்தைத் தொடர்ந்து ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக்கத் தவறியிருந்தால் அதற்கு உங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன்.
இதில் கூறப்பட்டிருக்கிற அனைத்தும் எனது கண்டுபிடிப்புகள் அல்ல; இதுவரை பல அறிஞர் பெருமக்கள் உதிர்த்திருக்கிற முத்தான கருத்துக்கள் நமது வாதத்திற்கு வலுவேற்றும் வகையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற புத்தகத்திற்கு மூலதனமே அத்தகைய ஆதாரங்களைத் தேடித் திரட்டுவதுதான்! அதற்குத்தான் அதிக காலம் ஆயிற்று.
இந்தத் தலைப்பில் கூறப்பட வேண்டியதெல்லாம் இவ்வளவு தானா? என்று கேட்டு விடாதீர்கள். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' - என்னும் தமிழுரைக்கேற்ப, எனக்குத் தெரிந்ததை என் அருமைத் தோழர்களுக்கும் தெரிவிக்க முயன்றிருக்கிறேன்; அவ்வளவுதான்! இதுகுறித்து நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் நிறைய இருக்கின்றன. சில கருத்துக்களைச் சாமான்யர்களாகிய நாம் சொன்னால், நாம் சொல்வது சாமான்யமாகக் கருதப்படுவது நம் கழகத்திற்கேற் பட்டிருக்கிற துர்ப்பாக்கிய நிலையாகும். 'இப்படி ஒரு பெரியவர் - உங்களால் மதிக்கப்படுகிறவர் - சொல்லியிருக்கிறார்' என்றால் அதை ஊன்றிக் கவனிக்க மாட்டார்களா, என்கிற ஆசை காரணமாக, பலரது மேற்கோள்களை எடுத்துக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வாசகர்களின் கவனத்தைக் கீழே இழுக்கும் அடிக் குறிப்புகள் இந்நூலில் பெருகியிருக்கின்றன. சில கருத்துக்கள் அடிக்கடி திரும்பச் சொல்லப்பட்டிருந்தால் அதற்குக் காரணம் அதை நன்கு வலியுறுத்த வேண்டுமென்கிற நோக்கம்தான்.
குவிந்துகிடக்கிற தமது பணிகளுக்கிடையே அவ்வப்போது கலைஞர் அவர்கள் என் ஐயங்களைத் தீர்த்து, கருத்து விளக்கமளித்து உதவியிருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகும் இதில் ஏதாவது பொருந்தாதவைகளும், பிழைகளுமிருந்தால் அதற்கு நானே பொறுப்பு.
இராஜ மன்னார் குழுவினரின் அறிக்கையைக் கழக லட்சியத்திற்கேற்ப அணுகி, அறிக்கை தரும் குழுவில் தி.மு.கழகம் என்னையும் ஒரு அமைப்பாளராக நியமித்ததன் மூலம் - கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களோடும், பொதுச் செயலாளர்
டாக்டர் நாவலர் அவர்களோடும், பிற அமைச்சர்களோடும் அவ்வப்போது விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த மகத்தான பெருமையையும், வாய்ப்பினையும் நல்கிய தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும், பொதுச் செயலாளர் அவர்களுக்கும், பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்காவிடில் நான் கடமை தவறியவனாவேன்.
இந்நூலில், இனி இணைக்கப்பட வேண்டியவையும், விளக்கப்பட வேண்டியவையும், திருத்தப்பட வேண்டியவையும் இருந்தால் - தயவு செய்து தோழர்கள் அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அடுத்த பதிப்புகளில் அவற்றை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி என்னைப் பெருமைப்படுத்திய கழகத் தலைவரும், எனக்கு அகரம் கற்றுக்கொடுத்து ஆளாக்கியவரும் என் ஆசானுமாகிய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் டாக்டர் நாவலர் அவர்களுக்கும், மாண்புமிகு பேராசிரியர் அவர்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
குறித்த நேரத்தில் இப்புத்தகம் அழகுடன் வெளிவர பகலிரவு பாராது அரும்பாடு பட்டார் 'முரசொலி' நிர்வாகி திரு பெரியண்ணன். மிகவும் பொறுப்புடன் பிழைதிருத்தி உதவினார் திரு. க. பா. முத்தையன். அயராது பணியாற்றி அச்சிட்டு உதவினர் முரசொலி அச்சகத் தொழிலாளத் தோழர்கள். அனைவருக்கும் எனது நன்றி.
சென்னை 28.01.74
அன்பன்,
முரசொலி மாறன்