கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் - பதிப்புரை
பதிப்புரை
அறிவுலகின் கதவுகளை அகலத் திறக்கும் முயற்சியில் எங்களின் பங்களிப்பாக அண்மையில் தொடங்கப்பெற்றுள்ள கருஞ்சட்டைப் பதிப்பகம் ஒருசேர "நான்கு நூல்களைக் கொண்டு வருகிறது. அவற்றுள் ஒன்றே இந்நூல்.
இந்நூலை எழுதியுள்ள மனநல மருத்துவர் ஷாலினி, கடந்த 20 ஆண்டுகளாக அத்துறையில் பணியாற்றி வருகின்றார். மனித மனங்களின் இயல்பை நன்கறிந்தவர். உலகிலேயே மிக மிக வியத்தகு பொருள் ஒன்று உண்டென்றால் அது மனித மனம்தான் என்கிறார் ஷாலினி. அதனையொட்டியே இந்நூலையும் எழுதியுள்ளார்.
இலக்கண, இலக்கிய நூல்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை சார்ந்த நூல்களும் வெளிவருவதுதான் ஒரு மொழிக்குச் சிறப்பாகும். அவ்வகையில் இன்று தமிழில் நூல்கள் வெளிவராத துறைகளே இல்லை எனலாம். இருப்பினும், மருத்துவம், அறிவியல் துறை சார்ந்த நூல்கள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் புரிந்துவிடாது. புரிய வைப்பதே நூலாசிரியரின் கடமையும், பெருமையும் ஆகும்.
அரிய அறிவியல் செய்திகளை எளிய நடையில், மக்கள் மொழியில் தந்திருப்பது இந்நூலின் குறிக்கத்தக்க நயங்களில் ஒன்று. உயிருடையன, உயிரற்றன என்ற பகுப்புக்கு எது அடிப்படை என்பதை விளக்கமாக, யார் ஒருவருக்கும் புரியும்படியாக இந்நூல் ஆசிரியர் எழுதிச் செல்கின்றார்.
றுதியாக உள்ள இரண்டு இயல்களில் மருத்துவர் ஷாலினி முன்வைத்துள்ள கருத்துகளில் சில விவாதப் பொருள்களும் உள்ளன. விவாதங்களை உருவாக்குவதும் புத்தகப் போக்குகளில் ஒன்றுதானே! படியுங்கள், விவாதியுங்கள்!
பெரியாரியச் சிந்தனையாளரும், பகுத்தறிவாளருமான இந்நூலாசிரியர், இதற்கு முன் 11 நூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார். இது அவரது 12 ஆவது நூல்
அறிவின் செறிவே அறியாமை போக்கும் மருந்து என்பதை நாம் அறிவோம். அப்படி ஒரு மருந்தாக அமைந்துள்ள இந்நூலினை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். அறிவுமிகு தமிழ்ச் சமூகம் இந்நூலை வாழ்த்தி வரவேற்கும் என நம்புகின்றோம்!
- 'பெல்' ராஜன்,
இயக்குனர்,
கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் - அணிந்துரை